Last Updated : 11 Jun, 2018 11:31 AM

 

Published : 11 Jun 2018 11:31 AM
Last Updated : 11 Jun 2018 11:31 AM

வேப்பங்காயாக மாறிய சர்க்கரை!

ஒன்றை சார்ந்து இன்னொன்று இயங்கும் வகையில் அல்லது ஒருவரைச் சார்ந்து இன்னொருவர் இயங்கும் வகையில் சார்பியல் அமைப்பாக நமது சமூகம் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. ஒட்டுமொத்த தனித்த நிலைமை என்பது இங்கு சாத்தியம் இல்லாத ஒன்று. சார்ந்தியங்குவது தடைபடும்போது மேற்கொண்டு எதுவும் செய்ய இயலாத ஒட்டுமொத்த முடக்கம் ஏற்படுகிறது. ஆங்கிலத்தில் இதனை `டெட்லாக்’ என்று சொல்கிறார்கள்.

இந்திய சர்க்கரை துறைக்கு ஏற்பட்டிருக்கிற தற்போதைய நிலையை அத்தகையதொரு டெட்லாக் என்று சொல்லலாம். சர்க்கரை ஆலைகளுக்கும், கரும்பு விவசாயிகளுக்கும் இடையேயான சார்ந்தியங்கும் தன்மை பாதிக்கப்பட்டதால் இந்தப் பிரச்சினை இந்த நிலையை எட்டியிருக்கிறது. இந்த நிலையிலிருந்து சர்க்கரைத் துறையை மீட்டெடுக்கும் பொருட்டு ஜூன்-6 அன்று ரூ.8,000 கோடி ஒதுக்கீடு செய்திருக்கிறது அரசு. ஆனால் இதனால் விவசாயிகளுக்கோ, கரும்பு ஆலைகளுக்கோ முழுமையான பலன் உண்டா என்பது விவாதத்துக்குரியது.

என்ன பிரச்சினை?

இந்தியாவின் வருடாந்திர சராசரி சர்க்கரை தேவை 2.5 கோடி டன்னாக இருக்கிறது. ஆனால் 2017-2018 சாகுபடி காலத்தில் இந்தியாவின் சர்க்கரை உற்பத்தி 3.15 கோடி டன்னாக இருந்தது. விவசாயிகள் அதிக அளவில் கரும்பு சாகுபடி செய்தார்கள். இது சர்க்கரை ஆலைகளுக்கு அனுப்பப்பட்டது. ஆனால் தேவையை விட அதிக அளவில் ஒரு பொருளை தயாரிக்கும்பொழுது, அந்தப் பொருள் எளிதாக கிடைத்து விடுகிறது. அதனால் அதிக விலை கொடுத்து மக்கள் அதனை வாங்கமாட்டார்கள். எனவே தேவைக்கு அதிகமாக உற்பத்தி செய்யப்பட்டதால் சர்க்கரையின் விலை குறைய ஆரம்பித்தது.

இதனால் விவசாயிகளிடம் இருந்து கரும்பை வாங்கிய சர்க்கரை ஆலைகளுக்கு நஷ்டம் ஏற்பட்டது. பொதுவாக விவசாயிகளிடம் இருந்து வாங்கிய கரும்புக்கான தொகையை 14 நாட்களுக்குப் பிறகுதான் சர்க்கரை ஆலைகள் கொடுப்பதாகத் தெரிகிறது. ஆனால் நஷ்டம் ஏற்பட்டதன் காரணமாக சர்க்கரை ஆலைகள் விவசாயிகளுக்கு கொடுக்கவேண்டிய பணத்தை குறிப்பிட்ட நாட்களுக்குப் பிறகும் கொடுக்கவில்லை. இப்போது சர்க்கரை ஆலைகள், கரும்பு விவசாயிகளுக்கு கொடுக்கவேண்டிய நிலுவைத் தொகை ரூ.22,000 கோடியாக உள்ளது. இது இந்த சாகுபடி ஆண்டின் இறுதிக்குள் ரூ.25,000 கோடியை எட்டும் என்று சொல்லப்படுகிறது.

