நடிகர் விக்ரமுக்கு ஒரு திறந்த மடல்

நடிகர் விக்ரமுக்கு ஒரு திறந்த மடல்
Updated on
2 min read

அன்புள்ள விக்ரம்,

உங்கள் மடியில் வாலில்லாக் குரங்கு வகையைச் சேர்ந்த ‘லார் கிப்பன்’ (Lar Gibbon) எனும் அரிய வகைக் குரங்கை வைத்து விளையாடும் காணொளிக் காட்சியை அண்மையில் காண நேர்ந்தது. அதன் வெளிப்பாடாகவே இக்கடிதத்தை உங்களுக்கு எழுதுகிறேன்.

உங்கள் மடியில் இருக்கும் அந்த உயிரினம், மனிதர்களின் மூதாதையான குரங்கினத்தைச் (Primate) சேர்ந்தது; உலக அளவில் அழியும் அபாயத்திலுள்ள ஓர் அரிய விலங்கு.

இது ஏன் இத்தகைய நிலைக்குத் தள்ளப்பட்டது எனத் தெரியுமா? எண்ணெய்ப்பனை (பாமாயில்) மரம் பயிரிடுவதற்காக அதன் வாழிடங்களை அழித்தது, கட்டுப்பாடற்ற வேட்டை, காடுகளும் அதன் வாழிடங்களும் துண்டாடப்பட்டது போன்றவை முதன்மைக் காரணங்கள்.

அதைவிடக் கொடூரமானது, நம்மைப் போன்றவர்களின் வீடுகளில் ‘செல்லப் பிராணி’யாக அழகுபார்ப்பதற்காக, காட்டில் அதன் தாய் இரக்கமின்றிச் சுட்டுக் கொல்லப்பட்டு, தாயை இழந்து தவிக்கும் இளங்குரங்குகள் கள்ளத்தனமாகக் கடத்தப்படுகின்றன.

பிறகு, சொல் பேச்சைக் கேட்க வைப்பதற்காகப் பட்டினி போட்டும் பல்வேறு சொல்ல முடியாத துயரங்களுக்கு ஆட்படுத்தப்பட்டும் நம்மைப் போன்றவர்களின் கைகளுக்கு அவை வந்துசேர்கின்றன. பத்து இளங்குரங்குகளைப் பிடித்தால் அதில் ஒன்றோ இரண்டோதான் கடைசியில் மிஞ்சும், மற்றவை வழியிலேயே செத்துவிடும்.

உலக அளவில் போதைப்பொருள் கடத்தலுக்கு இணையான பெரும் வணிகமாக இந்தக் காட்டுயிர் கடத்தல் உருவெடுத்துள்ளது. காட்டுயிர் கடத்தல்தான் விலங்கினங்களில் இருந்து பரவும் கரோனா போன்ற தொற்றுநோய்களுக்கும் முதன்மைக் காரணமாக இருக்கிறது.

நாம் செல்லப்பிராணியாக வளர்க்கும் காட்டுயிர்க்கு எவ்வளவுதான் சொகுசு வாழ்க்கையையும் உணவையும் வழங்கினாலும், நம் சொத்தையே எழுதிவைத்தாலும் அதனுடைய இயற்கையான வாழும் உரிமையைப் பறிக்கிறோம் என்பதே நிதர்சனம். லார் கிப்பன்கள் காட்டுப் பழங்கள், கொட்டைகளை உண்டு காடுகளில் விதைகளைப் பரப்பும்.

அத்துடன் பூச்சிகள், பூச்சிக் கூடுகளையும் உண்டு, அவற்றைக் கட்டுப்படுத்தும் முக்கியச் சூழலியல் பணியையும் செய்கின்றன. இந்தோனேசியா, லாவோஸ், மயன்மார், தாய்லாந்து, சுமத்ரா போன்ற தென்கிழக்கு ஆசியக் காடுகளைத் தாயகமாகக் கொண்டவை இவை. இந்தக் குரங்கினம் வெப்பமண்டலக்காடுகளிலும் மழைக்காடுகளிலும் வசிப்பவை.

தரைக்கு வராமல் மரத்திற்கு மரம் தாவி வாழும் இயல்புடையவை. வியப்பூட்டும் இன்னொரு செய்தி என்னவென்றால், இவை பெரும்பாலும் தரைக்கு வருவதே இல்லை; தவிர்க்க முடியாமல் தரைக்கு வர நேர்ந்தால், உடலைச் சமநிலைப்படுத்துவதற்காகத் தன் கைகளை மேலே உயர்த்தியபடி நடப்பதே அதற்குப் பெரும் கடினமாக இருக்கும்.

அடர்ந்த காடுகளில் தன் கூட்டத்தோடு சுதந்திரமாகத் திரிய வேண்டிய ஓர் உயிரினத்தின் இயல்பைப் பறித்து, நம் மடியில் வைத்துக் கொஞ்சுவது அன்பல்ல; அதன் சுதந்திரத்தின் மீதான வன்முறை.

இன்றைக்குப் பலரும் செய்யும் தவறும் இதுதான் - தெருநாய்களுக்கு அளவுக்கு அதிகமாக உணவளிப்போரும், காட்டுயிர்களுக்குத் தவறான முறையில் உணவளிப்போரும் ஏதோ விலங்குகளுக்கு நன்மை செய்வதாக நினைத்துக்கொள்கிறோம். ஆனால், உண்மையில் அந்த உயிரினங்களின் இயற்கை வளர் இயல்பையும், இரை தேடி உண்ணும் பண்பையும் சிதைத்து, மனிதர்களைச் சார்ந்திருக்கும்படி மாற்றி விடுகிறோம்.

திரையில் உங்களின் நடிப்பையும் உழைப்பையும் மதிக்கும் லட்சக்கணக்கான ரசிகர்கள் இருக்கும் சூழலில், உங்களின் இத்தகைய செயல்கள் சமூகத்துக்குத் தவறான முன்மாதிரி ஆகிவிடும். காட்டுயிர்கள் கூண்டுகளிலோ, மனிதர்களின் மடிகளிலோ வாழ வேண்டியவை அல்ல; அவை காடுகளிலேயே சுதந்திரமாக வாழ விடப்பட வேண்டும்.

விடுதலை என்பது மனிதர்களுக்கு மட்டுமல்ல, இந்த மண்ணில் வாழும் அனைத்து உயிரினங்களுக்குமானது. இந்தியாவின் 80ஆவது சுதந்திர நாளில் இந்தச் செய்தி உங்களைச் சிந்திக்க வைக்கும் என நம்புகிறேன்.

அன்புடன்,

சு.பாரதிதாசன், அருளகம்; arulagamgreen@gmail.com

நடிகர் விக்ரமுக்கு ஒரு திறந்த மடல்
உளவியல் விழிப்புணர்வு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in