Last Updated : 14 May, 2018 11:11 AM

 

Published : 14 May 2018 11:11 AM
Last Updated : 14 May 2018 11:11 AM

அமெரிக்காவின் நெருக்குதலை சமாளிக்குமா ஈரான்?

ஒவ்வொரு வாரமும் ஏதாவது ஒரு சர்ச்சைக்குரிய விஷயத்தை அறிவித்து உலக நாடுகளை அதிரச் செய்வதும், உலகப் பொருளாதாரத்தில் குழப்பம் ஏற்படுத்துவதும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் வாடிக்கைகளில் ஒன்று. ஹெச்-1பி விசா வைத்திருப்பவர்களின் கணவன் அல்லது மனைவி தங்களிடமுள்ள ஹெச்-4 விசாவின் மூலம் அமெரிக்காவில் பணி புரிவதற்கு பெற்றிருந்த அனுமதியை ரத்து செய்யப்போவதாக இரண்டு வாரங்களுக்கு முன்பு அறிவித்திருந்தது ட்ரம்ப் நிர்வாகம் .

இந்தப் பிரச்சினையில் அதிகம் பாதிக்கப்பட இருப்பது இந்தியர்கள். அதிலும் குறிப்பாக இந்தியப் பெண்கள். இந்த சிக்கலில் இருந்து இன்னும் மீளாத நிலையில், ஈரான் உடனான அணு சக்தி ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகுவதாகவும், ஈரான் மீது கடுமையான பொருளாதார தடை விதிக்கப்படும் என்றும் அறிவித்திருக்கிறார் ட்ரம்ப்.

பொதுவாக ஒரு திட்டத்தைக் கைவிடவேண்டுமென்றால் ட்ரம்ப் இரண்டு நிபந்தனைகளை வைத்துள்ளார். முதலாவதாக குறிப்பிட்ட அந்தத் திட்டத்தின் மூலம் நேரடியாக அமெரிக்காவுக்கு பலன் உண்டா எனப் பார்க்கிறார். நேரடியான பலன்கள் இல்லையென்றால் அதனை ரத்து செய்ய வேண்டும் என்பதுதான் ட்ரம்பின் கொள்கை. மறைமுகமாக கிடைக்கக்கூடிய பலன்களைப் பற்றி அவருக்கு எந்தக் கவலையும் கிடையாது. எடுத்துக்காட்டாக ஹெச்-4 விசா பணி அனுமதி திட்டம் மூலம் இந்தியர்களுக்கு வேலை கிடைக்கிறது, அமெரிக்காவுக்கு நேரடி பலன் கிடையாது. ஆனால் இந்தியர்கள் தங்கள் தொழில்நுட்ப அறிவை விற்பதன் மூலம் பொருளாதார ரீதியில் அமெரிக்காவுக்கு கிடைக்கக்கூடிய மறைமுக பலன்கள் பற்றி ட்ரம்புக்கு கவலை இல்லை.

இரண்டாவது கொள்கை நம்மூர் அரசியல்வாதிகள் சிலர் பின்பற்றுவதுதான். முந்தைய ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்டதென்றால் திட்டத்தை ரத்து செய் என்பதுதான் அது. பராக் ஒபாமாவின் உலகமயமாதலுக்கு ஆதரவான அத்தனை திட்டங்களையும் ரத்து செய்வதுதான் ட்ரம்பின் நோக்கம். முதலாவதாக கிழக்காசிய பகுதிகளில் உள்ள 11 நாடுகளோடு வர்த்தக உறவை மேம்படுத்துவதற்காக ஒபாமா அரசால் முன்னெடுக்கப்பட்ட ஒப்பந்தமான டிரான்ஸ்-பசிபிக் கூட்டுறவை (டிபிபி) ரத்து செய்தார் ட்ரம்ப். இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட மாட்டேன் என்பதுதான் தேர்தல் பரப்புரையில் ட்ரம்பின் முக்கிய அறிவிப்பாக இருந்தது.

அதன்பிறகு உலகின் பருவநிலையை இந்தியா, சீனா போன்ற நாடுகளும் பாதிப்படையச் செய்யும்பொழுது அமெரிக்கா மட்டும் வளர்ந்த நாடு என்று அழைக்கப்பட்டு பருவ நிலையைக் காப்பாற்ற பணம் அளிக்க வேண்டும் என்று சொல்வதை ஏற்க முடியாது என பாரீஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் இருந்து விலகினார். இறுதியாக இப்பொழுது ஈரானுடன் 6 உலக நாடுகள் செய்திருந்த அணு சக்தி ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகுவதாக அறிவித்துள்ளார். இதற்கு ட்ரம்ப் முன்வைத்துள்ள காரணங்களைப் பார்ப்பதற்கு முன்பு இந்த ஒப்பந்தம் ஏன் தேவைப்பட்டது என்ற கேள்விக்கு விடை காண வேண்டியது அவசியமாகிறது.

