

வீடுகளில் நாம் பயன்படுத்தும் ‘குண்டு பல்பு’ தனக்கு வழங்கப்பட்ட மின்னாற்றலில் வெறும் 10 சதவீதத்தை மட்டுமே ஒளியாக வெளியிடுகிறது. மீதி 90 சதவீதமும் வெப்பமாக வீணாகிறது. ‘டியூப் லைட்’ என்று சொல்லும் ‘புளோரசன்ட்’ பல்பு தனக்கு வழங்கப்பட்ட மின்னாற்றலில் 80 முதல் 85 சதவீதம் வரை ஒளியாக மாற்றுகிறது.
மீதம் வெப்பமாக வீணாகிறது. ஆனால் மின்மினிப் பூச்சியானது தன்னுடைய வேதி ஆற்றலை 95 முதல் 98 சதவீதம்வரை ஒளி ஆற்றலாக வெளியிடுகிறது. மின்மினிப்பூச்சியின் ஒளி வெளியிடும் திறன் கிட்டத்தட்ட 100 சதவீதத்தைத் தொடுவது ஆச்சரியம்தான்.
குளிர் ஒளி: மின்மினியின் அடிவயிற்றில் உள்ள லூசிபெரின் (luciferin) என்கிற மூலக்கூறு சுற்றுப்புறத்தில் உள்ள புற ஊதாக்கதிர்களை உட்கவர்ந்து உயர் ஆற்றல் நிலையை அடைகிறது. லூசிபெரேஸ் (luciferase) என்கிற புரத மூலக்கூறுகள் ஆக்சிஜனுடன் இணைந்து உயர்ஆற்றல் மட்டத்தில் உள்ள லூசிபெரினை கார்பன் டைஆக்சைடாகவும் கீட்டோனாகவும் சிதைவடைய வைத்து தாழ் ஆற்றல் மட்டத்திற்கு வரும்போது ஒளி வெளியிடப்படுகிறது.
இது உயிர்ஒளிர்வு (bioluminescence) எனப்படுகிறது. இதில் சிறப்பம்சம் வேதி ஆற்றல் கிட்டத்தட்ட மொத்தமும் ஒளி ஆற்றலாக மாறுவதுதான். வெப்பம் வெளியிடப்படுவதில்லை. எனவேதான் மின்மினி வெளியிடும் ஒளி ‘குளிர் ஒளி’ (cold light) எனப்படுகிறது. இணைசேர்வதற்கும், எதிரிகளை விரட்டவும் மின்மினி இந்த ஒளியைப் பயன்படுத்துகிறது.