ஐந்நூறு ரூபாய்க்கு எவ்வளவு மதிப்பு? | தீயா வேலை செய்யணும் ப்ரோ - 4

ஐந்நூறு ரூபாய்க்கு எவ்வளவு மதிப்பு? | தீயா வேலை செய்யணும் ப்ரோ - 4
Updated on: 
2 min read

மதிய உணவின் போது ராகேஷ் வர வில்லை. 'சாரி' என்கிற குறுஞ்செய்தி வந்தது. ஆனால், மாலை கழிகையில் காபி கோப்பையுடன் அவர் அறைக்கே வந்தது ராஜனுக்கே ஆச்சரியமாகத்தான் இருந்தது. ‘சொல்லுங்க' என்பது போலப் பார்த்தான்.

“ராகேஷ், நீ ரொம்பத் திறமையானவன். வேலையையும் கச்சிதமா செய்யற. சீக்கிரமே நல்ல உயரத்துக்குப் போயிடுவேன்னு நம்புறேன். ஆனா, மத்தவங்களைக் கொஞ்சம் அனுசரிச்சுப் போகக் கத்துக்கிட்டா, உன் வெற்றிக்கு அது இன்னும் உதவியா இருக்கும்.” - வலிக்காத ஆங்கிலத்தில் சிரித்தபடியே இதைச் சொன்னார்.

“எங்கே தப்புன்னு குறிப்பிட்டுச் சொன்னா, எனக்குப் புரியும்.” “நீ பெரியவங்களை நடத்தற விதம் மரியாதைக் குறைவா இருக்கு. எடுத்துக்காட்டா சொல்லணும்னா அலுவலகத்துக்கு லேட்டா வந்துட்டு ‘சாரி’ கேக்க மாட்டே.

கண்ணைப் பார்த்துப் பேச மாட்டே. மறுக்கறப்ப ஒரு வரியில பட்டுன்னு சொல்றே. பிறர் கருத்துகளைக் கேக்க மாட்டேங்கற. எல்லாம் எனக்குத் தெரியும்கிறதை உன் பாடி லாங்வேஜ் சொல்லுது. இதை நிறையப் பேர் சொல்லிட்டாங்க.”

“என்ன சொல்றதுன்னு தெரியலை. எனக்கு வேலையைச் சரியா செய்யணும். அதைத் தாண்டி வேற எண்ணம் இல்லை. இங்கே சீனியர்ஸ்கிட்ட பேசறது முட்டை ஓடு மேல நடக்கற மாதிரி இருக்கு. சேஷ் கேட்ட அத்தனை டேட்டாவையும் விடிய விடிய உட்கார்ந்து எடுத்து அனுப்பினேன்.

அவருக்கு நான் அனுப்பின இ-மெயில்தான் பிரச்சினையா படுது. இந்த வறட்டு மரியாதையை ஏன் எதிர்பார்க்கிறாங்கன்னு புரியல.” “இந்த ஹியூமன் எலிமென்ட்டைத்தான் நீ புரிஞ்சுக்க மறுக்கறே. நீ செய்யற வேலையை இயந்திரம் செய்யுற காலம் வந்துட்டு இருக்கு.

வேலையில் நம்மகிட்ட இருக்கற பெரிய பலமே இந்த மனிதத்தன்மைதான். பரஸ்பர சிநேகம், மரியாதை, பிறர் மனம் அறிதல், இதெல்லாம் ஏ.ஐ. செய்யாது அல்லது நாளாகலாம். இது இல்லாம தலைமைப் பொறுப்புக்குப் போறது கஷ்டம். போனாலும் தாக்குப் பிடிக்கறது அதைவிட ரொம்பக் கஷ்டம்.”

“எனக்கு வேலை க‌ஷ்டமே இல்லை. வீட்லயும் வெளியிலயும் சக மனிதர்களை டீல் பண்றதுதான் பிரச்சினை.”

ராகேஷ் மணமுறிவு பெற்றுத் தனியாக வாழ்கிறான் என்பது தெரியும். இருந்தும் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து எதையும் பேச விரும்பவில்லை. ராகேஷும் பேசாமல் காபி குடித்துக்கொண்டிருந்தான்.

“இன்னிக்கு இண்டஸ்டரில ஒரு பெரிய சிக்கலே நல்ல லீடர்ஸ் இல்லாததுதான். அஞ்சு வருசத்துல தகுதி, திறமை, அனுபவ அடிப்படையில டீம் லீட்ஸ் ஆயிடறாங்க. அதாவது பதவி மட்டும் வாங்கிடறாங்க. ஆனா, மனிதர்களை நிர்வாகம் பண்ற பக்குவமும் இல்லை, அனுபவமும் இல்லை.

