Last Updated : 13 Jan, 2024 06:00 AM

 

Published : 13 Jan 2024 06:00 AM
Last Updated : 13 Jan 2024 06:00 AM

இயற்கையின் பேழையிலிருந்து! - 18: எட்வர்ட் பல்ஃபோர் எனும் பல்துறை வித்தகர்

அந்தக் கால சென்னை அரசு அருங்காட்சியகம்

சென்னை அரசு அருங்காட்சி யகத்தின் முதன்மைக் கட்டிடத்தின் உள்ளே நுழைந்தவுடன் இருபுறமும் மரத்தால் ஆன பழைமையான சுழல் கதவுகள் இருக்கும். அவற்றைக் கடந்து செல்லும்போது இடது பக்கம் ஓர் ஆங்கிலேயரின் பெரிய ஓவியம் மாட்டப்பட்டிருக்கும். ஆனால்,நம்மில் எத்தனை பேர் அந்த ஓவியத்தைக் கவனித்திருப்போம்? அந்த ஒவியத்தில் இருப்பது அரசு மத்திய அருங்காட்சியகத்தை (தற்போதைய சென்னை அரசு அருங்காட்சியகம்) 1850களில் நிறுவிய எட்வர்ட் கிரீன் பல்ஃபோர் எனும் கிழக்கிந்திய கம்பெனியின் மருத்துவர்.

அவர் ஒரு பல்துறை வித்தகர். இந்தியாவிற்கு 1834இல் வந்த அவர் 1871இல் மதராஸ் மாகாணத்தின் சர்ஜன்-ஜெனரலாக இருந்து 1876இல் ஓய்வுபெற்றார். ராணுவத்தில் மருத்துவராக இருந்தாலும் இந்தியாவில் வாழ்ந்த சுமார் நாற்பது ஆண்டுகளில் சுற்றுச்சூழல், காட்டியல், பொது சுகாதாரம், வேளாண்மை, கல்வி எனப் பல துறைகளில் அவர் பங்களித்துள்ளார்.

பொது உலகுக்குத் திறந்தவர்: ஆங்கிலேயர்களுக்கு இந்திய மொழிகளைக் கற்றுத் தருவதற்காகத் தொடங்கப்பட்ட புனித ஜார்ஜ் கோட்டையின் மாடியில் இருந்த புனித ஜார்ஜ் கோட்டைக் கல்லூரியின் ஓர் அறையில்தான் அருங்காட்சியகம் முதன்முதலில் இருந்தது. பின்னாள்களில் இடப்பற்றாக்குறையால் தற்போது இருக்கும் இடத்தைத் தேர்வுசெய்து அங்கு மாற்றப்பட்டது.

அந்தக் காலகட்டத்தில் அருங்காட்சியகம் என்பது குறிப்பிட்ட சமூகத்தைச் சார்ந்தவர்கள், ஆங்கிலேயர்கள் மட்டுமே வந்து பார்க்கும் இடமாக இருந்தது. இந்த நிலையை மாற்றி சென்னை எழும்பூரில் தற்போது உள்ள அருங்காட்சியகத்தைச் சற்றே வித்தியாசமான முறையில் அவர் தோற்றுவித்தார். திரள் நிதிதிரட்டல் முறையில், மக்களிடமிருந்து பெறப்பட்ட பொருள்களை வைத்தே அருங்காட்சியகத்தை அமைத்தார்.

இதனால் பொதுமக்களிடம் நுழைவுக்கட்டணம் பெறாமல் இலவசமாகப் பார்வையிட அனுமதித்துள்ளார். முக்கியமான நாள்களில் பெண்களை அருங்காட்சியகத்திற்கு வந்து செல்ல ஊக்குவித்தார். இது தவிர 1866இல் மைசூர் அருங்காட்சியகத்தையும் அவர் நிறுவினார்.

