Last Updated : 29 Jun, 2019 12:30 PM

 

Published : 29 Jun 2019 12:30 PM
Last Updated : 29 Jun 2019 12:30 PM

அணுக் கழிவு வைப்பகம்: ஆபத்தின் மேல் அமர்ந்துள்ள கூடங்குளம்

அமெரிக்காவின் யுக்கா அணுக்கழிவு வைப்பகத் திட்டத்துக்கு இளம் எரிமலைகள் எதிராக அமைந்தது என்றால் கூடங்குளத்துக்கும் அது பொருந்தும். 1998 செப்டம்பர் முதல் வாரம் கூடங்குளத்திலிருந்து 26 கி.மீ. தொலைவிலுள்ள சிற்றூர்களான ஆனைக்குளம், பாண்டிச்சேரி ; 1998ஆகஸ்ட் 6 தேதி 66 கி.மீ. தொலைவிலுள்ள திருநெல்வேலி அபிஷேகப்பட்டி; 1999 செப்டம்பர் 29 திருநெல்வேலி திருப்பணிக்கரிசல் குளம்; 2001 நவம்பர் 24ல் 96 கி.மீ. தொலைவிலுள்ள சுரண்டை; 156 கி.மீ. தொலைவிலுள்ள அருப்புக்கோட்டை அருகிலுள்ள சுக்கலிநத்தம் ஆகிய ஊர்களில் சிறியளவிலான எரிமலை வெடிப்புகள் நிகழ்ந்துள்ளன.

செயலூக்கம் கொண்ட அச்சன்கோவில், தென்மலை, கடனா, சென்னை - கன்னியாகுமரி ஆகிய நிலப்பிளவுகளில் இந்த எரிமலை வெடிப்புகள் நிகழ்ந்துள்ளதாக சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கான மருத்துவர் குழு அறிக்கை தெரிவிக்கிறது. இதுபோன்ற சமகால எரிமலை வெடிப்புகள் (Small volume volcanic eruptions) யுக்கா மலைப்பகுதிகளில் நிகழாத நிலையிலேயே அமெரிக்க அரசு அத்திட்டத்தை நிறுத்தியதை கவனத்தில் கொள்ளவேண்டும். .

கூடங்குளம் பகுதியின் கண்ட மேலோடு உறுதி குன்றிக் பிளவுபட்டிருப்பதை (paleo rift) திருவனந்தபுரம் நிலவியல் பேராசிரியர் டாக்டர் பிஜூ லாங்கினோஸ், பேராசிரியர் ராம சர்மா ஆகியோர் ஆய்வில் கண்டறிந்துள்ளனர். பொதுவாகக் கண்ட மேலோடு 40 கி.மீ. பருமனிலும், கடல் மேலோடு 30 கி.மீ. பருமனிலும் இருக்கும்.

ஆனால், அணு உலைகள் அமைந்துள்ள இடத்தின் கீழே அது 110-150 மீட்டர் பருமனே உள்ளது. ஆனால், மத்திய அரசு முன்பு அமைத்த வல்லுநர் குழுவின் 38 பக்க அறிவியல் அறிக்கையில் இதுகுறித்து எதுவும் சொல்லப் படவில்லை என்று அன்றைக்கே குற்றம் சாட்டப்பட்டது.

ஐயங்கள் நிறைந்த இடம்

இங்கு பிதுங்கு எரிமலைப் பாறை படிமங்களும் (Sub volcanic rocks) காணப்படுகின்றன. பன்னாட்டு அணுவாற்றல் அமைப்பு 2011 மே மாதம் வெளியிட்ட ‘அணுமின் நிலையங்களுக்கான எரிமலைப் பேரிடர் ஆய்வு’ குறித்த அறிவியல் ஆவணம், அணுமின் நிலையங்களைக் கட்டும்போது அவற்றின் அமைவிடங்களில் பிதுங்கு எரிமலைகள், எரிமலை இயக்கங்கள் உள்ளனவா என்பதை ஆய்வுசெய்து, அவற்றால் ஏற்படவுள்ள ஆபத்தைக் கணக்கிடுவது குறித்த கணக்குகளை தெளிவாகவே முன்வைத்திருந்தும், அவை கண்டுக்கொள்ளப்படவில்லை. அவை அணுக்கழிவு சேமிப்புத் தளத்துக்கும் பொருந்தக் கூடியவையே.

