Last Updated : 21 May, 2018 10:04 AM

 

Published : 21 May 2018 10:04 AM
Last Updated : 21 May 2018 10:04 AM

உயரும் எண்ணெய் விலை: தாக்குப்பிடிக்குமா இந்தியா?

டந்த வாரத்தில் கச்சா எண்ணெய் ஒரு பேரல் விலை 80 டாலரைத் தொட்டிருக்கிறது. இது இன்னமும் அதிகரித்து 90 டாலரைத் தொடும் என்கிறது மார்கன் ஸ்டான்லி நிறுவனம். பேங்க் ஆஃப் அமெரிக்கா மெரில் லிஞ்ச், இதற்கும் ஒருபடி மேலே சென்று ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை 100 டாலரைத் தொடும் வாய்ப்புகள் உள்ளதாகச் சொல்கிறது. மூன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு மிகப்பெரிய அளவில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளது. இதன் உடனடி பாதிப்புகள் இந்தியாவில் எதிரொலிக்கத் தொடங்கியுள்ளன. கர்நாடகத் தேர்தல் முடியும்வரை பொறுத்திருந்த பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் கடந்த வாரத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை உயர்த்தியுள்ளன. மேலும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை லிட்டருக்கு 4 ரூபாய் வரை அதிகரிக்கலாம் என கூறப்படுகிறது. பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயரும் வாய்ப்புள்ளதால் கைவசமுள்ள பணத்தை அதிக அளவில் செலவழிக்கும் நிலைக்கு இந்தியர்கள் தள்ளப்படலாம். இதனால் மக்களின் வாங்கும் திறன் குறைந்து பண வீக்கம் ஏற்படும் வாய்ப்புகள் உருவாகியுள்ளன.

கச்சா எண்ணெய்யை அதிக அளவில் இறக்குமதி செய்யும் நாடுகளில் மூன்றாவது இடத்தில் இந்தியா இருக்கிறது. இந்த விலை உயர்வினால் கச்சா எண்ணெயை தேவையான அளவு இறக்குமதி செய்ய அதிக அளவுத் தொகையை செலவழிக்க வேண்டிய நிலைக்கு இந்தியா தள்ளப்பட்டுள்ளது. இதனால் இந்தியாவின் நடப்புக் கணக்கில் பற்றாக்குறை ஏற்படும் வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளன. ஏற்கெனவே கடந்த ஏப்ரல் மாதத்தில் அதற்கு முந்தைய மூன்று மாதங்களை விடவும் அதிக அளவில் நடப்புக் கணக்குப் பற்றாக்குறை அதிகரித்துள்ளது. பண வீக்கம், நடப்புக் கணக்குப் பற்றாக்குறை போன்றவை அதிகரிக்கும் என்ற அச்சத்தால் இந்திய பங்குச் சந்தைகள் சில தினங்களாக தொடர்ச்சியாக சரிவை சந்தித்து வருகின்றன.

என்ன காரணம்?

உலக அரசியல் அரங்கில் நடக்கும் பல்வேறு உள் விளையாட்டுகள் கச்சா எண்ணெய் விலை உயர்வுக்கான காரணங்களாக உள்ளன. இருப்பினும் உலக பொருளாதாரத்தை பாதிக்கும் நடவடிக்கைகளை எடுப்பதில் ட்ரம்புக்கு நிகர் அவரேதான் என்பதால், ஈரான் உடனான அணு ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகுவதாக அறிவித்துள்ளது கச்சா எண்ணெய் விலை உயர்வுக்கான முதன்மைக் காரணமாக உள்ளது. ஈரான் ஒரு நாளைக்கு 24 லட்சம் பேரல் கச்சா எண்ணெயை ஏற்றுமதி செய்கிறது. ஈரான் மீது அமெரிக்கா கடுமையான பொருளாதார தடைகளை விதிக்கும் என ட்ரம்ப் அறிவித்திருக்கிறார். இதனால் ஈரானிடமிருந்து கச்சா எண்ணெயை பிற நாடுகள் டாலரைக் கொடுத்து வாங்குவது தடைபடும், ஈரானின் கச்சா எண்ணெய் உற்பத்தி முன்பைவிடக் குறையும் என்பதால் கச்சா எண்ணெய்க்கான தேவை அதிகரித்துள்ளது. தேவை அதிகரிப்பின் விளைவாக விலையும் அதிகரித்துள்ளது.