ஈரான் அணு ஒப்பந்தம்

1967-ம் ஆண்டு அமெரிக்காவின் உதவியுடன் தனது தலைநகர் தெஹ்ரானில் அணு ஆய்வு மையத்தை அமைத்தது ஈரான். அதற்கு முன்னதாகவே அமெரிக்காவுடன் இதுதொடர்பாக ஒப்பந்தம் செய்துகொண்ட ஈரான், சர்வதேச அணு சக்தி மையத்திலும் (ஐஏஇஏ) இணைந்தது. அணு பரவல் தடை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட ஈரான், அணு ஆற்றல் திட்டத்தை அமெரிக்க அரசின் உதவியுடன் 1970-களில் தொடங்கியது. 1979-ம் ஆண்டு அணு சக்தி தொடர்பான விஷயங்களில் மேற்கத்திய நாடுகளிலிருந்து இதற்குமேல் உதவி பெறப்போவது கிடையாது என ஈரான் முடிவு எடுத்தது.

1984-ம் ஆண்டு சீனாவின் உதவியோடு இஸ்ஃபஹான் நகரில் தனது அணு ஆய்வு மையத்தை ஈரான் அமைத்தது. 1988-ம் ஆண்டு இந்தத் திட்டங்கள் மூலம் ஈரான் அணு ஆயுதம் தயாரிப்பதாக அமெரிக்கா குற்றம் சாட்டியது. 2000-ம் ஆண்டில் ஈரானின் அணு ஆற்றல் திட்டங்களுக்கு உதவும் மனிதர்கள் மற்றும் அமைப்புகளுக்கு தடை விதிப்பதாக அப்போதைய அமெரிக்க அதிபர் பில் கிளிண்டன் அறிவித்தார். 2003-ம் ஆண்டு ஈரானுக்கு சென்று ஆய்வு செய்த ஐஏஇஏ இயக்குநர் ஈரான் அணு ஆயுதங்கள் தயாரிக்கவில்லை என்றார்.

இருப்பினும் ஐஏஇஏ எப்போது விரும்பினாலும் யாருடைய குறுக்கீடும் இன்றி ஈரானின் அணு ஆற்றல் உற்பத்தியை பார்வையிடும் அனுமதியை அளிக்கும் வகையிலான ஒப்பந்தத்தில் ஈரான் கையெழுத்திட வேண்டும் என்றார். அதற்கு ஈரான் மறுப்பு தெரிவித்தது. பின்பு அதே ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் ஈரான் அணு ஆயுதம் தயாரிக்கப் பயன்படும் செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை அதிகளவு வைத்திருப்பதாக ஐஏஇஏ குற்றம் சாட்டியது. இதன்பின்பு ஐஏஇஏ அதிகாரிகள் எப்போது வேண்டுமானாலும் ஈரானில் ஆய்வு செய்யலாம் என்னும் ஒப்பந்தத்தில் ஈரான் கையெழுத்திட்டது.

இதனைத் தொடர்ந்து ஈரான், ஐஏஇஏ மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகளுக்கிடையே நடந்த பல்வேறு கருத்து முரண்கள், சச்சரவுக்குப் பிறகு 2006-ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஐக்கிய நாடுகள் சபை, ஈரான் மீது பொருளாதார தடை விதித்தது. 2012-ம் ஆண்டு ஐஏஇஏ அறிக்கை யுரேனியத்தை செறிவூட்டுவதை 20 சதவீதத்தில் இருந்து 27 சதவீதமாக ஈரான் அதிகரித்துள்ளதாக தெரிவித்தது. இதனைத் தொடர்ந்து 2015-ம் ஆண்டு ஒபாமா அமெரிக்க அதிபராக பதவி வகித்த காலத்தில் அமெரிக்கா, சீனா, பிரிட்டன், ரஷ்யா, பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி போன்ற நாடுகள் ஈரானுடன் அணு ஒப்பந்தம் செய்துகொண்டன.

இதன்படி செறிவூட்டப்பட்ட யுரேனியத்தின் அளவை இந்த நாடுகள் கேட்டுக்கொள்ளும் அளவுக்கு ஈரான் குறைத்தால் ஈரான் மீதான தடைகள் விலக்கிக்கொள்ளப்படும் என ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன்படி 2016-ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் ஐரோப்பிய யூனியன், அமெரிக்கா மற்றும் ஐநா சபை போன்றவை ஈரான் மீதான தடைகளை விலக்கின.

