Published : 10 Mar 2018 12:22 PM
Last Updated : 10 Mar 2018 12:22 PM

‘ஆரண்ய’ காவலன்!

 

சு

ட்டெரிக்கும் வெயில், பொசுக்கிவிடும் காட்டுத் தீ, கால் இடறினால் மரணத்துக்கு இட்டுச் செல்லும் கரடு முரடான பாறைகள், முழுக்க முழுக்க நடந்தே கடந்தாக வேண்டிய காட்டுப் பாதைகள், நாட்கணக்கில் மரக்கிளைகளில் வாசம் செய்தல்… காடுகளையும் காட்டுயிர்களையும் பாதுகாப்பதற்காக வனப் பாதுகாப்பு அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டிய இடர்பாடுகளில் ஒரு சில இவை. புலி, யானை போன்ற காட்டுயிர்களை மட்டுமல்லாமல் சில நேரம் கள்ள வேட்டைக் கும்பல், சுரங்க மாஃபியாக்கள் போன்றவர்களையும் வனப் பாதுகாப்பு அதிகாரிகள் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். அவ்வாறு எதிர்கொள்ளும்போது உயிரிழக்கவும் நேரிடும்.

மேற்கண்ட எல்லாவற்றையும் பொறுத்துக்கொண்டு காடுகளை அவர்கள் பாதுகாக்கிறார்கள் என்றால், அதற்கு அவர்கள் பெறும் ஊதியம் மட்டும்தான் காரணமா? அப்படிப் பலர் இருக்கலாம். அதையும் தாண்டி, இயல்பாகவே இயற்கையின் மீது கரிசனம் கொண்ட சிலரே, சிவில் சர்வீஸ் தேர்வுகளில் ஐ.ஏ.எஸ். பணி கிடைத்தாலும்கூட, அதை விடுத்து ஐ.எஃப்.எஸ். எனும் இந்திய வனப் பணிக்கு வருகிறார்கள். இன்னும் சிலர், ஐ.எஃப்.எஸ். அதிகாரி ஆவதற்காக மட்டுமே சிவில் சர்வீஸ் தேர்வெழுதுகிறார்கள். அந்தப் பணி கிடைத்து, அதில் தங்களின் கடமையைச் செவ்வனே செய்கிறார்கள். மிகச் சிலரே, அந்தப் பணிக்கு பெரும் மரியாதையை ஏற்படுத்தித் தருகிறார்கள். மணிகண்டன் அப்படிப்பட்ட அதிகாரிகளில் ஒருவர்!

10chnvk_manikandan1.jpeg மணிகண்டன்

பெங்களூருவில் உள்ள நாகர்ஹோளே புலிகள் காப்பகத்தில் வனப் பாதுகாப்பு அதிகாரியாகப் பணியாற்றிவந்த மணிகண்டன், கடந்த 3-ம் தேதி யானை எதிர்கொண்டபோது உயிரிழந்தார். வனத்தை நேசித்த அந்த மனிதர் இறந்த அந்த நாள்… ‘உலகக் காட்டுயிர் நாள்!’

யானையின் திடீர் வருகை

தேனி மாவட்டம் கம்பம் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன், தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் பூச்சியியல் துறையில் முனைவர் பட்டம் பெற்றவர். இந்திய வனப் பணிக்கு வருவதற்கு முன்பு, கர்நாடகாவில் உள்ள ‘இன்ஸ்டிட்யூட் ஆஃப் வுட் சயன்ஸ் அண்ட் டெக்னாலஜி’யில் பேராசிரியராகச் சில காலம் பணியாற்றினார். 2001 பேட்ச் கர்நாடக கேடர் அதிகாரியான இவர், கர்நாடகத்தின் பெல்லாரி, பிதார், ராய்ச்சூர் மாவட்டங்களில் உள்ள காட்டுப் பகுதிகளில் பணியாற்றியவர், சில ஆண்டுகளாக நாகர்ஹோளே புலிகள் காப்பகத்தில் வனப் பாதுகாப்பு அதிகாரியாகப் பணியாற்றி வந்தார்.

