

மனித இனத்தின் படிமலர்ச்சியில் தற்போது புதிய சமூக விலங்கினம் ஒன்று உருவாகியுள்ளது. நகரங்களிலிருந்து அமைதியான காட்டுக்குள் இவ்வகை உயிரினம் கும்பலாகச் செல்கிறது. காட்டுச் சாலையில் வாகனங்களில் பயணம் செய்கையிலும், காட்டு விலங்குகளைக் காணும்போதும், ‘ஆஆஆ… ஊஊஊ…’ என்று ஊளையிட்டு ஆர்ப்பரிப்பதே அதன் அடையாளம். நட்சத்திர விடுதியின் கேளிக்கை அரங்கைப் போன்று காட்டை நினைக்கும் அரியவகை உயிரினம் இது.
இயற்கை ஒலி அளவு: மரங்களின் இலைகள் காற்றில் உரசிக்கொள்ளும் ஒலிகளும், நீரோடையின் சலசலப்பும் மட்டுமே காட்டின் இயற்கையான ஒலி அளவு. நாம் குசு குசுவெனப் பேசிக்கொள்ளும் ரகசியமும் அதே ஒலி அளவுதான். ஒலியை அளக்கும் அளவை டெசிபல் என்போம். இருபது டெசிபல்தான் காட்டின் இயற்கையான ஒலி அளவு. நம் சமூக விலங்குகள் ஒட்டுமொத்தமாக எழுப்பும் உச்சக்குரல் ஒலியோ இடியோசையின் 120 டெசிபலையும், ஆம்புலன்சின் சைரன் ஒலியான 130 டெசிபலையும் தாண்டிவிடுகின்றன.
மனிதர்களின் இயல்பான உரையாடல் 40 டெசிபல் என்கிற அளவில் இருக்கும். அதுவே ஒரு சந்தடிமிக்கத் தெருவாக இருப்பின் 60 டெசிபலாக மாறும். அங்குக் கார்களின் ஒலி எழுப்பலும் சேர்ந்தால் 95 டெசிபலை அடையும். இதையே நம் காதுகள் தாங்காது பொத்திக்கொள்கிறோம். மனித செவிகள் 85 டெசிபல் அளவை மட்டுமே தாங்கக்கூடியவை.
நகரத்தில் ‘அமைதிப் பகுதி’ (Silent Zone) உண்டு. மருத்துவமனை, கல்வி நிறுவனம், நீதிமன்றம், வழிபாட்டு இடம் ஆகியவற்றைச் சுற்றியுள்ள நூறு மீட்டர் வரையான பகுதியே அமைதிப் பகுதி. அவ்விடத்தில் ஒலி அளவு பகலில் 50 டெசிபலையும் இரவில் 40 டெசிபலையும் தாண்டக் கூடாது என்பது விதி. ஆனால், நடைமுறையில் அது 70 டெசிபலைத் தாண்டுகிறது என்பது தனிக்கதை. சென்னையின் எழும்பூர் கண் மருத்துவமனைப் பகுதி ஓர் எடுத்துக்காட்டு.
எதை இழக்கிறோம்? - இந்த ஜூலை மாதத்தில் (2022) சென்னை நகரின் சராசரி ஒலி அளவு 84.5 டெசிபல் என்கிறது ஒரு கணக்கீடு. தமிழ்நாட்டில் மூன்று கோடி தனியார் வாகனங்கள் இருப்பதாக அறியப்பட்டுள்ளது. 2011ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது இதன் எண்ணிக்கை இரண்டு மடங்காகும். இவற்றில் ஏறக்குறைய 60 லட்சம் வாகனங்கள் சென்னை சாலைகளில் விரைகின்றன. அவையே ஒலி மாசுக்கான முதன்மை ஆதாரம்.