ட்ரம்ப் சொல்லும் காரணங்கள்

இந்த ஒப்பந்தத்தின் மூலம் ஈரான் அணு ஆயுதம் தயாரிப்பதை கண்டறியவோ, கட்டுப்படுத்தவோ முடியாது என்கிறார் ட்ரம்ப். இந்த ஒப்பந்தம் செய்யப்பட்ட பிறகு ஈரானின் பொருளாதாரம் மந்தமாக இருந்த நிலையிலும் ஈரானின் ராணுவ செலவு அதிகரித்ததாகவும், ஈரானுக்கு அமெரிக்கா பணம் கொடுத்து உதவியது தனக்கு பிடிக்கவில்லை என்றும் கூறியிருக்கிறார் ட்ரம்ப்.

ஆனால் ஈரானின் ராணுவ செலவு அதிகரிக்கவில்லை என்பது இதுகுறித்த தரவுகளை கையாளும் நிறுவனங்களின் கருத்தாக இருக்கிறது. ராணுவ உபகரணங்களை வாங்குவதற்காக 40 கோடி டாலரை 1970-ம் ஆண்டு அமெரிக்காவுக்கு அளித்திருக்கிறது ஈரான். ஆனால் இரு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்ட சச்சரவுகளால் ராணுவ உபகரணங்களை அப்போது வழங்காத அமெரிக்கா, ஈரானிடம் பெற்ற தொகையை இப்பொழுது திரும்பக் கொடுத்துவிட்டு அதை பொருளாதார உதவி என்று சொல்கிறது என்ற விமர்சனத்தையும் கவனத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது. பொருளாதார தடை விதிக்கப்பட்டதால் வெளிநாட்டு வங்கிகளில் ஈரானின் சொத்துகள் முடக்கப்பட்டதையும், தடை நீங்கிய பிறகு ஈரான் மீண்டு வருவதையும் எளிதாக கருதிவிட முடியாது.

இந்தியாவுக்கு பாதிப்புகள் உண்டா?

அமெரிக்கா இந்த ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறுவதோடு ஈரான் மீது கடுமையான பொருளாதார தடையும் விதிக்க இருப்பதாக அறிவித்துள்ளது. இதனால் கச்சா எண்ணெய் விலை உயரும் வாய்ப்பு இருப்பதாக அசோசேம் கூறியிருந்தாலும், துறைசார் நிபுணர்களின் கருத்து வேறுவிதமாக இருக்கிறது. யூரோவைப் பயன்படுத்தி ஈரானிலிருந்து கச்சா எண்ணெயை இந்தியா இறக்குமதி செய்துவருகிறது. எனவே ஐரோப்பிய யூனியனும் அமெரிக்காவுடன் கைகோர்த்தால் மட்டுமே இந்திய கச்சா எண்ணெய் இறக்குமதியில் பாதிப்பு ஏற்படும். இருப்பினும் இந்த அறிவிப்புக்கு பின்பு கடந்த வாரம் புதன்கிழமை, மூன்றாண்டுகளில் இல்லாத அளவுக்கு கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

ஆப்கானிஸ்தான் மற்றும் ஈரானுடனான வர்த்தக உறவுகளை எளிதாக்கும் வகையில் ஈரானின் சபஹர் பகுதியில் ஷாஹித் பெஹெஷ்டி என்ற துறைமுகத்தை இந்தியா அமைத்து வருகிறது. இப்போதைய சூழலில் இந்தத் திட்டத்துக்கு பாதிப்புகள் இல்லையெனினும், அமெரிக்கா ஈரானுக்கு பொருளாதார தடை விதிக்கும் பட்சத்தில் டாலரைப் பயன்படுத்துவதில் சிக்கல் ஏற்படலாம். இருப்பினும் 2015-ம் ஆண்டு அணு ஒப்பந்தத்துக்கு முன்பான காலகட்டத்தில் எழுந்த இதேபோன்ற சிக்கல்களை இந்தியா ஓரளவு எதிர்கொண்டிருக்கிறது என்பதையும் மறுக்க முடியாது.

ஏற்றுமதி மற்றும் இறக்குமதிக்கான பொருட்களை இந்தியா, ஈரான், ஆஃப்கானிஸ்தான், ஆர்மீனியா, அஜர்பைஜான், ரஷ்யா, மத்திய ஆசியா மற்றும் ஐரோப்பா போன்ற பகுதிகளுக்கு கப்பல், ரயில் மற்றும் சாலை வழியாக எடுத்துச்செல்லும் வகையில் இந்தியாவால் திட்டமிடப்பட்டுள்ள 7,200 கிலோ மீட்டர் அளவிலான ஐஎன்எஸ்டிசி திட்டத்தில் பாதிப்பு ஏற்படவும் வாய்ப்புகள் உள்ளதாகக் கூறப்படுகிறது.