ஏனென்றால் எரிமலைச் செயற்பாடு அல்லது மக்மா ஊடுருவல்கள் நிலத்தடி நீரின் இயக்கப் போக்கை மாற்றியமைக்கும் தன்மை கொண்டவை. நிலத்தடி நீர் மட்டத்தில் ஏற்படும் மாற்றத்தால்

‘கார்ஸ்ட்’ எனும் நிலத்தில் குழிவிழும் தன்மை உருவாகும். ஏற்கெனவே ராதாபுரம் அருகே இரண்டு கார்ஸ்ட் குழிவிழும் நிகழ்வுகள் நிகழ்ந்துள்ளன. இதனால் இது எரிமலைப் பாறைகளுடன் தொடர்புடைய கார்ஸ்ட் பகுதியாக இருக்குமோ என்று ஐயம் தெரிவித்துள்ளது ரமேஷ், புகழேந்தி, வி.டி பத்மநாபன் ஆகியோர் வெளியிட்ட சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கான மருத்துவர் குழுவின் அறிக்கை.

1993 டிசம்பர் ஆறாம் தேதியில் M 5.2 ஆற்றல் கொண்ட நிலநடுக்கம் கூடங்குளம் நிலையத்திலிருந்து 157 பாகை தென்மேற்கில், 163 கி.மீ. தொலைவில் ஏற்பட்டுள்ளது. இதன் மையம் கிழக்குக் குமரி வண்டல் குவியலின் மையப்பகுதியில் அமைந்தது. கூடங்குளம் அணுமின் திட்டம் தொடங்கப்பட்டபின் வந்த நிலநடுக்கம் இது.

என்றாலும் இதைப் பற்றி இந்திய அணுவாற்றல் துறை பேசியதே இல்லை என்று அவ்வறிக்கை மேலும் தெரிவிக்கிறது. இவ்வளவு ஐயங்கள் நிறைந்த ஓரிடத்தில் சேமிக்கப்படும் கழிவால், ஓர் ஆபத்து நேரிட்டால் அதைத் தடுக்க யாரால் முடியும்?

கதிர்வீச்சும் மனித மூச்சும்

உலகில் எவ்வளவு கதிரியக்கக் கழிவுகள் உள்ளன என்பது யாருக்குமே தெரியாத புதிர். வியன்னாவில் இயங்கும் சர்வதேச அணுசக்தி முகமைக்குக் (IAEA) கூட இது தெரியாது. தோராயமான மதிப்பீட்டைத்தான் இவ்வமைப்பும் சார்ந்துள்ளது.

2010-ல் 3,45,000 டன் கழிவுகள் இருக்கலாம் என்று இந்த அமைப்பு மதிப்பிட்டது. எதிர்வரும் 2022-ல் 4,50,000 டன்னாக உயரலாம் என்றும் எதிர்பார்க்கிறது. இத்தனை கழிவுகளையும் வைத்துக்கொண்டு நாம் என்ன செய்யப் போகிறோம்?

உண்மையில் கதிரியக்கக் கழிவுகள் பாதுகாப்பற்றவை என்பதை அனைத்து நாடுகளும் உணர்ந்துள்ளன. ஆனால் வெளியே ஒப்புக்கொள்வதில்லை. இதற்காக அவை தீட்டிய கற்பனைக்கெட்டாத திட்டங்களை அறிந்துக்கொண்டாலே, இவை பற்றி எளிதில் விளங்கும்.

அவற்றில் ஒன்று கழிவைக் கலன்களில் அடைத்து விமானம் வழியே வானிலிருந்து அண்டார்டிகா பகுதிக்குள் வீசிவிடுவது. அவை பனிப்பாளத்தின் ஆழத்துக்குள் ஊடுருவி உருகிவிடுமாம். 1956-ல் ஜெர்மன் விஞ்ஞானி தெரிவித்த இந்தக் கருத்துத் தொடர்ச்சியாக உலக வணிக மாநாடுகளில் பல ஆண்டுக் காலம் விவாதிக்கப்பட்டு வந்தது.

