Last Updated : 28 May, 2018 11:42 AM

 

Published : 28 May 2018 11:42 AM
Last Updated : 28 May 2018 11:42 AM

ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேறுகிறதா இத்தாலி?

நவீன காட்டுமிராண்டிகளின் கையில் தற்போது ரோம் இருக்கிறது’ என பைனான்ஸியல் டைம்ஸ் செய்தி வெளியிடும் அளவுக்கு இத்தாலியின் நிலைமை இருக்கிறது. ஐரோப்பிய யூனியனில் இருந்து இங்கிலாந்து வெளியேறுவதை விட பெரிய பிரச்சினை இத்தாலியால் உருவாகப் போகிறது என்பதுதான் நிதர்சனமான உண்மை.

கடந்த மார்ச் மாதம் இத்தாலியில் தேர்தல் நடந்தது. புதிய கூட்டணி அரசு பதவி ஏற்க இருக்கிறது. இந்த கட்சிகளின் தேர்தல் வாக்குறுதிகள் மற்றும் செயல்திட்டங்கள் ஐரோப்பிய யூனியனுக்கு அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

மார்ச் மாதம் நடந்த தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. பைவ் ஸ்டார் இயக்கம் 33 சதவீத ஓட்டுகளை வாங்கியது. லீக் கட்சி 17 சதவீத வாக்குகளை வாங்கியது. கடந்த பத்து வாரங்களாக இருந்த நிச்சயமற்ற சூழல் ஒரு வழியாக மே மாதம் இரண்டாம் வாரத்தில் முடிவடைந்தது. இரு கட்சிகள் இணைந்து ஆட்சி அமைக்க உரிமை கோரியிருக்கின்றன. இரு கட்சி தலைவர்களும் இணைந்து கிஸெபி கோன்ட் என்பவரை பிரதமராக்க முடிவு செய்துள்ளனர்.

சட்ட பேராசிரியரான இவருக்கு, அரசியல் அனுபவமும் கிடையாது என்பதுதான் ஹைலைட். புதிய அரசின் செயல் திட்டங்கள் குறித்த தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இவை ஐரோப்பிய யூனியனுக்கு கலவரமூட்டுவதாக உள்ளன.

இத்தாலியின் தற்போதைய நிலை?

சொல்லிக்கொள்ளும் அளவுக்குகெல்லாம் இத்தாலியின் நிலைமை பிரமாதமாக இல்லை. 20 ஆண்டுகளுக்கும் மேலாக மந்த நிலை. வேலை வாய்ப்பின்மை. 25வயது முதல் 29 வயதுக்குள் இருப்பவர்களில் மூன்றில் ஒருவருக்கு வேலை இல்லை. மேலும், அளவுக்கு அதிகமான கடன் ஜிடிபி-யில் 132 சதவீத அளவுக்கு இருக்கிறது (2.3 லட்சம் கோடி யூரோ). ஐரோப்பிய யூனியன் பிரதேசத்தில் கிரிஸூக்கு அடுத்து அதிக கடன் சுமையுள்ள நாடு இத்தாலி. தொடர்ந்து இதே நிலை நீடித்து வருவதால் விரக்தி அடைந்த மக்கள் சலுகைகளை அறிவிக்கும் கட்சிக்கு வாக்களித்து விட்டனர்.

கட்சிகள் அறிவித்திருக்கும் சலுகைகளை செயல்படுத்த ஆண்டுக்கு 10,000 கோடி யூரோ தேவைப்படும் எனத் தெரிகிறது. நாட்டின் வளர்ச்சிக்குத் தேவையான நடவடிக்கைகளை எடுப்பதோ அல்லது வேலை வாய்ப்பை உருவாக்குவதற்கான நடவடிக்கை எடுப்பதற்கு செலவு செய்யாமல், ஒட்டுமொத்த ஐரோப்பிய யூனியனையும் பிரச்சினைக்கு உள்ளாக்குவதற்காக இத்தாலி செலவு செய்ய இருப்பதாக விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன. இந்த சலுகைகள் காரணமாக இன்னும் ஐந்தாண்டுகளில் கடன் விகிதம் ஜிடிபி-யில் 150 சதவீதம் வரை அதிகரிக்கும் என பொருளாதார வல்லுநர்கள் கணித்திருக்கின்றனர்.

சலுகைகள் என்ன?

அரசின் வரைவு திட்டத்தில் மூன்று தேர்தல் வாக்குறுதிகள் பிரதானமாக இருக்கின்றன. ஏழை இத்தாலி மக்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு தொகையாக மாதம் 780 யூரோ வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆண்டுக்கு 1,500 கோடி யூரோ செலவாகும். வரியை குறைப்பது அடுத்த திட்டமாகும். இத்தாலியில் குறைந்தபட்சம் 23 சதவீதம் முதல் அதிகபட்சம் 43 சதவீதம் வரை வருமான வரி விதிக்கப்படுகிறது. ஐரோப்பிய யூனியனில் அதிக வரி விகிதமும் இங்குதான் விதிக்கப்படுகிறது.

இதனை 15% முதல் 20 சதவீதமாக குறைக்க திட்டமிடப்பட்டிருக்கிறது. வருமானத்தையும் குறைத்து செலவுகளையும் அதிகரிக்கும் இந்த முடிவுகளால் இத்தாலி பங்குச்சந்தைகள் சரியத் தொடங்கி இருக்கின்றன. அரசு கடன் பத்திரங்களின் மதிப்பும் குறைந்து வருகிறது. இதன் காரணமாக நாட்டின் கடனைக் குறைக்க, ஐரோப்பிய மத்திய வங்கி 25,000 கோடி யூரோவை தள்ளுபடி செய்ய வேண்டும் என அரசு வரைவு திட்டத்தில் கோரப்பட்டிருக்கிறது.