அரசு நடவடிக்கைகள்

இந்த சிக்கலுக்கு முடிவு காணும் வகையில் விவசாயிகள் மற்றும் சர்க்கரை ஆலைகளுக்கு உதவும் வகையிலான பல்வேறு அறிவிப்புகளுடன் மொத்தமாக ரூ.8,000 கோடியை ஒதுக்கியிருக்கிறது அரசு. முதலாவதாக சர்க்கரை ஆலைகளிடமுள்ள உபரி இருப்பை அரசே வாங்கி சேமிக்கும் வகையில் 30 லட்சம் டன் கொள்ளளவு கொண்ட சேமிப்பகத்தை அரசு அமைக்க இருக்கிறது. உபரிக்கான பணத்தை விவசாயிகளிடம் நேரடியாக அரசு அளித்துவிடும் என்று கூறப்படுகிறது. சர்க்கரை வழியாக ஏற்பட்ட நஷ்டத்தை, எத்தனால் வழியாக ஈடுகட்டும் பொருட்டு, எத்தனால் பிரித்தெடுக்கும் உபகரணங்களை வாங்க மொத்தமாக ரூ.4,440 கோடி கடனை சர்க்கரை ஆலைகளுக்கு வழங்க இருக்கிறது அரசு.

அதுமட்டும் அல்லாமல் இந்தக் கடனுக்கான முதல் 5 ஆண்டு வட்டியான ரூ.1,332 கோடியை அரசே செலுத்த இருக்கிறது. சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரைக்கான குறைந்தபட்ச ஆலை கொள்முதல் விற்பனை விலையை கிலோவுக்கு ரூ.29-ஆகவும் உயர்த்தி அறிவித்திருக்கிறது. குறிப்பிட்ட அளவுக்கு மேல் சர்க்கரையை இருப்பு வைக்கக் கூடாது எனவும் சர்க்கரை ஆலைகளுக்கு உத்தரவிட்டிருக்கிறது.

நாட்டில் மிக அதிக அளவு சர்க்கரை உற்பத்தி செய்யப்படும் உத்திரபிரதேச மாநில இடைத் தேர்தலில் பாரதிய ஜனதா தோல்வியைத் தழுவியிருக்கும் நிலையில், நாடாளுமன்ற பொதுத் தேர்தலை மனதில்கொண்டு இந்த நடவடிக்கைகளை எடுக்கவேண்டிய கட்டாய தேவை அரசுக்கு ஏற்பட்டது. காரணம் என்னவாக இருந்தாலும் இந்த நடவடிக்கையின் மூலமும் இந்திய சர்க்கரை துறை பெரிய அளவில் மாற்றமடையாது என்பதே துறைசார் வல்லுநர்களின் கருத்தாக இருக்கிறது. ரூ.22,000 கோடி நிலுவைத் தொகையில் இந்த நடவடிக்கையின் மூலம் 40 சதவீதம் நிலுவைத் தொகை மட்டுமே விவசாயிகளுக்கு கிடைக்கும் என சொல்கிறது கிரிசில் அமைப்பின் சமீபத்திய ஆய்வு.

ஒரு கிலோ சர்க்கரை தயாரிப்பதற்கான உற்பத்தி விலை ஏறக்குறைய ரூ.35 என்ற அளவில் இருக்கும்போது ரூ.29-ஐ ஒரு கிலோவுக்கான குறைந்தபட்ச விற்பனை விலையாக நிர்ணயிப்பதால் எந்த பலனும் கிடைக்கப்போவதில்லை என்பது சர்க்கரை ஆலை உரிமையாளர்களின் கருத்து. உற்பத்தி விலையை விடக் குறைவாக, குறைந்தபட்ச விலை நிர்ணயிக்கப்பட்டிருக்கும் நிலையில், நஷ்டம் ஏற்படுவதை தவிர்க்க முடியாது என்பதால் விவசாயிகளின் நிலுவைத் தொகை முழுமையாக எப்படி திரும்பி வரும் என்ற கேள்வி எழுகிறது.

பொதுத்தேர்தலுக்குள் விவசாயிகளுக்கு வர வேண்டிய நிலுவைத் தொகையின் அளவை முன்பைவிட சிறிய அளவில் குறைப்பது, அதேவேளையில் சர்க்கரை சில்லறை விலையை கட்டுக்குள் வைத்திருப்பது என்று பொது மக்கள், விவசாயிகள் என இரு தரப்பினரையும் பகைத்துக்கொள்ளாமல் இருப்பதுதான் இப்போதைக்கு அரசின் உத்தேசமாக இருக்கும் என்று தோன்றுகிறது.

