‘ஹெல்த் பிசிக்ஸ்’ ஆராய்ச்சிகள் ஏன் அவசியம்? | வேலைன்னு வந்துட்டா... | அத்தியாயம் 20

‘ஹெல்த் பிசிக்ஸ்’ ஆராய்ச்சிகள் ஏன் அவசியம்? | வேலைன்னு வந்துட்டா... | அத்தியாயம் 20
Updated on
2 min read

‘கதிர்வீச்சு’ என்கிற வார்த்தை யைக் கேட்டாலே பலருக்கும் முதலில் நினைவுக்கு வருவது அணு விபத்துகள் அல்லது கடுமை யான நோய்கள் பற்றிய செய்திகளே. உண்மையில் கதிர்வீச்சு நம் தினசரி வாழ்வின் ஓர் அங்கமாகவே உள்ளது. புற்றுநோய் சிகிச்சைக்கான கதிர்வீச்சு மருத்துவம் முதல் அணுமின் உற்பத்திவரை பல துறைகள் கதிர்வீச்சைப் பயன்படுத்துகின்றன.

இப்படிப் பரவலாகப் பயன்படும் சக்திவாய்ந்த கதிர்வீச்சுத் தொழில்நுட்பம் பாதுகாப்பாகப் பயன் படுத்தப்படுகிறதா என்பதை உறுதிசெய்யும் தனித் துறைதான் ‘ஹெல்த் பிசிக்ஸ்’ (Health Physics). மருத்துவமனைகள், அணுமின் நிலையங்கள், தொழிற்சாலைகள், ஆய்வகங்கள் போன்ற இடங்களில் பயன்படுத்தப்படும் கதிர்வீச்சு, மனிதர்களுக்கும் சுற்றுச்சூழலுக்கும் தீங்கில்லாமல் இருக்க வேண்டும்.

இந்தப் பாதுகாப்பை உறுதிசெய்வதுதான் ‘ஹெல்த் பிசிசிஸ்ட்’ ஆகியோரின் வேலை. கதிர்வீச்சை நெருப்புடன் ஒப்பிடலாம். நெருப்பு சமைக்க உதவும், வெப்பம் தரும். ஆனால் கட்டுப் பாடின்றி இருந்தால் வீடே எரிந்துவிடும். அதுபோல கதிர்வீச்சு நன்மைகளும் தரும், பாதுகாப்பின்றி இருந்தால் ஆபத்தையும் வரவேற்கும். அந்த ஆபத்தைக் கட்டுப்படுத்தும் ‘தீயணைப்புப் படை’ போலச் செயல்பட வைப்பதே ‘ஹெல்த் பிசிக்ஸ்’.

ஏன் முக்கியம்? - புற்றுநோய் சிகிச்சை, தொழிற்சாலைகளில் உலோகத் தரச் சோதனை, விமான நிலையப் பாதுகாப்பு ஸ்கேனர்கள், அணுமின் உற்பத்தி எனப் பல துறைகள் கதிர்வீச்சைப் பயன்படுத்துகின்றன.மிக சக்திவாய்ந்த கருவியாக இருப்பதால், அதன் பயன்பாடு நிபுணர்களின் கண்காணிப்பில் இருக்க வேண்டும். இதற்காகவே ‘ஹெல்த் பிசிசிஸ்ட்’ எனப்படும் கதிர்வீச்சு பாதுகாப்பு நிபுணர்கள் செயல் படுகின்றனர்.

மருத்துவமனைகள், அணு மின்நிலையங்கள், ஆய்வகங்கள் போன்ற இடங்களில் கதிர்வீச்சு அளவுகளைக்கண்காணித்து, பாதுகாப்பு நிலையை உறுதி செய்வதில் அவர்கள் முக்கியப் பங்காற்றுகிறார்கள். அவர்களின் பணியில், பணியாளர்கள் எவ்வளவு கதிர்வீச்சுத் தாக்கத்தைப் பெற்றுள்ளனர் (Dosimetry) என்பதைக் கண்காணித்து பதிவுசெய்தல், பாது காப்புச் சுவர்களின் தேவையான தடிமனைக் கணக்கிடுதல் போன்ற பொறுப்புகள் அடங்கும்.