ஷாங்காய் கூட்டமைப்பில் ஈரானையும் சேர்க்க வேண்டும் என சீனா தொடர்ந்து வலியுறுத்திவரும் நிலையில் அமெரிக்காவின் இந்த முடிவால் ஷாங்காய் கூட்டமைப்பில் ஈரான் இணையும் வாய்ப்புகள் அதிகரித்துள்ளன. அமெரிக்காவுக்கு எதிரான கூட்டணியாக இது மாறும் பட்சத்தில் இந்தியா இதை எப்படி எதிர்கொள்ளப்போகிறது என்ற கேள்விகள் எழுந்துள்ளன.

முன்னதாக கடந்த மார்ச் மாதத்தில் ஷாஹித் பெஹெஷ்டி துறைமுகப் பணியில் கலந்துகொள்ளுமாறு சீனா மற்றும் பாகிஸ்தானை ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜாவத் சரீஃப் அழைத்திருப்பது, பாகிஸ்தானையும் சீனாவையும் இணைக்கும் வகையிலான பாதையை உருவாக்கும் சிபிஇசி திட்டத்தில் ஈரான் பங்களிக்க ஒப்புக்கொண்டிருப்பது போன்றவை இப்போதைய சூழலில் முக்கியத்துவம் பெறுகிறது.

ஈரானிடமிருந்து யூரியா வாங்குவதிலும் சில சிக்கல்கள் எழும் வாய்ப்புகள் உள்ளன. சுற்றுச்சூழல் சார்ந்த பிரச்சினைகளால், யூரியா தயாரிப்பதை சீனா நிறுத்தியுள்ளது. எனவே யூரியாவுக்காக இந்தியா பெருமளவில் ஈரானை சார்ந்திருக்கிறது. கடந்த நிதியாண்டில் 6 மில்லியன் டன் யூரியாவை இந்தியா இறக்குமதி செய்திருக்கிறது. இதில் ஈரானில் இருந்து மட்டும் 2 மில்லியன் டன்களை இறக்குமதி செய்திருக்கிறது. இதற்கு முன்பு ஈரானுக்கு அமெரிக்கா தடை விதித்திருந்த காலத்தில் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் திர்ஹாமைப் பயன்படுத்தி ஈரானிடமிருந்து யூரியாவை இந்தியா வாங்கி வந்தது. இதே வழிமுறையை இந்தியா மறுபடியும் பயன்படுத்த முயலக்கூடும்.

எது எப்படி இருந்தாலும், ஈரான் மீது அமெரிக்கா பொருளாதார தடையே விதித்தாலும், அதன்பின்பும் இந்தியா ஈரானுடன் பொருளாதார ரீதியிலான நட்புறவை தொடர்ந்தாலும், இந்தியாவின் பொருளாதாரம் மற்றும் தொழில்நுட்ப அறிவை வைத்துப் பார்க்கும்பொழுது அமெரிக்காவால் இந்தியாவை முழுமையாக புறக்கணித்துவிட முடியாது என்பதே தற்போதைய நிலையாக இருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை.

தாக்குப் பிடிக்குமா ஈரான்?

ஈரானைப் பொறுத்தவரையில் பொருளாதார தடை விதிக்கப்பட்ட காலங்களில் அதன் பண வீக்கம் அதிகரிப்பது, பல்வேறு திட்டங்களுக்கு அறிவிக்கப்பட்ட மானியங்கள் குறைக்கப்படுவது, ஈரானின் ரியால் மதிப்பு கடுமையான சரிவை சந்திப்பது போன்ற பல்வேறு சிக்கல்கள் நிகழ்ந்திருக்கின்றன. கள்ளச் சந்தை செயல்பாடுகள் மூலம் பணப்பரிமாற்ற மதிப்பில் குறுக்கீடு செய்பவர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்படும் சூழலும் உருவானது.

அமெரிக்கா விதிக்க இருக்கும் பொருளாதார தடைக்கு எதிராக ஈரானின் நட்பு நாடுகள் அதற்கு எவ்வாறு உதவப் போகின்றன என்பதைப் பொறுத்துதான் வரும் காலங்களில் ஈரானின் வளர்ச்சி இருக்கும். துருக்கி, பிரிட்டன், ஜெர்மனி, பிரான்ஸ் போன்ற நாடுகள் உடனடியாக தங்களது கண்டனங்களை அமெரிக்காவுக்கு தெரிவித்திருப்பதன் மூலம் ஈரானை அவை கைவிடாது என்று உறுதியாக நம்பலாம்.

-

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x