Published : 12 Nov 2013 12:00 AM
Last Updated : 12 Nov 2013 12:00 AM

தமிழக அரசின் புதிய திட்டம் - இண்டக்சன் அடுப்பு இறப்பைத் தடுக்குமா?

உலகம் முழுவதும் ஒவ்வொரு வருடமும் 35 லட்சம் பேர் சுவாசக் கோளாறுகளால் இறப்பதாக 'உலக நோய்ச் சுமைப்' பட்டியல் தெரிவிக்கிறது. இதில் இந்தியர்களின் எண்ணிக்கை 12 சதவிகிதம். இதற்குக் காரணம் வீட்டுக்குள் இருக்கும் மாசுபட்ட காற்றுதான். அந்த மாசுக் காற்று சமையல் செய்யும்போது உருவாகும் புகையால் ஏற்படுகிறது என்று அந்தப் பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மனிதர்களுக்கு மட்டுமில்லாமல் சுற்றுச்சூழலுக்கும் கேடு விளைவிக்கும் இந்த காற்று மாசுபாட்டைக் குறைப்பதில் தமிழக அரசு வழங்க இருக்கிற 'இண்டக்சன் அடுப்பு' பெருமளவு கைகொடுக்கும் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

2010ஆம் ஆண்டு அமெரிக்காவின் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் உள்ள 'இன்ஸ்டிடியூட் ஃபார் ஹெல்த் மெட்ரிக்ஸ்' துறை பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஆய்வாளர்களைக் கொண்டு 'உலக நோய்ச் சுமைப் பட்டியல்' ஒன்றைத் தயாரித்தது. அந்த ஆய்வுப் பட்டியல் 'லான்செட்' எனும் பிரபல மருத்துவ இதழில் சமீபத்தில் வெளியிடப்பட்டது. அந்தப் பட்டியலை அடிப்படையாகக்கொண்டு ஒவ்வொரு நாட்டையும் அதிகமாக பாதிக்கிற நோய்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. இந்தியர்கள் பலர் சுவாசக் கோளாறுகளால் இறக்கின்றனர் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக நடந்த இந்த ஆய்வு, சென்னை ஸ்ரீ ராமச்சந்திரா பல்கலைக்கழகத்தின் சுற்றுச்சூழல் சுகாதாரப் பொறியியல் துறை வடிவமைத்த செயல்பாடுகளின்படி மேற்கொள்ளப்பட்டது. சுமார் 15 ஆண்டுகளாக காற்று மாசுபாடு ஆய்வில் பங்கேற்று வரும் ராமச்சந்திரா பல்கலைக்கழகம், இந்தியாவின் பல மாநிலங்களில் ஆய்வு செய்து தேசிய அளவிலான காற்று மாசுபாடு பற்றிய விவரங்களைத் தொகுத்துள்ளது. இத்துறையின் தலைவர் சங்கர் கூறுகையில், "நாட்டில் பலர் சுவாசக் கோளாறுகளால் இறக்கின்றனர். இதற்குக் காரணம் வீடுகளில் சமையல் செய்யும்போது வெளியாகும் புகைதான். முறையான அடுப்பு இல்லாதது, நல்ல எரிபொருள்கள் இல்லாதது, சமையலறையில் காற்றோட்ட வசதி இல்லாததுமே புகை வெளியாவதற்கான காரணங்கள்.

இதனால் ஏற்படும் காற்று மாசுபாட்டின் அளவு உலக சுகாதார நிறுவனம் வரையறுத்துள்ள பாதுகாப்பான அளவைவிட அதிகமாக உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மேம்படுத்தப்பட்ட அடுப்புகள் மூலம் சுமார் 25 முதல் 60 சதவிகிதம் வரை காற்று மாசுபாட்டைக் குறைக்க முடியும். ஆனால், அத்தகைய அடுப்புகளுக்கான விலையும், உதிரி பாகங்களும், தேவையான எரிபொருள்களும், அவற்றைப் பயன்படுத்துவதற்கான முறைகள் பற்றிய விழிப்புணர்வும் பெரும்பாலான மக்களிடம் இல்லை.

இந்நிலையில் தமிழக அரசு நீலகிரி மற்றும் கொடைக்கானல் பகுதிகளில் மிக்ஸி, கிரைண்டர் போன்றவற்றுக்குப் பதிலாக இண்டக்சன் அடுப்புகளை வழங்க உள்ளதாக அறிவித்துள்ளது. இந்த வகையான அடுப்புகளில் சமையல் செய்யும்போது புகை வெளியாகாது. இதன் மூலம் காற்று மாசடைவதைத் தடுப்பதுடன் பலரையும் சுவாசக் கோளாறுகளில் இருந்து காப்பாற்ற முடியும்.

அந்த அடுப்புகளை மாநிலம் முழுக்க விநியோகிக்க அரசு முன் வந்தால் பலரை சுவாசக் கோளாறுகளில் இருந்து காப்பாற்ற முடியும். இத்திட்டம் நடைமுறைக்கு வந்தால் அது நாட்டுக்கே முன்னோடியான ஒரு திட்டமாக இருக்கும்" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x