

மக்கள் தொடர்பு ஆலோசகர்
பிள்ளைகளின் படிப்புச் செலவு, திருமணம், வீடு கட்டுதல், கார் வாங்குதல் — இவற்றையெல்லாம் நாம் முன்கூட்டியே திட்டமிடுகிறோம். சேமிக்கிறோம். சமாளிக்கிறோம். ஆனால், ஒரு செலவு மட்டும் நம் கணக்குகளை தலைகீழாக மாற்றி விடுகிறது — அது, மருத்துவ சிகிச்சைக்கான செலவு.
குழந்தை முதல் பெரியவர் வரை - யாருக்கு, எப்போது, எவ்வளவு மருத்துவச் செலவு ஏற்படும் என்று யாராலும் கணிக்க முடியாது. ஒரு திடீர் உடல்நலக் கோளாறு வந்தால் — நகையை விற்க வேண்டும்; சொத்தை அடமானம் வைக்க வேண்டும்; அல்லது கடன் வாங்க வேண்டும்.
அந்த நிதிச் சுழலிலிருந்து மீண்டு வர பல மாதங்கள் மட்டுமல்ல, சில ஆண்டுகளே கூட ஆகலாம். இத்தகைய எதிர்பாராத அதிர்ச்சிகளிலிருந்து ஒரு குடும்பத்தைக் காப்பாற்றும் கேடயம்தான், மருத்துவக் காப்பீடு (Health Insurance).
மருத்துவக் காப்பீட்டைப் பொறுத்தவரை, நீங்கள் வாங்கும் எல்லாப் பாலிசிகளும் ஒரே மாதிரியானவை அல்ல. ஒவ்வொரு பாலிசியிலும் தொகை, நிபந்தனை, சேவை எல்லாம் மாறுபடும். அதனால் பாலிசியைத் தேர்வு செய்வதற்கு முன் கவனிக்க வேண்டிய 10 முக்கியமான அம்சங்களைப் பார்ப்போம்.
1. காப்பீட்டுத் தொகை
ஒவ்வொருவருக்கும் ஒரு அடிப்படை காப்பீட்டுத் தொகையாக ரூ.10 லட்சமாவது இருக்க வேண்டும். தனிப்பட்ட பாலிசியைவிட, குடும்பக் காப்பீட்டுத் திட்டம் மிகவும் பயனுள்ளது. நகரங்களில் ஒரு பெரிய சிகிச்சைக்கு ரூ.8 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை செலவாகி விடுகிறது. அதனால், 4 பேர் கொண்ட குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரை அடிப்படை பாலிசி இருப்பது நல்லது.
அதை மீறும் செலவுகளுக்கு சூப்பர் டாப் அப் பாலிசியில் முதலீடு செய்யலாம். இதற்கு குறைந்த பிரிமியம் தொகையை செலவாகும். பெரிய நிறுவனங்களில் பணிபுரிவோருக்கு குழு காப்பீடு இருக்கலாம். ஆனால் அது மட்டுமே போதாது. வேலை மாறும்போது அல்லது ஒரு வேலையை இழக்கும்போது, அந்தக் கவசம் ஒரே நாளில் மறைந்துவிடும்.
2. காத்திருப்பு காலம்
பாலிசி எடுத்த மறுநாளே எல்லா சிகிச்சைகளுக்கும் பணம் கிடைத்துவிடாது. பொதுவாக, முதல் 30 நாட்கள் காத்திருப்பு காலமாக இருக்கும். ஏற்கெனவே உள்ள நோய்களுக்கு சிகிச்சைத் தொகையைப் பெற, 2 முதல் 4 ஆண்டுகள் வரை காத்திருக்க வேண்டியிருக்கும். அதனால்தான் — ஆரோக்கியமாக இருக்கும்போதே பாலிசி எடுப்பது மிக அவசியம்.
ஏற்கெனவே நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் போன்றவை இருந்தால் என்ன செய்வது? சில பாலிசிகளில் கூடுதல் வசதியாக காத்திருப்பு காலம் குறைக்கப்படலாம். அல்லது இந்த நோய்களையும் உள்ளடக்கிய சிறப்பு திட்டங்கள் இருக்கின்றன. பாலிசி எடுக்கும்போது உடல்நலத் தகவல்களை மறைப்பது, கேட்புத் தொகை (claim) நிராகரிக்கப்படுவதற்கும், பாலிசியே ரத்து செய்யப்படுவதற்கும் காரணமாகிவிடும்.
3. நெட்வொர்க் மருத்துவமனைகள்
ஒரு காப்பீட்டு நிறுவனம் பல மருத்துவமனைகளுடன் இணைந்து பணமில்லா சேவையை (Cashless) வழங்கும். ஆனால் அந்த மருத்துவமனைகள் உங்கள் வீட்டுக்கு அருகில் உள்ளதா என்பது முக்கியம். நெருக்கடி நேரத்தில் தூரமான மருத்துவமனை என்பது நடைமுறையில் பெரும் சிரமம். மேலும், அனைத்து சிகிச்சைகளுக்கும் பணமில்லா வசதி கிடைக்காது.
சில நேரங்களில் முதலில் செலவு செய்து பின்னர் பணத்தைத் திரும்பப் பெற (Reimbursement) வேண்டியிருக்கும். பாலிசி எடுக்கும் முன் உங்கள் பகுதியில் எத்தனை நெட்வொர்க் மருத்துவமனைகள் உள்ளன, அவை எளிதில் அணுகக்கூடியவையா என்பதை சரிபார்த்து விடுங்கள்.