

செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.), பிக் டேட்டா, பிளாக்செயின், டிஜிட்டல் டிரையல்ஸ் போன்ற எண்ணிலக்கத் தொழில்நுட்பங்கள் (Digital technologies) மருத்துவத் துறையை முற்றிலும் மாற்றி அமைத்துக் கொண்டிருக்கின்றன. ‘டிஜிட்டல் ஹெல்த்’ துறையின் அறிமுகத்தைப் பற்றிக் கடந்த அத்தியாயத்தில் பார்த்தோம். இத்துறை சார்ந்த கல்வி, வேலைவாய்ப்புகள் பற்றி...
இந்தியாவின் நிலைஒரு மாணவரின் பெற்றோர் தங்கள் வாழ்நாள் சேமிப்பை, லட்சக்கணக்கான ரூபாயைக் கல்விக்காக முதலீடு செய்கி றார்கள். அந்த மாணவர் எம்.பி.பி.எஸ். அல்லது பொறியியல் படிப்பைப் படிக்கிறார். நல்ல மதிப்பெண்கள், நல்ல கல்லூரி, நல்ல எதிர்காலம் - இதுவே பெரும்பாலான குடும்பங்களின் கல்விக்கனவாக இருக்கிறது.
ஆனால், உண்மையில் இந்த இரண்டு துறைகள் தொடர்பான ‘அப்டேட்’களைத் தெரிந்து வைத்திருப்பது அவசியம். தொழில்நுட்ப நிறுவனங்களில் ஜாம்பவானான ‘கூகுள்’, தமிழ்நாட்டின் மதுரையிலும் சென்னையிலும் பல கோடி ரூபாய் முதலீடு செய்து ஆராய்ச்சி நடத்திவருகிறது.
ஆனால், இந்த ஆராய்ச்சியை மேற்கொள்பவர்கள் பெரும்பாலும் வெளிநாட்டு அறிவிய லாளர்கள் அல்லது வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில்படித்த இந்தியர்கள். இங்குள்ள தரவுகள், தகவல்களை வைத்து பிக் டேட்டா மூலம் உலகத் தரம் வாய்ந்த ஏ.ஐ., இயந்திரக்
கற்றல் ஆராய்ச்சிகள் நடைபெறு கின்றன. ஆனால், இந்தியப் பல்கலைக் கழகங்களில் இத்துறை சார்ந்த ஆராய்ச்சி களோ படிப்புகளோ இன்னும் இல்லை.
மருத்துவம், பொறியியல் சேர்ந்து செயல்படும் ‘டிஜிட்டல் ஹெல்த்’ என்கிற வளரும், உலகை மாற்றும் துறையைப் பற்றி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.
உலகின் பிரபலமான பல்கலைக்கழகங்களில் பிக் டேட்டா பகுப்பாய்வாளர், ஏ.ஐ. மருத்துவ ஆய்வாளர், டிஜிட்டல் டிரையல் நிபுணர், பிளாக்செயின் ஹெல்த் டெவலப்பர் போன்ற வேலைவாய்ப்புகளுக்கான படிப்புகள் இருக்கின்றன. ஆனால், இந்தியப் பல்கலைக்கழகங்கள் இந்த வகையில் இன்னும் நெடுந்தொலைவு பயணிக்க வேண்டியுள்ளது.
வெளி உலகத்தில் நடைபெறும் நவீனப் புரட்சிகளைப் பிரதிபலிக்காமல் பழைய பாடத்திட்டங்களுடன் நம் மருத்துவக் கல்லூரிகள் தனியே இயங்கிவருகின்றன. மருத்துவத் தரவு ஆராய்ச்சியில் பொறியாளரின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது. ஆனால், நடைமுறை மருத்துவப் பயன்பாடுகள் பற்றிய புரிதல் இல்லாமல் பொறியியல் கல்லூரிகளும் தனியே இயங்கிவருகின்றன.
