

சேற்று உளுவை
கண் சிமிட்டும் மீன்களைக் கண்டதுண்டா? மீன்களுக்கு இமைகள் கிடையாது. பின் அவை எப்படிக் கண் சிமிட்டும் என்று கேட்பவர்கள், எப்பொழுதாவது அலையாத்திக் காடுகளின் சேற்றுப் பகுதிக்குச் செல்ல வேண்டும். அங்குதான் படிமலர்ச்சி வரலாற்றின் (Evolution) ஒரு வாழும் சாட்சி காத்திருக்கிறது.
போர்னியோவின் தவாவ் (Tawau) நகரில் மரப்பொருள் தயாரிப்பு நிறுவனங்கள் அடங்கிய வளாகம் ஒன்று உள்ளது. உப்பங்கழி ஆற்றின் பொழியில் (கழிமுகம்) அது அமைந்துள்ளது. ஆற்றின் இரண்டு கரைகளிலும் அலையாத்திக் காடுகள். வளாகத்தில் இருந்த நிறுவனம் ஒன்றில் குறுகிய காலத்துக்கு நான் பணிபுரிந்தேன்.
அதன் இயந்திர இரைச்சலும் தூசி மண்டலமும் எனக்கு அறவே பிடிக்காது. ஓய்வு நேரத்தில் அல்லது பணி முடிந்து திரும்புகையில், அதுவொரு தாழ் ஓதம் (Low tide) காலம் என்றால் பொழியின் பக்கம் ஒதுங்கிவிடுவது என் வழக்கம். நீர்மட்டம் குறைந்து வெளித்தெரியும் தாழ் ஓதச் சேற்றில் அந்த உயிரினம் நூற்றுக்கணக்கில் தென்படும்.