Last Updated : 29 Jan, 2018 11:49 AM

 

Published : 29 Jan 2018 11:49 AM
Last Updated : 29 Jan 2018 11:49 AM

எஸ்தோனியாவுக்கு மட்டும் எப்படி சாத்தியமானது?

1991-ம் ஆண்டு ரஷியா சிதறுண்டபோது தனி நாடாக பிரிந்ததுதான் எஸ்தோனியா. வட ஐரோப்பிய நாடுகளில் பால்டிக் கடல் மற்றும் பின்லாந்து வளைகுடா சூழ அமைந்துள்ள சிறிய நாடு.

தனி நாடாக பிரிந்தபோது இந்நாட்டில் பாதிக்கும் குறைவானவர்களிடம்தான் தொலைபேசி இணைப்பு இருந்தது. வெளி நாடுகளுடனான தொடர்புக்கு அந்நாட்டில் அப்போது இருந்த ஒரே வசதி பின்லாந்தின் மொபைல் நிறுவனம் மட்டுமே. ஆனால் இன்று உலகின் தொழில்நுட்ப வளர்ச்சி பெற்ற நாடுகளில் ஒன்றாக திகழ்கிறது.

வாக்கெடுப்புக்கு மின்னணு இயந்திரம் பயன்படுத்தலாமா என உலகின் மிகப் பெரும் வல்லரசான அமெரிக்காவே தயங்கி வரும் நிலையில் 10 ஆண்டுகளுக்கு முன்பே அதாவது 2007-லேயே மின்னணு வாக்குப் பதிவை பொதுத்தேர்தலில் அறிமுகப்படுத்தியதும் இந்நாடுதான்.

உலகின் அதிவேக பிராட்பேண்ட் சேவை உள்ள நாடுகளில் இதுவும் ஒன்று. இவை அனைத்துக்கும் மேலாக நாட்டில் ஒவ்வொருவரும் ஒரு ஸ்டார்ட் அப் உரிமையாளராக இருப்பதுதான் சிறப்பாகும்.

கார் நிறுத்துமிடத்துக்கான கட்டணத்தை மொபைல் போன் மூலம் செலுத்தும் வசதியை 13 லட்சம் மக்களும் பயன்படுத்துகின்றனர். இங்குள்ள அனைத்து மக்களின் உடல் நலன் குறித்த அறிக்கை கிளவுட் கம்ப்யூட்டிங் முறையில் பதிவு செய்யப்பட்டுள்ளது. நாட்டிலுள்ள 95 சதவீத மக்களும் தங்களது வரிப் பணத்தை ஆன்லைன் மூலமே செலுத்துகின்றனர். பால்டிக் பிரதேசத்தில் உள்ள மிகச் சிறிய நாடு 25 ஆண்டுகளில் இத்தகைய வளர்ச்சியை எட்டியது வியப்பளிக்கும் விஷயம்தான்.

இத்தகைய அசுர வளர்ச்சிக்கு 1992-ம் ஆண்டில் வித்திட்டவர் அந்நாட்டின் பிரதமராக இருந்த மார்ட் லார்.

ரஷியாவிலிருந்து பிரிந்தாலும் வலுவான பொருளாதாரமாக உருவாக வேண்டும் என்ற வேட்கை மிக இளம் வயது கொண்ட அமைச்சரவை சகாக்களிடம் இருந்தது. மார்ட் லார் அமைச்சரவையில் இருந்தவர்கள் அனைவரும் 35 வயதுக்குக் குறைவானவர்கள். இரண்டாவது ஆண்டிலேயே அனைவருக்கும் ஒரே விதமான வருமான வரி விதிக்கப்பட்டது. நாட்டின் சந்தைக் கதவு திறக்கப்பட்டு தாராள பொருளாதாரம் இரு கரம் நீட்டி வரவேற்கப்பட்டது. நிர்வாக பணிகளை மட்டுமே அரசு கவனித்தால் போதும் என்ற நிலையில் தொழில் துறை அனைத்தும் தனியார் வசம் விடப்பட்டது. புதிய தொழில் தொடங்குவதற்கு எவ்வித இடையூறும் இல்லாமல் பார்த்துக் கொள்ளப்பட்டது.