என்ன செய்யலாம்? - ஒரு மருத்துவ மாணவர் ஏ.ஐ., பிக்டேட்டா படிப்புகளைப் படிக்கவும், கணினி அறிவியல் மாணவர் டிஜிட்டல் டிரையல்ஸ், டிஜிட்டல் மருத்துவமனை அமைப்புகளைப் புரிந்துகொள்ளவும், புள்ளியியல் படித்த மாணவர் பிளாக் செயின் அடிப்படையிலான மருத்துவத் தரவு பாதுகாப்பு அமைப்புகளை உருவாக் கவும் வெளிநாடு செல்ல வேண்டும் என்பதுதான் தற்போதைய நிலைமை.
வெளிநாட்டுப் பல்கலைக்கழகங் களிலும் கல்லூரிகளிலுமே இந்த இரண்டு துறைகளையும் இணைத்து வழங்கும் படிப்புகள் உள்ளன. இதன் விளைவாக, இந்திய மாணவர்கள் வெளிநாடு செல்ல வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்படு கிறார்கள். உலகின் நீரிழிவுத் தலைநகர மாக இருக்கும் இந்தியாவில், நீரிழிவைக் கண்காணிக்கும் ஏ.ஐ. கருவிகள் வெளிநாட்டில் உருவாக்கப்படுகின்றன.
இதனால் வளரும் துறைகளை உடனடியாக அடையாளம் கண்டு புதிய படிப்புகளை இந்தியப் பல்கலைக் கழகங்களும் கல்லூரிகளும் தொடங்க
வேண்டும், பாடத்திட்டங்கள் நவீன மாகவும் நடைமுறை சார்ந்ததாகவும் மாற வேண்டும், ஆராய்ச்சிகளுக்கு முன்னுரிமையும் நிதியும் ஒதுக்கப்பட வேண்டும், தொழில்துறையுடன் நேரடித் தொடர்பு இருக்க வேண்டும்.
கல்வி உதவித்தொகை: எண்ணற்ற வேலைவாய்ப்புகள் கொட்டிக்கிடக்கும் ‘டிஜிட்டல் ஹெல்த்’ துறை தொடர்பான படிப்புகளுக்கு வெளிநாடு செல்ல விரும்பும் மாணவர்கள் காமன் வெல்த் கல்வி உதவித்தொகை, ஃபுல்பிரைட்–நேரு உதவித் தொகை, செவெனிங் கல்வி உதவித் தொகை, கேட்ஸ் அறக்கட்டளை கல்வி உதவித் தொகை உள்ளிட்ட பல உதவித் தொகை வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
லண்டன் இம்பீரியல் கல்லூரி, ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகம், மாசசூசெட்ஸ் தொழில்நுட்ப நிறுவனம், ஹார்வர்டு மருத்துவப் பள்ளி, ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகம், ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம், சிட்னி பல்கலைக்கழகம், மெல்பர்ன் பல்கலைக்கழகம், டொரண்டோ பல்கலைக் கழகம், வாட்டர்லூ பல்கலைக்கழகம், ஈடிஎச் சூரிச், கரோலின்ஸ்கா இன்ஸ்டிடியூட், சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகம், சியோல் தேசிய பல்கலைக்கழகம் போன்ற உலகின் முன்னணிப் பல்கலைக்கழகங்கள் டிஜிட்டல் ஹெல்த் படிப்புகளை வழங்கு கின்றன.
உயிரியல், கணிதம், கணினி அறிவியல், புள்ளியியல், சமூக அறிவியல், சுகாதார அறிவியல் என எந்தப் படிப்பைப் படித்த வரும் இந்தத் துறையில் நுழைய முடியும். ‘டிஜிட்டல் ஹெல்த்’ இன்றும் எதிர்காலத்திலும் நவீன மருத்துவத்தில் பெரும் பங்காற்ற உள்ளது. எனவே, உங்கள் அறிவையும் திறமையையும் பயன் படுத்தி இந்தியாவின் மருத்துவப் பிரச்சினை களுக்குத் தீர்வு காண முயற்சி செய்யுங்கள்.
- கட்டுரையாளர், உயர் கல்வி ஆலோசகர்; ticf@indiacollegefinder.org