சென்னை அருங்காட்சியகத்திற்கு வந்துபோகிறவர்களின் புள்ளிவிவரங்களை ஆவணப்படுத்தியதோடு, எவ்விதமான காட்சியமைப்புகள் பார்வையாளர்களை ஈர்க்கின்றன என்பதையும் அவர் ஆராய்ந்தார்.

அவரது நண்பர் ஒருவர் பரிசளித்த உயிருள்ள ஓராங்ஊத்தன் வாலில்லாக் குரங்கைக் காண வந்தவர்களின் எண்ணிக்கை ஒரே நாளில் இரண்டுமடங்கு அதிகரித்ததை உணர்த்து, பிரத்யேகமான உயிரியல் பூங்கா தொடங்கும் திட்டத்தை அரசிடம் முன்வைத்தார்.

ஆர்க்காட்டு நவாபின் சேகரிப்பில் இருந்த உயிரினங்களைக் கொடையாகப் பெற்று அருங்காட்சியகமாக வளாகத்திலேயே உயிரியல் பூங்காவைத் தொடங்கினார். பின்னாள்களில் இந்த உயிரினங்கள் சென்னை பூங்கா நகர் பகுதிக்கு இடமாற்றம் செய்யப்பட்டு மதராஸ் மாநகராட்சியின் நிர்வாகத்தின் கீழ் வந்தது (தற்போதைய ரிப்பன் கட்டடத்துக்குப் பின்புறம் அமைந்திருந்தது). பின்னர் இடப்பற்றாக்குறையால் வண்டலூரில் 1985இல் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவாக இது உருவெடுத்தது.

எட்வர்ட் பல்ஃபோர்

காடுகளின் காவலர்: எட்வர்ட் பல்ஃபோர் 1830களில் இங்கிலாந்தி லிருந்து மொரிஷஸ் தீவு வழியாக இந்தியா வந்தபோது, அந்தத் தீவின் இயற்கை வாழிடங்கள் சீர்குலைக்கப்படுவதைக் கண்டு மனித நலனுக்கும், சுற்றுச்சூழல் சீர்குலைவுக்கும் உள்ள நெருங்கிய தொடர்பு குறித்து ஆராய ஆரம்பித்தார்.

இந்தியாவில் வாழ்ந்தபோது அக்காலகட்டத்தில் காட்டுப் பகுதிகள் சகட்டுமேனிக்கு அழிக்கப்படுவதைக் கண்டு இதன் விளைவாக வறட்சி ஏற்படும் என்றும், மழைப்பொழிவுக்கும், ஈரப்பதத்தைச் சீராகப் பராமரிக்கவும் மரங்கள் எப்படி உதவுகின்றன என்பது குறித்தும் அறிவியல் இதழ்களில் பதிவுசெய்தார்.

அவற்றையெல்லாம் வறட்சி ஆணையக் குழுவுக்கும் அனுப்பிவைத்தார். இதன் பிறகுதான் கிழக்கிந்திய கம்பெனி காடுகளின் பாதுகாப்பின் அவசியத்தை உணர்ந்து, அதற்கான திட்டங்களை வகுக்க ஆரம்பித்தது.

எட்வர்ட் பல்ஃபோர் புள்ளிவிவரங்களை சேகரித்து அதன் அடிப்படையில் ஆராய்ச்சிகளை மேற்கொள்வதில் மிகுந்த நம்பிக்கை கொண்டிருந்தார். ராணுவ மருத்துவரான அவர், வீரர்களின் உடல்நலம் எந்தெந்த இடங்களில் நன்றாக உள்ளது என்பது குறித்த புள்ளிவிவரங்களைச் சேகரித்து, எங்கெல்லாம் ராணுவ முகாம்களை அமைக்கலாம் என்பது குறித்த அறிக்கையை வெளியிட்டார்.

நீலகிரியில் உள்ள வெலிங்டனில் ராணுவ மருத்துவமனையை மதராஸ் மாகாண அரசு நிறுவ இதுவே காரணமாக அமைந்தது. பின்னாள்களில் ராணுவ அதிகாரிகளுக்கான கல்லூரியாக இது உருவெடுத்தது.