வெனிசுலாவுக்கும் தடை

ஒரு காலத்தில் கச்சா எண்ணெய் ஏற்றுமதி மூலம் தென் அமெரிக்காவின் பணக்கார நாடுகளில் ஒன்றாக திகழ்ந்த வெனிசுலா இன்று இருக்கும் நிலை கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பதற்கான முக்கிய காரணங்களில் ஒன்று. முன்னாள் பிரதமரான சாவேஸ் மற்றும் இப்போதைய பிரதமரான நிக்கோலஸ் மாட்யூரோ இருவரும் சந்தை பொருளாதாரத்துக்கு எதிரானவர்கள். இதன் காரணமாக லாபம் கிடைக்கும் வகையில் பொருட்களை விற்கக்கூடாது, வெளிநாட்டு நிறுவனங்களை அனுமதிக்கக்கூடாது போன்ற பல்வேறு கொள்கைகள் வெனிசுலாவில் அறிமுகப்படுத்தப்பட்டன. இதன் விளைவாக பண வீக்கம் 1000 சதவீதத்துக்கு மேல் அதிகரித்து 90 சதவீதத்துக்கும் மேலான வெனிசுலா மக்கள் உண்ண உணவில்லாமல் வாழ்ந்து வருகிறார்கள். வேலை வாய்ப்பின்மை, குற்றச் செயல்கள் அதிகரிப்பு, மருத்துவ வசதி இன்மை போன்றவையும் வெனிசுலாவில் நிலவி வருகிறது. அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன், கனடா போன்ற நாடுகள் வெனிசுலாவின் மீது பல்வேறு தடைகளை விதித்ததும் இந்த நிலை ஏற்படுவதற்கான காரணங்களில் ஒன்று என்பதை மறுப்பதற்கில்லை. இதனைத் தொடர்ந்து வெனிசுலாவின் கச்சா எண்ணெய் உற்பத்தி தொடர்ச்சியாக குறைந்து வருகிறது. 2013-ம் ஆண்டை விட 50 சதவீதம் குறைவாக இப்போது உற்பத்தி செய்து வருகிறது. இது மேலும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. வெனிசுலாவின் அதிபர் தேர்தல் நேற்று நடந்திருக்கும் நிலையில் நிக்கோலஸ் மாட்யூரோ வெற்றிபெறுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. ஏனெனில் பெரும்பாலான தலைவர்கள் சிறைப்படுத்தப்பட்டிருக்கும் நிலையில் அனைத்து கட்சிகளும் தேர்தலை புறக்கணித்துள்ளன. இது போதாதென்று இந்தத் தேர்தல் முடிந்ததும் வெனிசுலாவின் கச்சா எண்ணெய்க்கு அமெரிக்கா தடை விதிக்கப் போவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இதனைத் தொடர்ந்து கச்சா எண்ணெய் விலை ஒரு பேரல் 100 டாலரைத் தொடும் என கூறப்படுகிறது.

ரஷ்யா- ஒபெக் கூட்டணி

கச்சா எண்ணெய் உற்பத்தி மற்றும் தேவையை சரியாக நிர்வகிக்கும் பொருட்டு 2018-ம் ஆண்டு மார்ச் வரை முன்பைவிடக் குறைவான அளவில்தான் கச்சா எண்ணெய் உற்பத்தி செய்வோம் என ரஷ்யாவும், ஒபெக் நாடுகளும் 2017-ம் ஆண்டு ஜனவரியில் முடிவு செய்தன. ஆனால் 2017-ம் ஆண்டு நவம்பரில் கூடிய இந்த நாடுகள் 2018-ம் ஆண்டு இறுதிவரை கச்சா எண்ணெய் உற்பத்தியை முன்பைவிடக் குறைப்பதாக முடிவெடுத்துள்ளன. இதனாலும் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

இதுதவிர ஈரான் மற்றும் சவுதி அரேபியா இடையேயான மோதலால் ஏற்பட்டுள்ள பதட்டமும் கச்சா எண்ணெய் விலையில் பிரதிபலித்து வருகிறது. ஈரான் மீது அமெரிக்கா பொருளாதார தடை விதிப்பதன் மூலம் கச்சா எண்ணெய் ஏற்றுமதியில் ஏற்படும் வெற்றிடத்தை நாங்கள் நிரப்புவோம் என சவுதி அரேபியா கூறியிருப்பதையும் இதனோடு பொருத்திப் பார்க்கலாம்.