அடிப்படைக் காரணம் என்ன?

சலுகைகளை வழங்கும் அரசுக்கு ஆதரவாக மக்கள் வாக்களிப்பதற்கும் காரணங்கள் சொல்லப்படுகிறது. ஆரம்பத்தில் ஐரோப்பிய யூனியனில் ஆர்வமாக இருந்த நாடு இத்தாலி. ஆனால் தற்போது ஐரோப்பிய யூனியன் மீது மிகுந்த அவநம்பிக்கை உடைய நாடாக இத்தாலி இருக்கிறது. இதற்கு பொருளாதார நிலைமை ஒரு காரணமாக இருந்தாலும், இத்தாலிக்குள் புலம் பெயர்பவர்களின் எண்ணிக்கையும் ஒரு காரணமாகும். முறையற்ற வழியில் பலர் ஐரோப்பாவுக்கு வருகின்றனர்.

வடக்கு ஆப்பிரிக்காவில் இருந்து மத்திய தரைக்கடல் வழியாக இத்தாலி க்கு புலம்பெயர்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இவர்களின் நோக்கம் ஜெர்மனி, ஸ்வீடன் உள்ளிட்ட வளர்ச்சி அடைந்த நாடுகளுக்கு செல்வதாக இருந்தாலும் ஐரோப்பிய யூனியன் விதிமுறை காரணமாக இத்தாலியிலேயே தங்கிவிடுகின்றனர். எந்த நாட்டில் முதலில் கால் பதிக்கின்றனரோ அங்குதான் இருக்க வேண்டும் என்னும் விதி காரணமாக இத்தாலியில் அகதிகளின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது.

2007-ம் ஆண்டில் இருந்து இதுவரை 10 லட்சம் அகதிகள் வந்திருப்பார்கள். கடந்த ஆண்டு மட்டும் 400 கோடி யூரோ அகதிகளுக்காக செலவு செய்திருக்கிறது. இத்தாலியிலேயே இருக்க வேண்டும் என்னும் விதிமுறையை உருவாக்கிய ஐரோப்பிய யூனியன் 3 சதவீத தொகையை மட்டுமே இத்தாலிக்கு வழங்குகிறது. பெரும் சுமை இத்தாலிக்கு ஏற்படுவதால் ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேற முடிவு செய்துள்ளது.

தவிர போர் காரணமாக அகதிகள் இத்தாலிக்கு வருவதில்லை. 18 வயது முதல் 35 வயதுள்ள நபர்கள் வேலை வாய்ப்பினை தேடி வருகின்றனர். ஏற்கெனவே மந்த நிலையில் இருக்கும் இத்தாலியால் வேலை வழங்க முடியாத சூழல் இருப்பதால் சமூக குற்றங்கள் அதிகரிப்பதாக கூறப்படுகிறது. அதனால் 5 லட்சம் வெளிநாட்டவர்களை திருப்பி அனுப்பவும் புதிய அரசு திட்டமிட்டிருக்கிறது. இதற்கென பிரத்யேக மையங்களை ஏற்படுத்தவும் முடிவு செய்யப்பட்டிருக்கிறது.

ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேறுகிறதா?

கூடுதல் செலவு செய்ய இத்தாலியின் புதிய அரசு முடிவுக்கு ஐரோப்பிய யூனியன் கண்டித்திருக்கிறது. இத்தாலின் கடன் அதிகமாக இருக்கிறது. இந்த நிலையில் மேலும் செலவு செய்வது ஒட்டுமொத்த ஐரோப்பிய யூனியனையும் பாதிக்கும். பட்ஜெட் பற்றாக்குறை 3 சதவீதத்துக்குள் இருக்க வேண்டும் என்னும் விதி இருக்கிறது. ஆனால் இந்த ஆண்டு மற்றும் அடுத்த ஆண்டிலும் இத்தாலி இந்த எல்லையை மீறும் என்றே தெரிகிறது என ஐரோப்பிய யூனியன் எச்சரிக்கை விடுத்திருக்கிறது.

இந்த நிலையில் ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேறும் முடிவை கூட இத்தாலி எடுக்கலாம் என தெரிகிறது. ஐரோப்பிய யூனியனில் இருந்து இங்கிலாந்து வெளியேறும் முடிவு கூட பெரிய சிக்கலை உருவாக்காது. ஆனால் இத்தாலி வெளியேறும் பட்சத்தில் கூடுதல் விளைவுகளை ஏற்படுத்தும்.

பொது கரன்ஸியான யூரோவில் இங்கிலாந்து இல்லை. ஆனால் இத்தாலி பொது கரன்ஸியில் இருந்து வெளியேறும் பட்சத்தில் சிக்கல்கள் மேலும் அதிகரிக்கும். அவ்வளவு எளிதாக வெளியேற முடியாது என்றாலும், ஐரோப்பிய யூனியன் நிறுவன (6 நாடுகள் இணைந்து 1957-ம் ஆண்டு ஐரோப்பிய யூனியன் உருவாக்கப்பட்டது) நாடுகளில் இத்தாலியும் ஒன்று என்பது முரண் நகை.

-

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x