மருத்துவ சேவை: இந்தி, பாரசீக மொழிகளில் புலமை பெற்றவராக அவர் இருந்துள்ளார். பொது சுகாதாரத்தில் பெண்களின் முக்கியத்துவத்தை உணர்ந்த அவர், பேறுகால மருத்துவம் குறித்த ஆங்கில நூலை உருது மொழியில் மொழிபெயர்த்தார். இதே நூலை கன்னடம், தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் கொண்டுவரும் முன்னெடுப்புகளை மேற்கொண்டார்.

பெண்களுக்கு ஆண் மருத்துவர்கள் சிகிச்சை அளிப்பது மரபுக்கு மாறாகக் கருதப்பட்டதால் மருத்துவமனைக்குப் பெண்கள் வராமல் போகும் சூழல் இருப்பதை உணர்ந்து, பெண் மருத்துவர்களின் அவசியத்தை மதராஸ் மாகாண அரசின் கவனத்திற்குக் கொண்டுவந்தார்.

ஐரோப்பியப் பெண்களை மருத்துவம் படிக்க ஊக்குவித்தார். இதன் விளைவாகவே மதராஸ் மருத்துவக் கல்லூரி 1875இல் நான்கு ஐரோப்பிய பெண்களை மருத்துவம் படிக்க அனுமதித்தது. அதில் ஒருவர்தான் 19ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த புகழ்பெற்ற மகப்பேறு மருத்துவரான மேரி ஷார்லீப். மதராஸ் மருத்துவக் கல்லூரி பல்ஃபோரின் பங்களிப்பை நினைவுகூரும் விதமாக, பெண் மருத்துவர்களுக்கு ‘பல்ஃபோர் நினைவுத் தங்கப் பதக்கம்’ வழங்க ஆரம்பித்தது. இது இப்போது வெள்ளிப் பதக்கமாக வழங்கப்படுகிறது.

எட்வர்ட் பல்ஃபோர் பல துறைகளைச் சார்ந்த நூல்களை எழுதியுள்ளார். அவற்றில் முதன்மையானது அவர் தயாரித்த இந்தியாவைப் பற்றிய கலைக்களஞ்சியம் (Cyclopaedia of India). சென்னை திருவல்லிக் கேணியில் உள்ள முஹம்மதன் பொது நூலகத்தை நிறுவுவதற்கு முன்னெடுப்புகளைச் செய்தவர் அவர்.

அவர் எழுதிய மகப்பேறு மருத்துவம் பற்றிய நூல்கள் இங்கு உள்ளன. இந்தியாவிற்கு சுதந்திரம் அளிக்க வேண்டும் எனும் கருத்தை ஆதரித்த ஆங்கிலேயர்களில் அவரும் ஒருவர். இதற்குக் காரணம் அவரது மாமாவான ஜோசப் ஹியூமாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. ஜோசப் ஹியூமின் மகன்தான் இந்தியப் பறவையியலின் தந்தை என அறியப்படுகிற, 1885இல் இந்திய தேதிய காங்கிரசை தோற்றுவித்தவர்களில் ஒருவரான ஆலன் ஆக்டேவியன் ஹியூம்.

அடுத்த முறை சென்னை அருங்காட்சி யகத்திற்குச் சென்றால் நுழைவுச் சீட்டைப் பரிசீலிக்கத் தந்தவுடன் இடதுபுறம் உள்ள எட்வர்ட் கிரீன் பல்ஃபோரின் உருவப்படத்தை ஒரு நிமிடம் நின்று பார்த்துவிட்டு, அவரது பங்களிப்புகளை நினைவுகூர்வோம் மறக்காமல்.

- கட்டுரையாளர், காட்டுயிர் ஆராய்ச்சியாளர்; jegan@ncf-india.org

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x