‘ரஷ்யன் கேக்’ சுவைத்திருக்கிறீர்களா? | இளம் தொழில்முனைவோர்

‘ரஷ்யன் கேக்’ சுவைத்திருக்கிறீர்களா? | இளம் தொழில்முனைவோர்
Updated on
2 min read

கரோனாவுக்குப் பிறகு ‘ஹோம் பேக்கிங்’ ஆர்வலர்கள் அதிகரித்துவிட்டனர். எங்கு பார்த்தாலும் கேக், கப்-கேக், பிரவுனி என வீட்டிலேயே விதவிதமான பேக்கரி உணவு வகைகளைத் தயாரித்து விற்பவர்களைப் பார்க்க முடிகிறது.

போட்டி நிறைந்த பேக்கிங் துறையில், தனக்கெனத் தனித்துவமான அடையாளத்தை உருவாக்கி வெற்றிகரமாக இயங்கிவருகிறார் சென்னையைச் சேர்ந்த கெசியா மிராக்ளின்.

பொறியியல் பட்டதாரி

சென்னையில் பிறந்து வளர்ந்த கெசியா, பொறியியல் பட்டப்படிப்பை முடித்துவிட்டு அண்ணா பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ. படித்துள்ளார். தொழில்முனைவோராகக் களம் காண்பதற்கு முன் தொழில், வியாபாரம் குறித்த புரிதலைப் பெற எம்.பி.ஏ., உதவியதாகக் கூறுகிறார்.

“படிப்பை முடித்த பிறகு சில மாதங்கள் ஐ.டி., துறையில் வேலை செய்தேன். பின்னர் அந்த வேலையை விட்டுவிட்டு வேறு வாய்ப்புகளைத் தேடிக்கொண்டிருந்தேன். அந்த நேரத்தில் தோழி ஒருவருக்காக வீட்டிலேயே கேக் செய்துகொடுத்தேன். அது அவருக்குப் பிடித்துப்போகவே, என்னை பேக்கரி தொடங்குமாறு சொன்னார்.

பிசினஸ் தொடங்கி வெற்றிகரமாக வழி நடத்துவேன் என்கிற நம்பிக்கை அப்போது இல்லை. ஆனால், தோழியின் உந்துதலால் 2017ஆம் ஆண்டில் பேக்கரி தொழிலைத் தொடங்கினேன். சுயமாகவே கற்றுக்கொண்டு ஒவ்வொரு ரெசிபியையும் செய்துபார்த்து பேக்கிங்கில் அனுபவம் பெற்றேன்.

வெளிநாடுகளில் வேலை செய்த உறவினர்களும் வெளிநாடுகளுக்குச் செல்லும் தாத்தாவும் சாக்லெட்டுகளை வாங்கி வருவார்கள். சிறுவயதில் நான் அப்படிச் சாப்பிட்ட சாக்லெட்டுகள், இங்கு கிடைக்கும் சாக்லெட்டுகளைவிட வித்தியாசமாகவும் தரமாகவும் இருந்தன.

அதனால், பிசினஸ் தொடங்கியவுடன் அமெரிக்காவைச் சேர்ந்த சமையல் கலைஞர்கள், பேக்கர்களின் ரெசிபிகளை இணையத்தில் தேடிக் கண்டறிந்து, நானே செய்துபார்க்கத் தொடங்கினேன்.

அந்தப் பயணம் ஒன்பது ஆண்டுகளைக் கடந்தும் தொடர்கிறது” என்று உற்சாகமாகப் பேசுகிறார் கெசியா மிராக்ளின். இன்ஸ்டாகிராமில் பிசினஸ் ‘கே’ஸ் பேக்ஸ்’ (Kay's bakes) எனும் பெயரில் இன்ஸ்டாகிராம் பக்கம் ஒன்றை நடத்திவருகிறார் கெசியா.

ஏறக்குறைய பத்தாயிரத்துக்கும் அதிகமானோர் இப்பக்கத்தைப் பின்தொடர்கின்றனர். தொழிலை விரிவுபடுத்தவும் இன்ஸ்டா கிராமைப் பயன்படுத்துவதாக இவர் சொல்கிறார்.