ஒலி 80 டெசிபலுக்கு மேல் இருந்தால், அது மனிதரிடம் மூன்று விதமான விளைவு களை ஏற்படுத்தும். 30 வயதுடையோர் 90 டெசிபல் வரை தாங்குவர். 50-60 வயதுடையோர் 80 டெசிபலுக்கு மேல் தாங்கமாட்டார்கள். செவிப்புலன் பழுதாகும், இது தவிர ரத்த அழுத்தம், இதயநோய், மன அழுத்தம் ஆகியவையும் ஏற்படுகின்றன. இரவில் 45 டெசிபலுக்கு மேல் ஒலி மூன்று நிமிடம் நீடித்தால் மனிதர்களில் ஐம்பது விழுக்காட்டினருக்கு மேல் தூக்கம் கலைந்துவிடும். மேற்கு ஐரோப்பாவில் மட்டும் ஒலி மாசு காரணமாக ஏற்படும் ரத்த அழுத்தம், இதய நோய்களால் ஆண்டுக்குப் பத்து லட்சம் நல ஆண்டுகள் இழக்கப்படுவதாக உலக சுகாதார நிறுவனம் கணக்கிட்டுள்ளது.
மறைமுகக் கொலை! - மனிதர்களுக்கே இந்தப் பாதிப்பு என்றால் காட்டுயிர்களை நினைத்துப் பாருங்கள். இவ்வளவுக்கும் காட்டு மரங்கள் ஒலியை ஈர்க்கும் தன்மை கொண்டவை. நகரச் சாலையோரமாக ஐம்பது அடி அகலத்தில் மரங்களை வளர்த்தால் ஒலியை 20-30 டெசிபல் அளவுக்குக் குறைத்திடலாம். முன்பு நகரங்களில் வீடுகளின் சுவரோரம் நெட்டிலிங்க மரங்களை வளர்த்தது அழகுக்காக மட்டுமல்ல, ஒலி மாசினைக் குறைக்கவும்தான்.
நிலம் மட்டுமன்றி கடலும் ஒலி மாசால் பாதிப்படைகிறது. கப்பல்கள், எண்ணெய் துரப்பணப் பணிகள், சோனார் கருவிகள், நில அதிர்வுக் கருவிகள் ஆகியவை அதற்குக் காரணமாகின்றன. கடல் பாலூட்டிகள் ஒலியலையைப் பயன்படுத்தியே தம் வாழ்வை இயக்கிக் கொள்கின்றன. ஆகவே, ஓங்கில் (டால்பின்), திமிங்கிலம் ஆகியவை பாதிப்படைகின்றன. சோனார் ஒலியின் அளவு 235 டெசிபல். அது கடலடியில் நூற்றுக்கணக்கான மைல்களுக்கு ஊடுருவிச் செல்லும். இது கடல் பாலூட்டிகள் கூட்டமாக இறந்து கரையொதுங்கக் காரணமாகிறது. எனவேதான், அமெரிக்கச் சுற்றுச்சூழல் குழுக்கள் அந்நாட்டு ராணுவத்தைக் கடலில் சோனார் ஒலியைப் பயன்படுத்தும் ராணுவ நடவடிக்கைகளை நிறுத்த சொல்லி கோரிக்கை எழுப்புகின்றன.
இதே போன்றுதான் காட்டு விலங்குகள் வழியறிதல், உணவுத் தேடல், இணையீர்ப்பு, இரைக்கொல்லியைத் தவிர்த்தல் ஆகிய பல காரணங்களுக்காகத் தமக்குள் ஒலி எழுப்பிக்கொள்கின்றன. காட்டில் நம்மால் ஏற்படுத்தப் படும் ஒலி மாசு அவற்றைப் பாதிக்கின்றது. குறிப்பாகக் காட்டுப் பகுதியில் அமைக்கப்படும் காற்றாலைகளாலும் பாதிப்பு ஏற்படுகின்றது என்பது ஆய்வு முடிவு. (அடுத்த வாரம்: காற்றாலையும் காடும்) - நக்கீரன் கட்டுரையாளர், சூழலியல் எழுத்தாளர், vee.nakkeeran@gmail.com