

ஓவியம் வரைதல், நடனம் போன்ற கூடுதல் திறன்களும்கூட ஒருவருக்குத் தொழிலாகக் கைகொடுக்கலாம். அப்படித் தனது திறமைகளைத் தொழிலாக மாற்றியிருக்கிறார், சென்னையைச் சேர்ந்த பிரஷாந்தி.
பரதநாட்டியத்தைக் கற்றுக்கொடுத்துவரும் இவர், மறுபுறம் பைகள், நோட்டுப் புத்தகங்களில் கையால் ஓவியங்கள் வரைந்து விற்பனை செய்தும் வருகிறார். பள்ளியில் உயிரியல், கல்லூரியில் பொறியியல் என வெவ்வேறு துறை களைப் பயின்றவர் பிரஷாந்தி.
தொடர்ந்து ஏழாண்டுகள் ஒரு நிறுவனத் தில் பணியாற்றினார். கரோனா பெருந் தொற்றுக் காலத்தில் கிடைத்த நேரத்தைப் பயன்படுத்தி வங்கித் தேர்வுக்குத் தயாராகி, அதிலும் வெற்றி பெற்று வங்கியில் பணியாற்றினார். இப்படி வெவ்வேறு அனுபவங்களைக் கடந்துவந்தவர், தற்போது தனது கலைத்திறன்களையே தொழிலாக மாற்றியிருக்கிறார்.
புது வேலை
“வங்கிப் பணியில் இருந்தபோது வெவ்வேறு ஊர்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டதால், கைக்குழந்தையைப் பார்த்துக்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால் எனக்குத் தெரிந்த இரண்டு கலைகளான நடனம், ஓவியம் ஆகியவற்றை நம்பிக் களத்தில் இறங்கி னேன். வங்கி வேலையை விட்டு, முழு நேரமாகத் தொழில்முனைவில் ஈடுபடத் தொடங்கினேன்.
எனக்குச் சிறு வயது முதலே ஓவியம் வரைவதில் அதிக ஆர்வம் உண்டு. ‘தி கிராஃப்ட் கலெக்டிவ்’ (The Craft Collective) என்கிற பெயரில் தொழில் தொடங்கி ஆர்டர்களின் அடிப்படையில் விற்பனை செய்துவருகிறேன்.
கூடவே பரதநாட்டியமும் கற்றுக்கொடுத்து வருகிறேன். பைகள், பவுச், நோட்டுப் புத்தகங்கள், பேனா ஸ்டாண்ட், பென்சில் ஸ்டாண்ட் எனப் பல்வேறு பொருள்களில் கோலம் அல்லது மண்டலா டிசைன்களை வரைந்து விற்பனை செய்துவருகிறேன். வாடிக்கையாளர் களின் விருப்பத்துக்கு ஏற்ப ‘கஸ்ட மைஸ்டு’ டிசைன்களையும் உருவாக்கித் தருகிறேன்” என்கிறார் உற்சாகத்துடன் பிரஷாந்தி.
திறன் கற்றல்
ஏதாவது ஒரு திறனைக் கற்றுக் கொண்டால், கண்டிப்பாக ஒரு நாள் கைகொடுக்கும் என்கிறார் அவர். “முழுநேர வேலையை, அதுவும் வங்கிப் பணியை விட்டுவிட்டுச் சொந்த மாகத் தொழில் தொடங்கியபோது சற்றுத் தயக்கமாகவே இருந்தது.
இந்தத் தொழில் நமக்குச் சரியாக அமையுமா, பொருளாதாரரீதியாகச் சமாளிக்க முடியுமா என்றெல்லாம் யோசித்தேன். ஆனால், எனக்கு எது வேண்டும், எது வேண்டாம் என்பதில் தெளிவாக இருந்தேன்.
ஏற்கெனவே ஒரு கலை தெரிந்திருந்ததால், சுயதொழிலில் ஈடுபட முடிவெடுத்த போது அது உதவியாக இருந்தது. தற்போது மண்டலா ஓவியப் பயிலரங்கு களையும் நடத்திவருகிறேன். தொடர்ந்து இதுபோன்ற பல்வேறு முயற்சிகளில் ஈடுபடத் திட்டமிட்டுள்ளேன்.
20 வயதில் செய்ய முடியாத சில விஷயங்களை 30களில் செய்துவருகிறேன். ஆர்டர்களைப் பெறுவது முதல் அவற்றைத் தயாரித்து அனுப்புவது வரையிலான பெரும் பாலான வேலைகளை நானே கவனித்துக் கொள்கிறேன். பேக்கேஜிங் பணிகளில் குடும்பத்தினர் உதவுகின்றனர்” என்கிறார் பிரஷாந்தி.
பட்ஜெட் விலையில்
தண்ணீர் பட்டாலும் டிசைன் அழியாத வகையில் தயாரிப்புகளை உருவாக்கு வதில் கவனம் செலுத்துகிறார் பிரஷாந்தி. “அக்ரிலிக் பெயிண்ட்ஸ், ஃபேப்ரிக் பெயிண்ட்ஸ் ஆகியவற்றைப் பயன் படுத்தி ஓவியங்களை வரைகிறேன். பாதுகாப்புக்காக வார்னிஷ் கோட்டிங் தருகிறேன்.
அதனால், தண்ணீர் பட்டாலும் ஓவியங்கள் எளிதில் அழியாது. டிசைன் இல்லாத நோட்டுப் புத்தகங்கள், பவுச்சுகள் உள்ளிட்டவற்றை வாங்கி, அவற்றில் வாடிக்கையாளர்களின் விருப்பத்துக்கு ஏற்ப ஓவியங்களை வரைகிறேன். அனைவரும் வாங்கும் வகையில் விலையையும் நிர்ணயித்துள்ளேன். ரூ.150 முதல் தொடங்கும் பொருள்களின் விலை அதிகபட்சம் ரூ.1,000க்குள் இருக்கும்.
முன்பெல்லாம் தொழில் தொடங் கினால் கடைகடையாகச் சென்றுதான் பொருள்களை விற்பனை செய்ய வேண்டும். இப்போது இருக்கும் இடத்திலிருந்தே தொழில் செய்ய முடிகிறது. ஆனால், நம்மைப் போலவே பலரும் இந்தத் தொழிலில் இருப்பதால் போட்டி அதிகம்.
என்கிறபோதும், ஒரு தொழிலில் முன்னேற வேண்டுமென்றால் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவ்வாக இருக்க வேண்டியது அவசியம். அப்போதுதான் அதிகமான வாடிக்கை யாளர்களைச் சென்றடைய முடியும். அதன் மூலம் தொழிலையும் வளர்க்க முடியும்” என்கிறார் பிரஷாந்தி.
‘தி கிராஃப்ட் கலெக்டிவ்’ இன்ஸ்டாகிராம் பக்கம்: instagram.com/prasha.handcrafted/
- karthiga.rajendran@hindutamil.co.in