அமெரிக்க அறிவியலாளர்கள் கழிவை சூரியனுக்குள் செலுத்த முடியுமா என்றும் யோசித்தனர். பாதுகாப்புக் காரணத்தாலும் அதிக செலவு பிடிக்கும் என்பதாலும் இந்த யோசனை கைவிடப்பட்டது. அரைக் கிலோ கழிவைப் புவிச் சுற்றுப்பாதையில் அனுப்பி வைக்க 10,000 டாலர்கள் செலவாகும்.

அமெரிக்காவிடம் மட்டும் ஏறக்குறைய 70,000 டன் கழிவு உள்ளது. கழிவை ஆழ்கடலுக்குள் புதைக்கும் திட்டமும் ஆய்வு செய்யப்பட்டுக் கைவிடப்பட்டது. இதற்கிடையே கழிவைக் கடலுக்குள் கொட்டுவதாகப் பரவலாகப் புகாரும் எழுந்தது.

கைகொடுக்காத திட்டங்கள்

1997-ல் சர்வதேச அணுவாற்றல் முகமை கழிவை உற்பத்தி செய்யும் நாடுகள் முடிந்தவரை அவற்றைத் தம் எல்லைக்குள்ளேயே அகற்ற வேண்டும்; எதிர்காலத் தலைமுறைகளின் மீது தேவையற்ற சுமையைத் திணிக்கக்கூடாது என்று அறிவுறுத்தியது.

இதன்படி அணுக்கழிவு வைப்பகம் அமைக்க முயன்றபோது பல நாடுகளில் எதிர்ப்பு எழுந்தது. குறிப்பாக நெவாடாவின் யுக்கா மலைத்தொடர் ஆழ்தள வைப்பகத் திட்டத்துக்கான மக்களின் எதிர்ப்பைச் சமாளிக்க அமெரிக்க அணுவாற்றல் துறை DAD என்கிற அணுகுமுறையைப் பின்பற்றியது. ‘முடிவெடுத்தல் – அறிவித்தல் – தற்காத்தல்’ (Decide-Announce-Defend) அணுகுமுறை என்று இதற்குப் பொருள்.

உலகின் மற்ற நாடுகளும் இன்றைக்கு மக்களின் கருத்துக்கு மதிப்பளிக்காமல் இம்முறையைப் பின்பற்றத் தொடங்கியுள்ளன. இதற்காக எத்தகைய அடக்குமுறையையும் கையாள அவை தயங்குவதில்லை. ஆனால், இப்படி வலுக்கட்டாயமாக நடைமுறைப்படுத்தப்பட்ட யுக்கா திட்டத்துக்கு என்ன நேர்ந்தது என்பதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

இந்த DAD அணுகுமுறையில் யுக்கா திட்டத்துக்கு 30 ஆண்டுகளுக்கு முன்னரே கன்சாஸின் லையோன்ஸ் எனுமிடத்தில் அணுக்கழிவுத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுத் தோல்வியடைந்தது. 1990-க்கு முன்பு பிரான்ஸும் இதைப் பயன்படுத்திக் கைவிட்டது.

பிரிட்டனும் இம்முறையைக் கைவிட்டபின் மக்களின் பங்கேற்பைக் கோரியது. ஆனால் அணுஉலை நட்பு நாடாக (atomic friendly country) விளங்கிய ஜப்பானிலும்கூடக் குடிமக்கள் பங்கேற்பு உதவவில்லை என்பதை ஃபுகுஷிமா விபத்து காட்டியுள்ளது.

எந்த மொழியில் எச்சரிக்கை?

யுக்கா திட்டம் நிறைவேற்றப்பட்ட அரசியல் சூழலும் கவனத்துக்குரியது. ‘நெவாடாவை வஞ்சிக்கும் திட்டம்’ என அம்மக்களால் அழைக்கப்பட்ட இத்திட்டம் அமெரிக்க நாடாளுமன்றத்தில் நெவாடாவின் அரசியல் வலு, குறைவாக இருந்தபோதுதான் நிறைவேற்றப்பட்டது. இன்றைய தமிழக ஆட்சியின் அரசியல் வலு என்னவென்பதை நாம் அறிவோம்.

