Published : 01 Jan 2018 12:15 PM
Last Updated : 01 Jan 2018 12:15 PM

புத்தாண்டு நிதி தீர்மானங்கள்

தீர்மானங்கள் இல்லாமல் புத்தாண்டு எப்படி இருக்க முடியும். தீர்மானங்கள் பலவும் உடனடியாக முடிவுக்கு வந்தாலும் தீர்மானங்கள் இருக்கும். ஆனால் பணம் தொடர்பாக சில தீர்மானங்களை எடுப்பது மட்டுமல்லாமல் அவற்றில் உறுதியாகவும் இருக்க வேண்டும். வரும் புத்தாண்டுக்கான ஐந்து நிதி தீர்மானங்கள் இதோ..

தள்ளிப்போட வேண்டாம்

நாம் பெரும்பாலான முடிவுகளை முடிந்தவரை தள்ளிப்போடுவோம். கடைசி வரை இழுத்தடிப்போம். ஆனால் நிதி சார்ந்த விஷயங்களில் முடிவெடுக்கும்போது தள்ளிப்போடக்கூடாது. தவணைகளை சரியான தேதியில் செலுத்தவும். நடப்பு நிதி ஆண்டு முடிவதற்கு இன்னும் மூன்று மாதங்கள் மட்டுமே இருக்கிறது. 80சி பிரிவில் வரிச்சலுகை பெற விரும்புபவர்கள் கடைசி தேதிகளில் முதலீடு செய்வதை விட முன் கூட்டியே திட்டமிடுவது நல்லது. முன்கூட்டியே திட்டமிடும் போது வயது, ரிஸ்க் எடுக்கும் அளவு, இலக்கு, தேவை ஆகியவற்றை ஆராய்ந்த பிறகு முடிவெடுக்க முடியும். அதேபோல இன்னும் மூன்று மாதங்களில் அடுத்த நிதி ஆண்டு வர இருக்கிறது. அதற்கு ஏற்ப, நிதி ஆண்டு தொடக்கத்திலே 80சி பிரிவின் கீழ் முதலீட்டை தொடங்குங்கள். முன் கூட்டியே முதலீடு செய்யும் போது கூட்டு வட்டியின் பலன் கிடைக்கும்.

பலரும் காலதாமதமாக வருமான வரி தாக்கல் செய்கின்றனர். சிலர் இறுதி நாட்களில் கூட வரிதாக்கல் செய்வதில்லை. இதனால் அபராதம், வட்டி உள்ளிட்டவற்றை கூடுதலாக செலுத்த வேண்டி இருக்கிறது. இந்த ஆண்டு அபராதம் செலுத்த கூடாது என தீர்மானம் எடுப்போம்.

கிரெடிட் கார்டு கட்டணம்

கிரெடிட் கார்டு கட்டணத்தை முழுமையாக, தவணைத் தேதிக்குள் கட்ட வேண்டும். பாதி தொகை அல்லது குறைந்தபட்ச தொகை செலுத்தும் போக்கு சிலரிடம் இருக்கிறது. இதனால் மீதமுள்ள தொகைக்கு கூடுதல் வட்டி செலுத்த வேண்டும். இந்த வட்டி சந்தையில் உள்ள வட்டியை விட அதிகம். மாதத்துக்கு 3 சதவீத வட்டி என்னும் பட்சத்தில் ஆண்டுக்கு 36 சதவீத வட்டி செலுத்த வேண்டி இருக்கும். இது தவிர கால தாமதத்துக்கான கட்டணமும் செலுத்த வேண்டும். கடன் பிரச்சினையைத் தவிர்க்க நினைப்பவர்கள் கிரெடிட் கார்டு தொகையை சரியான சமயத்தில் செலுத்துவது நல்லது. குறைந்த பட்ச தவணையை செலுத்துவதை பழக்கமாக வைத்திருப்பவர்கள், மிகப்பெரும் தொகையை இழக்க வேண்டி இருக்கும்.

எஸ்.ஐ.பி முதலீடு

சேமிப்பு கணக்கில் கிடைக்கும் 4 முதல் 6 சதவீத வட்டிக்காக பணத்தை அப்படியே வைத்திருக்காதீர்கள். சேமிப்பு இதன் மூலம் கிடைக்கும் வட்டி ரூ.10,000-க்கு அதிகமாக இருக்கும் பட்சத்தில், இதற்கும் வருமான வரி செலுத்த வேண்டி இருக்கும். இதனால் பணத்தை சரியான வழியில் முதலீடு செய்யுங்கள். கடன் சார்ந்த முதலீடுகள் நிலையான வருமானத்துக்கு ஏற்றவையாக இருக்கும். ஆனால் பணவீக்கத்தை தாண்டிய வருமானம் கொடுக்காது. நீண்டகால அடிப்படையில் முதலீடு செய்ய விரும்புவோர் பங்குச்சந்தை சார்ந்த திட்டங்களில் முதலீடு செய்வது குறித்த முடிவினை எடுக்க வேண்டும்.

வயது 25 எனில் உங்கள் மொத்த முதலீட்டில் 75 சதவீதத்தை (100-25) பங்குச்சந்தை சார்ந்த திட்டங்களில் முதலீடு செய்யலாம் என்பது அடிப்படை விதி. பங்குச்சந்தை உச்சத்தில் இருக்கும் இந்த சமயத்தில் மொத்தமாக முதலீடு செய்வதை விட மாதாந்திர அடிப்படையில் (எஸ்.ஐ.பி) முதலீடு செய்வது நல்லது. மேலும் பங்குச்சந்தை சரியும் பட்சத்தில் எஸ்.ஐ.பி முதலீட்டை நிறுத்த வேண்டாம். சரியும் சந்தையிலும் தொடர்ந்து முதலீடு செய்யும் பட்சத்தில் நீண்ட கால அடிப்படையில் நல்ல வருமானம் கிடைக்கும்.

காப்பீடு

போதுமான அளவுக்கு ஆயுள் மற்றும் மருத்துவ காப்பீடு எடுத்துக்கொள்ளுங்கள். ஒரு பெரிய மருத்துவ செலவு உங்களது மொத்த சேமிப்பையும் கரைக்கும் வல்லமை கொண்டது. உங்கள் ஆண்டு வருமானத்தை விட 10 மடங்குக்கு ஆயுள் காப்பீடு இருக்க வேண்டும் என்பது பொதுவான விதி.

இதர திட்டங்களை விட டேர்ம் இன்ஷூரன்ஸை எடுத்துக்கொள்ளுங்கள். மருத்துவ காப்பீடு ரூ.5 லட்சம் வரை இருப்பது போல பார்த்துக்கொள்ளுங்கள். உங்களுக்கு வீட்டுக்கடன் இருக்கும் பட்சத்தில் இதற்கு பிரத்யேகமாக பாலிசியை எடுத்துக்கொள்வது நல்லது.

செலவில் கவனம்

அவசர கால நிதியை உருவாக்குங்கள். குறைந்தபட்சம் ஆறு மாத செலவுக்கு பணத்தை தயாராக வைத்திருங்கள். இந்த தொகை பிக்ஸட் டெபாசிட் அல்லது லிக்விட் பண்ட்களில் இருக்கலாம். இந்த தொகையை அவசியம் இல்லாதவரை தொடாமல் இருப்பது நல்லது. எல்லைக்குள் செலவு செய்யுங்கள். மாதாந்திர செலவுகளை எழுதி வையுங்கள். தேவைப்படாத வரை கடன் வாங்குவதில் இருந்து விலகி இருங்கள்.

-

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x