சம்பவம் நடப்பதற்கு சில நாட்களுக்கு முன்னர், கபினி ஆற்றுக்கு அருகில் உள்ள தொட்ட பைரனகுப்பே காட்டில் காட்டுத்தீ மூண்டது. அதைப் பற்றி விசாரணை நடத்துவதற்காக, சம்பவ நாளன்று அந்தக் காட்டுக்குத் தன் குழுவினருடன் சென்றுள்ளார் மணிகண்டன். அப்போது, தீ ஏற்பட்ட பகுதியை ஜி.பி.எஸ். கருவி மூலம் கணக்கிடுவதில் தன் கவனத்தைச் செலுத்தியிருந்தார். அப்போது, அவர் பின்னாலிருந்து காட்டு யானை ஒன்று வந்தது. எல்லோரும் ஒவ்வொரு திசை நோக்கி ஓட, மணிகண்டனும் ஓடினார்.

அப்போது அங்கிருந்த பள்ளம் ஒன்றில் மணிகண்டன் விழுந்தபோது, அந்த யானை அவரை எதிர்கொண்டது. பின்னர், யானை அங்கிருந்து சென்றுவிட, காயமடைந்த மணிகண்டனை ஹெச்.டி.கோட்டே அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.

வனத்துக்குள் கண்காணிப்புக்காகச் செல்லும் வனப் பாதுகாவல் அதிகாரிகள், தங்கள் கைகளில் துப்பாக்கி வைத்திருக்க வேண்டும் என்ற விதி உள்ளது. ஆனால், மணிகண்டன் இறந்த அன்றைய நாளில், யாரிடமும் துப்பாக்கி இருக்கவில்லை. “துப்பாக்கி இருந்திருந்தாலும், அதனால் எந்தப் பயனும் விளைந்திருக்காது. காரணம், இது யாருமே எதிர்பாராத இடத்தில், நேரத்தில், ஒற்றை யானையால் ஏற்பட்ட திடீர் நிகழ்வு. அதனால் நாம் எவரையும் குற்றம் சொல்ல முடியாது” என்கிறார்கள் சக வன அலுவலர்கள்.

10chnvk_manikandan3.jpg மருத்துவமனைக்கு மணிகண்டன் கொண்டு வரப்பட்டபோது...rightசுரங்க ஊழலைக் கட்டுப்படுத்தியவர்

யானைகளின் பாதுகாப்பு மட்டுமல்லாது, மனித-உயிரின எதிர்கொள்ளல் தொடர்பாகவும் மிகுந்த கவனம் செலுத்தியவர் மணிகண்டன். அவர் நேசித்த காட்டுயிர் மூலமாகவே அவரது மரணமும் நிகழ்ந்துவிட்டதுதான் சோகம்.

பெங்களூருவில் மணிகண்டனுடன் இணைந்து ஏழு ஆண்டுகள் பணியாற்றியவர், முருகேசன். ஒடிசா கேடரைச் சேர்ந்த அதிகாரியான இவர், மணிகண்டனைப் பற்றிய சில நினைவுகளைப் பகிர்ந்துகொண்டார்.

“நேர்மையான அதிகாரி என்று பெயர் எடுத்தவர் மணிகண்டன். அவரைப் போன்ற அதிகாரிகளால்தான் பெல்லாரியில் நடைபெற்று வந்த சுரங்க ஊழல்கள் கட்டுப்படுத்தப்பட்டன. சுரங்க நிறுவனங்களிடம் கடுமை காட்டிய அவர், வனத்தில் உள்ள பழங்குடிகளிடம் அன்பாக இருந்தார்” என்றார்.

மணிகண்டனின் சேவையைப் போற்றும் வகையில், பெங்களூரு மல்லேஸ்வரம் பகுதியில் உள்ள ஆரண்ய பவன் சாலையின் பெயரை ‘மணிகண்டன் ஐ.எஃப்.எஸ். சாலை’ என்று சில நாட்களுக்கு முன்னர் பெயர் மாற்றம் செய்துள்ளது கர்நாடக அரசு.

45 வயதான மணிகண்டனுக்கு மனைவி, இரண்டு குழந்தைகள் உள்ளனர். அவர்களுக்கு உதவ, கர்நாடகத்தில் உள்ள இந்திய வனப் பணி சங்கம், இந்தியன் வங்கியில் தனியாகக் கணக்கு ஒன்றைத் தொடங்கியுள்ளனர். அதன் மூலம் அந்தச் சங்கத்தில் உறுப்பினர்களாக இருப்பவர்களிடம் மட்டுமிருந்து நிதி திரட்ட உள்ளனர். மற்றபடி, அவரது குடும்பத்துக்கு உதவ விரும்புபவர்கள் கீழ்க்கண்ட எண்ணைத் தொடர்பு கொள்ளலாம்.

மனோஜ் (மணிகண்டனின் உறவினர்) - 9843422011

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x