நல்ல பாம்பு 2: படமெடுத்து ஆடுவது எதற்காக?

நல்ல பாம்பு 2: படமெடுத்து ஆடுவது எதற்காக?
Updated on
2 min read

அந்த வீட்டை நான் சென்றடைந்தபொழுது இரவு எட்டுமணி. கொல்லைப்புறம் குப்பை மேடுகளும் சில இடங்களில் நீர் தேங்கியும் காணப்பட்டது. அங்கே எலிகள் ஓடியதைப் பார்த்தபொழுது பாம்புக்குத் தேவையான அனைத்தும் அங்கு இருந்ததைப் பார்க்க முடிந்தது. அந்த வீட்டு அம்மாவும் குழந்தைகளும் பதற்றத் துடன் இருந்தார்கள். “கொஞ்சம் கவனிக்கலைன்னா பாம்பை மிதிச்சிருப்பேன். பெரிய ‘நல்ல’ பாம்புங்க, படம் எடுத்து சீறுச்சு. இந்த விறகு குவியலுக்குள்ள போய் ஒளிஞ்சுக்கிட்டிருக்கு” என்றார். அது வெளிப்படுத்தும் உரத்த சத்தம் சிலரை உறைய வைக்கலாம். அதுவே சீற்றம் எனப்படுகிறது.

நான் கவனமாக ஒவ்வொரு விறகாக எடுத்தபோது, விறகின் ஊடே பாம்பின் உடலைப் பார்த்துவிட்டேன். விளக்கு ஒளியை அதன் மீது பாய்ச்சியபோது, கோதுமை நிற உடல், பளபளப்பான நீள்வட்டச் செதில்களுடன் இருந்தது. அது நல்ல பாம்புதான் (Spectacled Cobra - Naja naja).

வெளியில் எடுத்து பாம்பைத் தரையில்விட்டபோது, தன் முன் உடலினை உயர்த்தி, கழுத்தில் உள்ள விலா எலும்புகளை (Ribs) விரித்துப் படமெடுத்துக்(hood) காட்டியது. அதன் கழுத்தின் மேல்பகுதியில் ‘U’ வடிவ குறியீடு காணப்பட்டது. இக்குறியீட்டின் அளவு, அமைப்பு, நிறம் எல்லாப் பாம்புகளுக்கும் ஒன்றுபோல் இருப்பதில்லை. இது எதிரிகளை எச்சரிக்க, பயம்கொள்ளச் செய்ய, திசைதிருப்ப அல்லது குழப்பி விட்டு விலகிச் செல்ல அதற்கு உதவியாக இருக்கிறது. இந்தக் குறியீடு இப்பாம்பினத்திற்கே உரிய தனித்தன்மை.

விலகியிருக்க விரும்பும்

நல்ல பாம்பு, நாகம் என அழைக்கப்படுகிறது. இது நஞ்சுப் பாம்பு. நம் நாட்டில் எளிதில் எதிர்கொள்ளக்கூடிய நான்கு முக்கிய நஞ்சுப் பாம்புகளில் இதுவும் ஒன்று. எலாப்பிடே (Elapidae) குடும்பத்தில் நாஜா (Naja) என்கிற பேரினத்தில் உள்ள நான்கு பாம்பு இனங்களில் நல்ல பாம்பு மட்டுமே நாட்டில் பரவலாகக் காணப்படுகிறது. மற்ற மூன்று இனங்களும் இந்தியாவின் சில குறிப்பிட்ட பகுதிகளில் வாழ்கின்றன, தமிழ்நாட்டில் இல்லை.

இது தரைவாழ் பாம்பு என்பதால் வயல்வெளிகள், தோட்டங்கள், விறகுக் குவியல், கற்குவியல், எலி வளை, கைவிடப்பட்ட கரையான் புற்று என மறைந்து வாழக்கூடிய இடத்திலெல்லாம் வாழும். அவசியத்தைப் பொறுத்து, மரங்களில் ஏறவும் நீரில் நீந்தவும் செய்யும். நீர், இரை, தங்குவதற்குப் பாதுகாப்பான இடம் அமைந்தால் மனிதக் குடியிருப்புக்கு அருகிலேகூட இது தங்கிவிடும். இருந்தாலும், மனிதர்களிடமிருந்து விலகியிருக்கவே விரும்புகிறது.

பொதுவாக நீர்நில வாழ்விகள், ஊர்வன, பறவை கள், பாலூட்டிகள், அரிதாக மற்ற பாம்பினங்களை உணவாக்கிக்கொள்ளும். சில நல்ல பாம்புகள் 4 - 5 கோழி முட்டைகளை முழுவதுமாக விழுங்கியதைப் பார்த்திருக்கிறேன். இரையின் மீது நஞ்சைச் செலுத்திச் செயலிழக்கவைத்து உயிருடன் விழுங்கும். இது அப்பாம்பை பாதிப்பதில்லை, மாறாக செரிமானத்துக்கு உதவியாக இருக்கிறது.