என்ன செய்யப் போகிறது அரசு?

நரேந்திர மோடி ஆட்சிக்கு வந்ததில் இருந்து கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து சரிந்து வந்தது. இதனை அரசு தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டது. கச்சா எண்ணெய் விலை பேரல் 40 டாலர் அளவுக்கு குறைந்த நிலையிலும், பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் செய்யாமல் சுங்க வரியை உயர்த்தி விலையை கட்டுக்குள் வைத்தது அரசு. கடந்த பிப்ரவரியில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் பெட்ரோல் மற்றும் டீசலுக்கான சுங்க வரி இரண்டு ரூபாய் குறைக்கப்பட்டது, ஆனால் சாலை வரி என்ற பெயரில் புதிதாக 8 ரூபாய் வரியாக சேர்க்கப்பட்டதால் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் ஏற்படவில்லை. இந்த நிலையில் பெட்ரோலுக்கான சுங்க வரி மற்றும் சாலை வரி போன்றவற்றைக் குறைப்பதுதான் அரசின் முன் இப்போதுள்ள ஒரே தீர்வு. ஆனால் நிதிப் பற்றாக்குறை ஏற்படும் வாய்ப்புள்ளதால் இதனை அரசு செய்வதற்கான சாத்தியக்கூறுகள் குறைவாக உள்ளன.

பெட்ரோலை ஜிஎஸ்டி வரி நடைமுறைக்குள் கொண்டுவருவதென்பது சாத்தியமில்லாத ஒன்றாகவே இருக்கிறது. பெட்ரோல், மதுபானம் போன்றவற்றிற்கு விதிக்கப்படும் விற்பனை வரியின் மூலம் மாநில அரசாங்கங்களுக்கு மிகப்பெரிய அளவில் வருவாய் கிடைக்கிறது. ஒவ்வொரு மாநிலத்திலும் இந்த விற்பனை வரி ஒவ்வொரு விதமாக இருக்கிறது. பெட்ரோலுக்கு மஹாராஷ்டிராவில் 40 சதவீத விற்பனை வரியும், அந்தமானில் 6 சதவீத வரியும் விதிக்கப்படுகிறது. ஜிஎஸ்டி முறைப்படி மிக அதிகபட்ச வரியான 28 சதவீத வரி பெட்ரோலுக்கு விதிக்கப்பட்டால் 40 சதவீத வரி வசூலிக்கிற மஹாராஷ்டிராவுக்கு அது மிகப்பெரிய இழப்பாக மாறும். வெறும் 6 சதவீதம் வரி வசூலிக்கிற அந்தமானுக்கு 28 சதவீத வரி விதிக்கப்பட்டால் பெட்ரோல் விலை மிக அதிக அளவில் உயரும். இந்த இக்கட்டான நிலையில் இப்போதைய அரசோ அல்லது இனிவரும் அரசுகளோ மாநில அரசுகளை பகைத்துக்கொண்டு பெட்ரோல் மற்றும் டீசலை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டுவருவது கடினம்தான். தேர்தலுக்கு ஒரு ஆண்டுக்கும் குறைவான நாட்களே இருக்கும் நிலையில் பாரதிய ஜனதா அரசாங்கம் கச்சா எண்ணெய் விலை உயர்வு மூலம் மிகப்பெரிய இக்கட்டில் சிக்கியுள்ளது.

நீண்டகால தீர்வுகளாக தனிநபர் போக்குவரத்தைக் குறைத்து அரசு போக்குவரத்து சேவையை அதிகரிப்பதற்கான முயற்சிகளை எடுக்கலாம். 2030-ம் ஆண்டுக்குள் எலெட்ரிக் வாகனப் பயன்பாட்டை அதிகரிக்கும் முயற்சியில் அரசு கவனம் செலுத்தி வருகிறது. இந்தத் திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்படுமேயானால் பெட்ரோல் மற்றும் டீசலில் இயங்கும் வாகனங்களுக்கு மாற்றாக இவை அமையும் எனலாம். எப்படி இருப்பினும் தீர்ந்துபோகும் ஆற்றல் மூலங்களை பயன்படுத்துவதில் மனிதர்கள் மிகவும் கவனமுடன் இருக்கவேண்டியது காலத்தின் கட்டாயம் ஆகியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x