‘சாண்ட்விச் ஜெனரேஷ’னுக்கு என்ன பிரச்சினை? | தீயா வேலை செய்யணும் ப்ரோ - 3

‘சாண்ட்விச் ஜெனரேஷ’னுக்கு என்ன பிரச்சினை? | தீயா வேலை செய்யணும் ப்ரோ - 3
Updated on: 
2 min read

“என்ன பலத்த யோசனை?” டாக்டர் கே.கே. தோளைத் தொட்டதும் சிந்தனை கலைந்தார் ராஜன்.

“சார், ஒரு டிரெய்னி கேட்ட கேள்வி கொஞ்சம் டிஸ்டர்ப் ஆக்கிடுச்சு. பேப்பர் போட்டாதான் பேசுவீங்களான்னு கேக்கறான். ஆறு வருஷம் முன்னாடி நம்ம பிசினஸ் டிவிஷன்ல 50 பேர் இருந்தோம். இப்ப 175.

இது ஸ்கேல் இஷ்யூ. எப்படி முன்ன மாதிரி பர்சனல் டச் இருக்கும்? என்ன சொல்லி அவனுக்குப் புரிய வைக்கறது?” அதை ஏற்றுக்கொள்ளாதவாறு மெல்லச் சிரித்தார் டாக்டர் கே.கே. “கம்பெனி பெருத்ததுதான் நிஜமான காரணமா? இப்பதான் டெக்னாலஜி விளையாடுதே! தவிர மாசத்துக்கு ஒரு டவுன் ஹால், நிறைய எங்கேஜ்மென்ட், ஈவென்ட்ஸ் எல்லாம் இருக்கே? பேசணும்னா நீங்க தனியா பேசணும்னுகூட இல்லையே... உங்க டீம்ல அடுத்த லெவல்ல இப்ப ஏழு பேர் இருக்காங்கள்ல? சும்மா காரணம் சொல்லாதீங்க ராஜன். பதில் தேடுங்க!”

“பசங்க நல்லா கேள்வி கேக்கறாங்க. எல்லாத்தையும்...ஹும்ம்.” டாக்டர் கே.கே. பரிவோடு பார்த்தார். ஆனால், பேச்சைத் தொடர விரும்பியது தெரிந்தது. அவரைத் தவிர்க்க முடியாது. கம்பெனியின் ஆலோசகர். நிர்வாகத்துக்கு நெருக்கம். அறுபது வயதைக் கடந்த, பழுத்த தொழில் துறை நிபுணத்துவம் கொண்டவர்.

“நீங்களே சொல்லுங்க சார். எங்க காலத்துல இப்படியா இருந்தது? எதுக்குமே திருப்தி இல்லேன்னா என்ன பண்றது? இவங்களைச் செல்லம் கொடுத்துச் சீரழிக்கிறோம்.

இப்ப எனக்கு 44 வயசாகுது. என் பாஸைப் பார்த்து இப்படி வெடுக்குனு கேள்வி கேட்டதில்ல.” “அது மரியாதையா, பயமா?” “ஏதோ ஒண்ணு. பெற்றோர், மேலதிகாரிகள், அரசு அமைப்புகள் எல்லாத்துக்கும் கட்டுப்பட்டு வாழ்ந்தோம். இப்ப?”.

ஒரு மிடறு காபியை விழுங்கிவிட்டு, “ஜோக் என்னன்னா, இப்ப இந்த இரண்டு தலைமுறைகளைப் பார்த்தும் பயப்படறோம். அப்பா - மகன், பாஸ் - டீம் மெம்பர்… நாங்க ஒரு சாண்ட்விச் ஜெனரேஷன். இரண்டு பக்கமும் கேள்வி கேக்கறாங்க!” என்கிற ராஜனின் குரலில் ஒரு சுய பச்சாதாபம் தெரிந்தது.

“நீங்க கேள்விக்குப் பதில் தேடலை ராஜன்!” என்று தீர்க்கமாக நெருக்கினார் கே.கே. “ஏன் பேச முடியலைன்னு காரணம் சொல்றதைவிட, எப்படி இதைச் சரிசெய்யலாம்னு யோசிங்க.