பாம்புக் கடி

நல்ல பாம்பின் நஞ்சு (venom) நரம்பு மண்டலத்தைத் தாக்கும் (Neurotoxic). இக்கடியால் உடலில் தோன்றும் அறிகுறிகள் முடக்கு வாதம், கண்ணிமை செயலற்றுப் போதல், மங்கிய/இரண்டாகத் தெரியும் பார்வை, உதடுகள் மரத்துப்போதல், கடிபட்ட பகுதி (திசு) அழுகுதல், இறுதியில் இதயக் கோளாறுகளை (மாரடைப்பு) எதிர்கொண்டு இறக்க நேரிடலாம்.

இவற்றின் நஞ்சு வேகமாகச் செயல்படும். காலம் தாழ்த்தாமல் பாம்புக்கடிக்கான தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற வேண்டும். உடலில் செலுத்தப்பட்ட நஞ்சின் அளவு, கடிபட்டவர் உடல்நிலை, சிகிச்சை எடுக்க ஆகும் நேரம் போன்றவற்றைப் பொறுத்தே இறப்பு நேரிடும். பாம்புகள் கடிப்பதால் உடனே யாரும் மரணிப்பது இல்லை. விழிப்புணர்வுடன் உரிய நேரத்தில் சிகிச்சையைப் பெற்றால், பாதிப்பிலிருந்து தப்பிவிடலாம்.

நஞ்சுடைய இந்தப் பாம்பை நம் முன்னோர் ஏன் ‘நல்ல பாம்பு’ என்று அழைத்தார்கள்? அச்சுறுத்தலுக்கு உள்ளாகும்பொழுதும்கூடச் சட்டென்று தாக்காது. எச்சரித்தபடியே இருக்கும். யாரும் தாக்க முனையாதபோது, மெல்லத் தணிந்து அந்த இடத்திலிருந்து அகன்றுவிடும். தொந்தரவு ஏற்பட்டால் உடனே கடிக்காமல் மூடிய வாயால் அல்லது படத்தால் (Hood) எதிரியைத் தாக்கி பயம்கொள்ளச் செய்யும். சில நேரம் பொய்க்கடி (dry bite) கடிக்கும். இதனால், உடலில் நஞ்சு செலுத்தப்படாது. இதைத் தாண்டித் தனக்குப் பாதிப்பு ஏற்படும் எனக் கருதும்போது கடித்துவிடும். இந்தப் பாம்புகளால் அதிகம் கடிபடுவதற்குக் காரணம் இவற்றின் எண்ணிக்கையும், பரவலாக இருப்பதுமே. நம்முடைய அலட்சியமும் மற்றொரு முக்கியக் காரணம்.

அந்த இடத்திலிருந்து நான் புறப்பட இருந்த வேளையில், ‘இன்னும் நல்லா தேடுங்க. அதன் ஜோடி சாரைப்பாம்பும் இங்கேதான் இருக்கும்’ என்றார் ஒருவர். ‘நல்லபாம்பும் சாரைப்பாம்பும் இணைந்து நடனம் புரிந்தன’ என்கிற தவறான செய்தி இப்போதும் வருகிறது. இரண்டும் வெவ்வேறு குடும்பத்தை சார்ந்த இனம்.. இவை ஒரே பகுதியில் வாழலாம். ஆனால், ஒன்றுகூடி வாழ்வதில்லை, இணைசேர்வதும் இல்லை. நல்ல பாம்பு மூச்சுவிட்டா பூமி பிளக்குமா? வயதான பாம்பின் உடல் குறுகுமா? அதன் தலையில் மாணிக்கக் கல் இருக்கா? கொன்றால் பழிவாங்குமா? பால் குடிக்குமா? ஐந்து தலை நாகம் உண்டா? மகுடியின் இசைக்குப் பாம்பு ஆடுமா? கீரியைப் பாம்பு கடித்தால் கீரி சாகாதா எனப் பல கேள்விகள் அவர்களிடமிருந்து எழுந்தன. இவை பல காலமாக மக்களிடையே நிலவிவரும் சந்தேகங்கள். இவை எதுவுமே நிகழ்வதற்குச் சாத்தியமில்லை. புராணக் கதைகளும் ஊடகங்களும் பாம்புகள் சார்ந்த பொய்களைப் பரபரப்புக்காகப் பரப்பிவருகின்றன.

கட்டுரையாளர், ஊர்வன ஆராய்ச்சியாளர்

தொடர்புக்கு: oorvanapalli@gmail.com

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in