இந்நிலையில்தான் கூடங்குளத்தில் அணுக்கழிவை வைக்கும் திட்டம் கொண்டு வரப்படுகிறது. ஸ்விட்சர்லாந்தைப் போல் நமக்கு வாக்கெடுப்பு அதிகாரமும் கிடையாது. இருந்திருந்தால் வைப்பகம் அமைக்கும் முயற்சியில், அங்கு நடந்ததுபோல் எதிர்த்து வாக்களித்துத் தீர்மானத்தைத் தோற்கடிக்கலாம். அறிவியல் ஆய்வுகளைவிட அரசியல் செல்வாக்கே இங்கே அனைத்தையும் உந்தித் தள்ளுகிறது.

பாதுகாப்பு என்பது சமூக நலனே அன்றி வெறும் தொழில்நுட்ப சொற்களல்ல என்பதை அறம் சார்ந்த அரசுகள் மட்டுமே அறியும். கதிரியக்கக் கழிவுகளின் எதிர்காலப் பாதுகாப்புக் குறித்து அறிஞர்கள் பதற்றம் கொள்கின்றனர். சில நூற்றாண்டுகள் கழித்துத் தொல்லியல் ஆய்வு என்ற பெயரில் இருப்பிடம் அறியாது, அணுக்கழிவு வைப்பகங்கள் தோண்டப்பட்டால் என்னவாகும்? எதிர்காலத்

தலைமுறைக்காக நாம் என்ன வகையான சமிக்ஞைகளை அந்த ஆபத்தான இடத்தில் விட்டுச் செல்லப் போகிறோம்? அவற்றை எந்த மொழியில் பொறிப்பது? 10,000 ஆண்டுகளுக்குப் பின்னர் வரும் தலைமுறை புரிந்துக்கொள்ளக்கூடிய ஓர் அபாயச் சின்னத்தை உருவாக்க அறிவியலாளர்கள் ஆய்வு செய்துவருகின்றனர்.

நினைவு சின்னம் கட்டுவது, இந்த ஆபத்தை விளக்கும் புதிய மதத்தை உருவாக்குவது என்றெல்லாம் ஆய்வுகள் தொடர்கின்றன. நாம் கழிவைக் குவிப்பது பற்றி மட்டுமே கவலை கொள்கிறோம்.

மனித மூச்சு மிஞ்சுமா?

ஹோமோசேபியன் எனும் தற்கால மனித இனம் பானை செய்யும் தொழில்நுட்பத்தைக் கண்டறிந்து 30,000 ஆண்டுகள் ஆகின்றன; நாம் பிளந்துள்ள புளூடோனியம்-239 கழிவின் அரை ஆயுட்காலம் தீர இன்னும் 24,000 ஆண்டுகள் ஆகும். 2,00,000 ஆண்டுகளுக்கு முன்னர் நியாண்டர்தால் மனிதர்கள் உலகம் முழுதும் பரவினார்கள்; புளூடோனியம்-242 கதிர்வீச்சின் அரை ஆயுட்காலம் 3,75,000 ஆண்டுகள்வரை பரவியிருக்கும்.

ஹோமோ எரக்டஸ் மானுட இனம் கல் கோடரியைக் கண்டுபிடித்து 15 இலட்சம் ஆண்டுகள் முடிந்துவிட்டன; நாம் உருவாக்கிய நெப்டூனியம்-237 கதிர்வீச்சின் அரை ஆயுட்காலம் இன்னும் 21 லட்சம் ஆண்டுகளுக்கு முடியப் போவதில்லை.

இறுதியான கேள்வி இதுதான். அயோடின்-129-ன் அரை ஆயுட்காலம் ஒரு கோடியே 60 இலட்சம் ஆண்டுகள். தோராயமாக இதே கால அளவுக்கு முன்னர்தான் குரங்குக்கும் நமக்குமான பொது மூதாதையிலிருந்து மனித இனம் தோன்றியது. அடுத்த ஒரு

கோடியே அறுபது லட்சம் ஆண்டுக் காலத்துக்குப் பிறகு அயோடின்-129ன் கதிர்வீச்சு இருக்கும். ஆனால் மனித மூச்சு இருக்குமா?

கட்டுரையாளர், சூழலியல் எழுத்தாளர்

தொடர்புக்கு: vee.nakkeeran@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x