அவங்களுக்குத் தேவையானதை எப்படிக் கொடுக்கணும்னு பாருங்க. அவங்ககிட்ட உங்க கவனம் முழுமையா இருக்கான்னு யோசிங்க. இதை ஒரு நிறுவனப் பிரச்சினையா பார்க்காம உளவியல் பிரச்சினையா பாருங்க.”

சொல்லிவிட்டு நகர்ந்தார் அவர். வயதாகிவிட்டாலும் எல்லா வயதினருடனும் நெருங்கிப் பழகும் திறனும் ஆர்வமும் கொண்டவர்.

அவர் பேசினால் எந்தத் தரப்பும் அவரிடம் மயங்கிவிடும் கவர்ச்சி கொண்டவர் டாக்டர் கே.கே. கண்டிப்பாக அவரிடம் இந்த ஜென் ஸீ தலைமுறை விஷயங்களை விரிவாகப் பேசி, அறிவுரை கேட்க வேண்டும் என்று எண்ணிக் கொண்டார் ராஜன்.

யோசிக்கையிலேயே சேஷனிடமிருந்து அழைப்பு வந்தது. அவரும் கம்பெனியில் பழம் தின்று கொட்டை போட்டவர். பெரிய தலை. முன்கோபி. “யார் இந்த ராகேஷ்?” என்றார் எடுத்த எடுப்பில்.

அடுத்த ஏழரை தயாராக வருவது தெரிந்தது. “என்ன சேஷ்?” “ஒரு மெயில் அனுப்பியிருக்கான் எனக்கு. உங்களுக்கு இப்ப அனுப்பறேன் பாருங்க. உங்க டீம்தானே அவன்? கொஞ்சம் கூப்பிட்டு மந்திரிங்க. கிளையன்ட்கிட்ட இப்படி மெயில் போட்டா கோவிந்தாதான்” என்று போனைத் துண்டித்தார்.

படித்துப் பார்த்ததில் அவர் கோபம் புரிந்தது. எந்த மரியாதையும் அற்று முன் பின் விவரமில்லாமல் தட்டையாக ஒருவரிச் செய்தி அது. அழைப்பதற்குள் ராகேஷே உள்ளே வந்தது வசதியாகப் போயிற்று. எதுவும் சொல்லாமல் பார்த்தார் ராஜன்.

“பி.டி. டீம் ஹெட் சேஷ் கூப்பிட்டார். உங்ககிட்ட பேசச் சொன்னார்.” “ஏம்பா, அவருக்கு 55 வயசு. கம்பெனியில் சீனியர். அவருக்குப் போயி தந்தி மாதிரி மொட்டையா மெயில் பண்ணிருக்கே. இந்த ‘தேங்க் யூ’ ‘ரிகார்ட்ஸ்’ இதெல்லாம் கெட்ட வார்த்தை இல்லப்பா. அவர் ஸ்டேட்டஸுக்கு இல்லப்பா, வயசுக்கு மரியாதை கொடுக்கணும்.”

“நைட் 11 மணிக்கு அவசரமா அனுப்பினேன், வேலையை முடிப்பதற்காக. மரியாதை கொடுக்கறதைவிட வேலையை கரெக்டா செய்யறதுதானே முக்கியம்?!” “வேலயையும் முடிக்கணும், சுமுக உறவையும் பராமரிக்கணும். ரெண்டும் முக்கியம் ராகேஷ்!” புரிந்ததுபோல ராகேஷ் தலையாட்ட, “என்னோட லஞ்ச் சாப்பிடலாம் ராகேஷ். நிறைய பேசலாம்” என்றார் ராஜன்.

(பேசலாம்)

- தொடர்புக்கு: director@gemba.co.in

‘சாண்ட்விச் ஜெனரேஷ’னுக்கு என்ன பிரச்சினை? | தீயா வேலை செய்யணும் ப்ரோ - 3
பேசினால் மட்டும் பிரச்சினை தீர்ந்துவிடுமா? | தீயா வேலை செய்யணும் ப்ரோ - 2

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in