ரத்தக்களறிதான். தலைமைப் பொறுப்புங்கறது வேலை அறிவு சார்ந்து மட்டும் வர்றதில்லை. அது ஓர் உளவியல் பண்பு, நிர்வாகத் திறன். இதைக் கத்துக்காம மேலே போக முடியாது. அதனாலதான் சொல்றேன்.

நீ வேலை தெரிஞ்சவன். சீனியர்ஸ் மட்டுமில்லை. டீம் மெம்பர்ஸ மேனேஜ் பண்றதும் கஷ்டம்தான். ஒரு பெரிய டீமை நிர்வாகம் பண்ணணும்னா எவ்வளவு பீப்பிள் இஷ்யூஸ் சமாளிக்கணும். அதற்கு ராகேஷ் தயாரா?”

“எனக்குத் தனியா வேலை செய்யறது ரொம்ப சுலபம். மத்தவங்களோட சேர்ந்து வேலை செய்யறப்ப நிறைய மெயின்டனன்ஸ் இஷ்யூஸ்.

குறிப்பா சீனியர்ஸ். நான் குட் மார்னிங் சொல்லலை, வேலை செய்யறப்ப ஹெட் போன் யூஸ் பண்றேன், கால் மேல கால் போட்டுக்கறேன், முகத்தைப் பார்த்துப் பதில் சொல்லலை, மெயிலுக்குப் பதில் வாட்ஸ்-அப் பண்றேன்.

இப்படி நிறைய சொல்றாங்க. இதெல்லாம் பிரச்சினையா? வேலை நடக்குதா இல்லையான்னு மட்டும் பார்த்தா போதாதா? என் பர்சனாலிட்டியைக் குறை சொல்லிட்டு இருந்தா, சிலநேரம் ரொம்பக் கடுப்பா இருக்கு...” ‘வேலை செய்யறதும் முக்கியம். அதைச் சரியா தெரிவிக்கிறதும் முக்கியம்’ என்று சொன் னது ராகேஷ் மண்டையில் ஏறவில்லை என்பது புரிந்தது.

எப்படி விளக்குவது என்று யோசித்தார். உடனே டாக்டர் கே.கே. ஒரு பயிலரங்கில் செய்து காண்பித்தது ராஜனின் நினைவில் வந்தது.

பர்ஸில் இருந்து ஓர் ஐநூறு ரூபாய்த் தாளை எடுத்தார். எழுந்து நின்று ராகேஷிடம் கொடுத்தார். ராகேஷ் முகத்தில் ஆச்சரியம் கலந்த புன்னகை. “எதுக்கு சார், எனிவே தாங்க்ஸ்” என்றான் இயல்பாக.

“இதோட மதிப்பு என்ன?” “500 ரூபாய்.” அதைத் திரும்ப வாங்கி, கசக்கிக் கீழே எறிந்தார். ராகேஷ் காலடியில் கிடந்தது அந்த நோட்டு. “எடுத்துக்கொள் ராகேஷ்” என்றார் மறுபடியும். ராகேஷ் கலவரமாகப் பார்த்தான். “இப்போ அதோட மதிப்பு என்ன?” “500 ரூபாய்தான்.”

“முதல் முறை நான் எழுந்து நின்னு கொடுத்தப்போ நீ எப்படி ஃபீல் பண்ண? கசக்கி எறிஞ்சு பொறுக்கிக்கோன்னு கொடுத்தப்போ எப்படி ஃபீல் பண்ண?” ராகேஷ் யோசனையாகப் பார்த்தான். “இதேதான் வேலைக்கும். நீ வேலையை பிரசன்ட் செய்யுற விதமும் ரொம்ப முக்கியம் ராகேஷ்” என்றார். ராகேஷ் முகத்தில் தெளிவு வந்திருந்தது. “தேங்க் யூ சார்” என்றான் தன்னிச்சையாக!

(பேசலாம்)

- தொடர்புக்கு: director@gemba.co.in

ஐந்நூறு ரூபாய்க்கு எவ்வளவு மதிப்பு? | தீயா வேலை செய்யணும் ப்ரோ - 4
‘சாண்ட்விச் ஜெனரேஷ’னுக்கு என்ன பிரச்சினை? | தீயா வேலை செய்யணும் ப்ரோ - 3

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in