“பிசினஸ் தொடங்கிய முதல் ஓராண்டில் ஒரு வாடிக்கையாளரிடம் இருந்து இன்னொரு வாடிக்கையாளர் என வாய்வழிப் பரிந்துரையால்தான் ஆர்டர்கள் வந்தன.

2018இல் இன்ஸ்டாகிராம் பக்கத்தைத் தொடங்கி பிசினஸ் தொடர்பாகப் பதிவிடத் தொடங்கினேன். மெல்ல அந்த கம்யூனிட்டி வளர்ந்தது. இன்ஸ்டாகிராம் வழியாக விளம்பரமும் செய்கிறேன்.

இதனால், தொழிலைப் பரவலாக்கவும் பல வாடிக்கையாளர்களைப் பெறவும் முடிகிறது. பிறந்த நாள், திருமண நாளைப் போன்று ஸ்பெஷல் நாள்களுக்கான கேக்குகள், குக்கீஸ், பிரவுனீஸ், டோனட்ஸ் ஆகியவற்றை ஆர்டரின் பேரில்

தயாரிக்கிறேன். இவற்றில் ரஷ்யன் ஹனி கேக்குக்கு வரவேற்பு அதிகம். இப்போதும் சென்னையில் பலருக்கும் இந்த கேக் தெரியும். ஆனால், 24 லேயர்களைக் கொண்ட ரஷ்யன் ஹனி கேக்கை கே’ஸ் பேக்ஸில் மட்டுமே பெற முடியும்.

சுவையிலும் தரத்திலும் சமரசம் செய்துகொள்ளாமல் இருப்பதால், ஒரு முறை வந்த வாடிக்கையாளர்கள் தொடர்ந்து ஆர்டர் தருகின்றனர். 2017ஆம் ஆண்டில் வந்த வாடிக்கையாளர்கள் இப்போதும் இருக்கிறார்கள் என்பதை நினைக்கும்போது மகிழ்ச்சியாக உள்ளது” என்கிறார் கெசியா.

சவால்கள் இல்லாமல் இல்லை

தனி ஆளாக பேக்கிங் துறை யில் காலடி எடுத்துவைத்த கெசியாவோடு தற்போது சமையலறை பராமரிப்பு, டெலிவரி போன்ற வேலைகளுக்குத் தனியாக ஆள்கள் இருக்கின்றனர். “பெரும்பாலும் ஆர்டர் எடுத்தால் நானே கேக் தயாரித்துவிடுவேன்.

ஆனால், வேலை அதிகமாக இருக்கும்போது என் தங்கை அல்லது உறவினர்களின் உதவியையும் அவ்வப்போது நாடுவேன். தொழிலை முறையாக நடத்துவதற்கான உணவுத் தரச் சான்றிதழ்களைப் பெறவும் தொழிலைப் பதிவுசெய்யவும் அப்பா உதவினார்.

பலரும் தொடங்கும் பிசினஸ்தானே பேக்கரி எனப் பலரும் நினைக்கிறார்கள். கரோனாவுக்குப் பிறகு பலரும் இத் துறையில் தடம் பதித்துள்ளனர் என்றா லும், ஒவ்வொரு பேக்கரின் சுவையும் தனித் துவமானது.

ஆனால், இதிலும் சவால்கள் இல்லாமல் இல்லை. கேக் உருகுவது, டெலிவரியின்போது சேதமடைவது, மூலப் பொருள் விற்பனையாளர்களால் ஏற்படும் பிரச்சினைகள் எனத் தொடக்கத்திலிருந்தே பல சவால்களை எதிர்கொண்டிருக்கிறேன்.

இப்படிப் பல சிக்கல்கள் இருந்தாலும், பிசினஸைத் தொடர்ந்து நடத்த வேண்டும் என்கிற எண்ணம் இருந்தால் நிச்சயம் சாதிக் கலாம்” என்கிறார் கெசியா மிராக்ளின்.

‘கே’ஸ் பேக்ஸ்’ இன்ஸ்டாகிராம் பக்கம்: instagram.com/kays_bakes_/

- karthiga.rajendran@hindutamil.co.in

‘ரஷ்யன் கேக்’ சுவைத்திருக்கிறீர்களா? | இளம் தொழில்முனைவோர்
வெற்றிக்கு வழிகாட்டும் பயிற்சி

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in