தமிழகத்தின் நிலை

உத்திரபிரதேசம், மஹாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் சர்க்கரை உற்பத்தி, தேவையை விட அதிகம் இருக்கும் நிலையில் தமிழகத்தில் தேவையான அளவு சர்க்கரை உற்பத்தியாவதில்லை என்கிறது தமிழக அரசு. இதுதொடர்பாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி , பிரதமர் நரேந்திரமோடிக்கு கடிதம் ஒன்றை எழுதியிருக்கிறார். இதில் உபரி சேமிப்பகம் அமைப்பது, எத்தனால் திட்டத்துக்கு நிதி ஒதுக்குவது, ரூ.29-ஐ குறைந்தபட்ச விற்பனை விலையாக நிர்ணயிப்பது போன்றவை கரும்பு விவசாயிகள் வறட்சியில் வாடும் தமிழகத்துக்கு பொருந்தாது, எனவே இந்தத் திட்டத்திலிருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்கவேண்டும் என கேட்டுக்கொண்டிருக்கிறார்.

தமிழக அரசின் அறிவிப்புப்படி மொத்த விற்பனை இருப்பு 2.7 லட்சம் மெட்ரிக் டன்னாகவும், விவசாயிகளுக்கு அளிக்கவேண்டிய நிலுவைத் தொகை ரூ.226.25 கோடியாகவும் உள்ளது. விவசாயிகளுக்கு அளிக்க வேண்டிய நிலுவைத் தொகையை, சர்க்கரை ஆலைகள் அதிக வட்டிக்கு கடன் வாங்கி அளிப்பதாக முதல்வர் கூறுகிறார்.

ஆனால் சர்க்கரை மட்டுமல்லாது வெல்லப் பாகு, கரும்பு சக்கை போன்ற பல்வேறு உப பொருட்கள் மூலமும் சர்க்கரை ஆலைகள் லாபம் ஈட்டி வரும் நிலையில் அவற்றால் இந்த நிலுவைத் தொகையை தர முடியவில்லை என்று சொல்வது நம்பக்கூடியதாக இல்லை என்கின்றன விவசாய அமைப்புகள். கரும்பை தவறாக எடையிடுவது தொடங்கி, குறைந்த தொகையை கரும்புக்கு தருவதுவரை பல்வேறு முறைகேடுகள் ஆலைகளில் நடைபெறுவதாகவும் கூறப்படுகிறது.

சிக்கல்கள்

கரும்பின் உற்பத்தி அதிகமாக இருக்கும் நிலையில் அவற்றை அதிக அளவில் ஏற்றுமதி செய்வது நல்ல திட்டமென்றாலும், துரதிர்ஷ்டவசமாக உலக அளவில் சர்க்கரை உற்பத்தி அதிக அளவில் இருப்பதால் சர்வதேச சந்தையில் சர்க்கரை விலை மிகக் குறைவாக உள்ளது. எனவே ஏற்றுமதி செய்வதிலும் பெரிய பயன்கள் இல்லாத சூழல் காணப்படுகிறது. முன்னதாக ஏற்றுமதி செய்வதற்கு இந்தியா மானியம் அளித்தபோது பிரேசில், ஆஸ்திரேலியா போன்ற நாடுகள் ஏற்கெனவே வீழ்ச்சியில் இருக்கும் சந்தையை இந்த மானியம் மேலும் மோசமாக்கிவிடும் என உலக வர்த்தக அமைப்பில் (டபிள்யூடிஓ) முறையிட்டன. பின்பு ஏற்றுமதி சலுகைகளை இந்தியா விலக்கிக் கொண்டது. எனவே இத்தகைய நடவடிக்கையை மீண்டும் எடுக்க அரசு தயங்கும்.

சுற்றுச்சூழல் மாசுபாடு மற்றும் கச்சா எண்ணெய் இறக்குமதியை குறைக்கும் வகையில் பெட்ரோலுடன் எத்தனால் கலக்கும் திட்டத்தை இந்தியா செயல்படுத்திவருகிறது. ஆனால் இதற்காக நிர்ணயித்துள்ள இலக்கை ஒரு ஆண்டில் கூட இந்தியா எட்டவில்லை.

