Last Updated : 02 Feb, 2019 12:10 PM

 

Published : 02 Feb 2019 12:10 PM
Last Updated : 02 Feb 2019 12:10 PM

தாமரை இலையில் இறைச்சி!

குமரி மாவட்டத்தில் பிளாஸ்டிக்குக்கு மாற்றாக அதிகமானோரால் தாமரை இலை பயன்படுத்தப்படுகிறது. பூக்கடைகளில் இருந்து இறைச்சிக்கடை வரை தாமரை இலையின் பயன்பாடு பெருகியிருக்கிறது. இலை ஒன்று 1 ரூபாய்க்கு மேல் விற்பனையாகிறது. இதனால் ஒரு புதிய தொழில் பிறந்துள்ளது. இதனால் வாழ் வாதாரத்துக்கான புதிய வழியும் திறந்திருக்கிறது.

பிளாஸ்டிக் தடை தற்போது அமலில் இருக்கும் நிலையில், அதற்கு மாற்றான பொருட்களைப் பயன்படுத்துவதில் மக்கள் மத்தியில் குழப்பம் உள்ளது. பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு குமரியில் 2010-ம் ஆண்டில் இருந்தே கட்டுப்பாடுகள் இருந்தாலும், அது பெயரளவுக்கே கடைபிடிக்கப்பட்டது. தற்போது பெட்டிக் கடைகளில் இருந்து பெரும் வர்த்தக நிறுவனங்கள் வரை தாமாக முன்வந்து பிளாஸ்டிக் பொருட்களைத் தவிர்த்து வருகின்றனர்.

டீ கடைகளில் பார்சல் டீயை பாத்திரங்களில் வாங்கிச் செல்கின்றனர். இதுபோல் உணவு பொருட்களைக் கட்ட நெகிழிக்குப் பதிலாக வாழை இலை, பாத்திரங்கள் போன்றவற்றைப் பயன்படுத்தத் தொடங்கியிருக்கின்றனர்.

குறிப்பாக இறைச்சி வியாபாரிகள் தாமரை இலையையே முழுவதுமாகப் பயன்படுத்துகின்றனர். இதனால் குமரி மாவட்டத்தில் தாமரை இலை வர்த்தகம் எப்போதும் இல்லாத வகையில் அதிகரித்துள்ளது. அதிக நீர்நிலைகள் கொண்ட மாவட்டமான கன்னியாகுமரியில், பொதுப்பணித்துறை நீர்ஆதாரக் கட்டுப்பாட்டில் மட்டும் 2,040 குளங்கள் உள்ளன. இது தவிர கோயில்கள் வசமும் தனியார் வசமும் ஏராளமான குளங்கள் உள்ளன.

தொடக்கத்தில் தாமரை இலைகள் பயன்பாட்டில் இருந்தாலும் குளங்களின் நீர்ப்பிடிப்புத் தன்மையைத் தாமரைத் தண்டுகள், வேர்ப்பகுதிகள் குறைப்பதாகக் கூறிக் குளங்களில் தாமரை வளர்ப்பதற்குக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது.

ஆனால் கடந்த 1-ம் தேதி பிளாஸ்டிக் தடை விதிக்கப்பட்டதில் இருந்து மாவட்டம் முழுவதும் குளங்களில் உள்ள தாமரை இலைகளைப் பறித்து விற்பனைக்குக் கொண்டுவருவதில் வியாபாரிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். குத்தகையில் இருக்கும் குளங்களிலும் பறிக்கப்படும் தாமரை இலைகளைக் கட்டு கட்டாக வாங்கிச் செல்கின்றனர்.

thamarai-2jpg

தாமரைப் பூ ஒன்று சராசரியாக ரூ.2க்கு விற்பனை ஆகும் நிலையில் தாமரை இலை ஒன்று 1 ரூபாய்க்கு மேல் விற்பனை ஆகிறது. இதனால் ஆயிரக்கணக்கானோர் நேரடியாகவும் மறைமுகமாகவும் தாமரை இலை மூலம் பயன்பட்டு வருகின்றனர்.

பூக்கடைகள், இறைச்சி கடைகள் முழுவதும் தாமரை இலைகள் பயன்பாடே உள்ளது. இதுகுறித்து தோவாளை மலர் சந்தை வியாபாரி குமார் கூறுகையில் “பிளாஸ்டிக் தடையால் பூக்கள் விற்பனைக்கு தாமரை இலையையே முழுவதுமாக பயன்படுத்தி வருகிறோம். தோவாளை சந்தையில் மட்டும் தினமும் 10 டன்னிற்கு மேல் தாமரை இலைகள் பயன்பாட்டுக்கு வருகிறது. தாமரை இலை ஒன்று குறைந்தது ரூ.1 முதல் வாங்குகிறோம்.

பெரிய இலையைப் பல துண்டுகளாக்கியும் பயன்படுத்த முடியும். பிளாஸ்டிக் கவர் போன்று பூக்களை எளிதாகக் கொடுக்க முடியாவிட்டாலும், இலையில் கொடுப்பதால் பூக்கள் இயற்கை தன்மையுடன் இருக்கிறது. மேலும் இலைகளை நிலத்தில் போட்டாலும் மக்கிப் போய்விடும். இதனால் சிரமத்தைப் பார்க்காமல் நெகிழிக்கு மாற்றாகத் தாமரை இலையைப் பயன்படுத்துகிறோம்” என்றார்.

இதைப் போலவே குமரி மாவட்டத்தில் உள்ள ஆயிரக்கணக்கான இறைச்சிக் கடைகளில் தாமரை இலையே பயன்படுத்தப்படுகிறது. பிளாஸ்டிக்கைப் போல் அல்லாமல் இறைச்சியை பார்சலாக்கி கொடுக்க தாமரை இலை உகந்ததாக உள்ளதாக இறைச்சி வியாபாரிகள் தெரிவித்தனர். தாமரை இலைக்கு உள்ள மவுசால் தற்போது குளங்களைக் குத்தகை எடுத்து அதிக அளவில் தாமரை உற்பத்திச் செய்யும் பணி குமரியில் சூடுபிடித்து வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x