பின்லாந்து நிறுவனம் தொலைபேசிகளை அனலாக் முறையிலிருந்து டிஜிட்டல் முறைக்கு மாற்றியபோது அத்தகைய வசதியை இலவசமாகவே எஸ்தோனியாவுக்கு வழங்கியது.

டிஜிட்டல் யுகத்துக்கு மாறும் முடிவை எடுத்து நில பத்திரப் பதிவு உள்ளிட்ட அனைத்துமே ஆன்லைன் முறையில் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டது.

1998-ம் ஆண்டு அனைத்து பள்ளிகளும் ஆன்லைன் மூலம் இணைக்கப்பட்டன. 2000-வது ஆண்டு இணைய இணைப்பு குடிமக்களின் உரிமை எனும் சட்டமே பிறப்பிக்கப்பட்டது. இணையதளம் நாட்டின் அனைத்து தரப்பினருக்கும் கிடைத்தது. அனைத்து பொது இடங்களிலும் இலவச வைஃபை வசதி இங்கு மிகவும் சர்வசாதாரணமானது. ரப்பர் ஸ்டாம்ப், கார்பன் காகிதம், நீண்ட வரிசையில் காத்திருத்தல் என அனைத்துமே எங்கு பார்த்திராத நிகழ்வுகளாயின. அனைத்து அரசு நிர்வாகமும் இணையதளம் சார்ந்த ஆன்லைன் மூலமானதாக மாறியது.

ஸ்கைப் நிறுவனம் 2005-ம் ஆண்டில் இ-பே நிறுவனத்துக்கு 260 கோடி டாலருக்கு விற்கப்பட்டது. இதன் மூலம் எஸ்தோனிய முதலீட்டாளர்கள் பலரும் லட்ச யூரோக்களை பெற்றனர். இதுவே தொழில்நுட்பம் சார்ந்த துறைகளின் வளர்ச்சிக்கு வித்திட்டது. இன்று இங்குள்ள டெக்னோபால், தலைநகர் டாலினின் வர்த்தக மையமாகத் திகழ்கிறது. இங்கு உலகின் முன்னணி 150 தொழில்நுட்ப நிறுவனங்கள் செயல்படுகின்றன. இதுவே இங்குள்ள மக்கள் அனைவரும் சர்வதேச அளவில் ஸ்டார்ட் அப் தொடங்க உந்து சக்தியாக அமைந்துள்ளது.

2011-ம் ஆண்டில் மட்டும் 14 ஆயிரம் புதிய நிறுவனங்கள் எஸ்தோனியாவில் பதிவு செய்யப்பட்டதாக உலக வங்கி அறிக்கை குறிப்பிடுகிறது. நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சியில் மின்னணு தொழில்துறையின் பங்களிப்பு 15 சதவீத அளவுக்கு இருப்பதிலிருந்தே இத்துறையின் வளர்ச்சியை புரிந்து கொள்ள முடியும்.

எஸ்தோனியா அடைந்துள்ள வளர்ச்சியை மற்ற நாடுகள் ஏன் எட்டவில்லை?

எஸ்தோனியா சிறிய நாடு, அங்கு மக்கள் தொகை குறைவு என்ற வாதத்தை முன்வைப்போரும் உண்டு.

ஆனால் மக்கள் தொகை குறைவாக உள்ள நாடுகள் எத்தனை இந்த அளவுக்கு 25 ஆண்டுகளில் வளர்ச்சியைப் பெற்றுள்ளன?

இந்தியாவைப் பொறுத்தமட்டில் சுதந்திரமடைந்து 70 ஆண்டுகளாகிவிட்டன. சரி தாராளமயமாக்கல் கொள்கை கடைபிடிக்கப்பட்டதும் 1991-களில்தான். ஆனால் நாம் எந்த அளவுக்கு வளர்ச்சியடைந்திருக்கிறோம். ஆட்சியாளர்களும், மக்களும் உணர வேண்டிய தருணமிது. அதைத்தான் எஸ்தோனியாவின் வளர்ச்சியும் உணர்த்துகிறது.

-

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x