மாநில அரசுகள் எத்தனால் மீது தங்கள் விருப்பத்துக்கேற்ப விதிக்கும் வரி மற்றும் மஹாராஷ்டிரா, உத்திரபிரதேசம் தவிர மற்ற மாநிலங்களில் எத்தனால் தயாரிப்பு குறைவாக இருப்பது, எத்தனாலுக்கு போதிய அளவு விலை கிடைக்காதது போன்றவை இதற்கான காரணங்களாக கூறப்படுகிறது. பெட்ரோல் விலை உயர்ந்துவரும் நிலையில் இது மறைமுக பாதிப்புகளை ஏற்படுத்தலாம். எத்தனால் பிரித்தெடுப்பு அமைப்புகளுக்கு அரசு கடன் வழங்குவது இந்த வகையில் முக்கியத்துவம் பெறுகிறது.

என்ன தீர்வு?

கரும்புக்கான தொகை பிறகு கிடைத்தாலும் பரவாயில்லை, மற்ற பயிர்களைவிட இது அதிக லாபம் தருவதால் இதனைத் தொடர்ந்து பயிரிடுவோம் என்பது கரும்பை அதிகம் உற்பத்தி செய்யும் உத்திரபிரதேச விவசாயிகளின் கருத்தாக இருக்கிறது. எனவே இந்திய அளவில் கரும்பு உற்பத்தி வரும் சாகுபடி ஆண்டிலும் அதிகரிக்கும் வாய்ப்பிருக்கிறது. கரும்பு உற்பத்தி தொடர்ந்து அதிகரிப்பதன் வழியாக குறைந்தபட்ச விற்பனை விலைக்குக் கூட சர்க்கரையை விற்க முடியாத நிலை ஏற்படும். இது நிலைமையை இன்னமும் மோசமாக்கும். உத்திரபிரதேசம், மஹாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் இருப்பு தீரும்வரை குறைந்த கால அளவுக்காவது கரும்பு உற்பத்தியை குறைப்பதற்கான நடவடிக்கைகளை அரசு எடுக்கவேண்டியது காலத்தின் கட்டாயமாகிறது.

கரும்புக்கான விலையை போகிற போக்கில் முடிவு செய்வதை கைவிட்டு சர்க்கரையின் விலைக்கு ஏற்ப நிர்ணயம் செய்யவேண்டிய கடமை அரசுக்கு இருக்கிறது. சர்க்கரையிலிருந்து கிடைக்கும் உப பொருட்களுக்கான லாபத்தில் விவசாயிகளுக்கு பங்கு அளிக்கப்படவேண்டும் என்பதும் கவனிக்கத்தக்க கோரிக்கையே. இருப்பு தீரும்வரை சர்க்கரைக்கு குறைந்தபட்ச விலை நிர்ணயம் செய்யாமல் சர்க்கரையை இயல்பாக விற்றுத் தீர்ப்பது, உற்பத்தியைக் குறைப்பது, உற்பத்தி குறைவின் காரணமாக விலை அதிகரிப்பது, விலையைக் குறைக்கும் வகையில் உற்பத்தியை சரியான அளவில் அதிகரிப்பது என்ற சுழற்சியின் மூலம் இந்த சிக்கலுக்கு தீர்வு காண முடியும் என்பது துறைசார் வல்லுநர்களின் கருத்து.

கரும்பு விவசாயிகளுக்கும், ஆலைகளுக்கும் இடையேயான உறவு முறையிலேயே பெரிய மாற்றங்கள் ஏற்பட வேண்டியிருக்கிறது. குறிப்பிட்ட பகுதியிலுள்ள விவசாயிகள் அருகிலுள்ள ஆலைகளுக்குத்தான் கரும்புகளை விற்க வேண்டும் என்ற அரசின் நடைமுறையே இத்தகைய நல்ல உறவுகளையோ, நம்பிக்கையையோ விவசாயிகளுக்கும், ஆலைகளுக்கும் இடையே ஏற்படாமல் தடுத்துவிடுகிறது. ஒப்பந்த அடிப்படையில் தேவைக்கேற்ற உற்பத்தி, பயிரிடும்போதே ஒப்பந்தம் செய்துகொண்ட ஆலையிடமிருந்து நிதி உதவி என இந்த உறவு மேம்படும்போது சர்க்கரைத் துறை வேறொரு பரிணாமத்தை அடையும்.

-

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x