மேலும், இந்தியாவில் அணுசக்தி ஒழுங்கு முறை வாரியம் (AERB) அமைத்துள்ள விதிகள்பின்பற்றப்படுகின்றனவா என்பதை உறுதி செய்வதோடு, அவசரநிலைகளில் பாதுகாப்பு நடைமுறைகளைச் செயல்படுத்துவதும் முக்கியம். காற்று, நீர், மண் ஆகியவற்றில் கதிர்வீச்சு மாசுபாடு உள்ளதா எனப் பரிசோதித்து, குறைந்த அளவு கதிர்வீச்சால் ஏற்படும் உயிரியல் விளைவுகள் குறித்த ஆய்வுகளிலும் ஹெல்த் பிசிசிஸ்ட்கள் ஈடுபடுகின்றனர்.

முக்கிய ஆராய்ச்சிகள்: விமான நிலையங்களில் பயணிகள் பெறும் கதிர்வீச்சு அளவு பாதுகாப்பான வரம்புக்குள் உள்ளதா என்பதையும், திறன்பேசிகள் - 5G தொடர்பு அலைகள் பயன்பாட்டால் மனித உடலுக்கு நீண்டகாலத்தில் பாதிப்பை ஏற்படுத்துமா என்பதும் இத்துறையின்கீழ் ஆய்வு செய்யப்படுகிறது.

இயற்கை, செயற்கை கதிர்வீச்சின் ஆதாரங்கள், நுகர்வோர் தயாரிப்புகளில் கதிரியக்கத் தன்மைகள், ‘Depleted Uranium’ பயன்படுத்தப்படும் தொழில்துறை, பாதுகாப்பு பயன்பாடுகள் போன்றவையும் ஆராயப்படுகின்றன.

அணு ஆபத்து அல்லது பேரழிவு அவசரநிலை காலத்தில், மனிதர்கள் தைராய்டு சுரப்பியைப் பாதுகாத்துகொள்ள வழங்கப்படும் ‘Potassium Iodide’ (KI) மாத்திரையின் பயன்பாடு, கர்ப்பகாலத்தில் கதிர் வீச்சுத் தாக்கம், மேலும் சூரிய ஒளியில் உள்ள ‘Ultraviolet’ கதிர்கள் தோலில் ஏற்படுத்தும் விளைவுகள் போன்றவை இந்தத் துறையின் முக்கிய ஆய்வுப் பகுதிகள்.

பொதுவாக ‘கதிர்வீச்சு’ என்றால் ஆபத்து என்கிற எண்ணம் நிலவினாலும், உண்மையில் கதிர்வீச்சை முறையாகக் கட்டுப்படுத்தி, பாதுகாப்பாகப் பயன் படுத்துவதற்கான அறிவியலே ஹெல்த் பிசிக்ஸ் எனத் துறை சார்ந்த நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். மனிதர்களின் சுகாதாரப் பாதுகாப்பையும், தொழில் நுட்ப முன்னேற்றத்தையும் சமநிலைப்படுத்தும் பாதுகாப்பு அறிவியல் துறையாக இது திகழ்கிறது. இத்துறையில் உள்ள கல்வி, வேலைவாய்ப்புகள் பற்றி அடுத்த அத்தியாயத்தில் பார்ப்போம்.

- கட்டுரையாளர், உயர் கல்வி ஆலோசகர்; ticf@indiacollegefinder.org

‘ஹெல்த் பிசிக்ஸ்’ ஆராய்ச்சிகள் ஏன் அவசியம்? | வேலைன்னு வந்துட்டா... | அத்தியாயம் 20
மருத்துவப் பிரச்சினைகளுக்குத் தீர்வு வேலைன்னு வந்துட்டா... | அத்தியாயம் 19

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in