

அடுத்த சில நாள்களில் ராஜனுக்குத் தலைக்கு மேல் வேலை இருந்தது. உண்மையில், தலைக்கு மேல் அல்ல, உள்ளே என்பதுதான் பொருத்தமாக இருக்கும்.
வாரக்கடைசியும்கூட அலுவலக உரையாடல்களாகவே கழிந்தது. ‘வேகமாக ஓடினால்தான் இருந்த இடத்தில் நிற்கவாவது முடியும், டிரெட்மில் போல!’ என்று தன் பழைய பாஸ் பிரசாத் அடிக்கடி சொல்வது நினைவுக்கு வந்தது.
ஏன் தன்னால் ஒரு விடுமுறை நாளைக்கூடக் குடும்பத்துடன் செலவிட முடியவில்லை என்று எண்ணினார். கார்ப்பரேட் சூழல் என்றைக்கும் இல்லாத அளவு நிச்சயமின்மை கொண்டதாக உள்ளதுதான் என்று தோன்றியது.
அலுவலகத்துக்கு வந்த ஒரு மணி நேரத்திலேயே இனம் புரியாத சோர்வு தட்டியது. காபி குடிக்கையில் வீட்டிலிருந்து அழைப்பு. வாழ்க்கை இணையர்தான்.
“பையன் நைட் ஷோ படத்துக்கு புக் பண்றேன்னு சொல்றான். அப்பாவைக் கேட்டுப் பண்ணுன்னா, நீங்க கேளுங் கன்னு சொன்னான்.
ஓகேவா? 10:30 ஷோதான்!” தனக்கு என்ன வேண்டும் என்று பத்தாவது படிக்கும் மகனுக்குத் தெளிவாகத் தெரிகிறது. “பண்ணட்டும்.. பார்க்கலாம்” என்று சொல்லிவைத்தார்.
ஏன் மகன் எனக்கு போன் செய்ய வில்லை? ஒருவேளை இவனும் ராகேஷ் போலப் பெரியவர்களிடம் பேசுவதைத் தவிர்க்கிறானா? வீட்டில் முட்டை ஓடுகள் மேல் நடக்கும் சூழலை அமைத்துக் கொடுத்துள்ளோமா? இப்போதே இவ்வளவு குறைவாகப் பேசினால், இவன் கல்லூரிக்குச் சென்றால்? சுழல்போல அதிவிரைவுச் சிந்தனைச் சங்கிலி வந்து போனது.
நிகழ்காலம் உகந்ததாக இல்லாதபோது மனம் கடந்த காலத்தில் லயிக்கிறது. தான் வேலைக்குச் சேர்ந்த காலத்தை எண்ணிப் பார்த்தவாறு, ‘அது ஒரு பொற்காலம்’ என்று நினைத்துக்கொண்டார்.
கடுமையான, ஆனால் நியாயமான மேலதிகாரி. குழு முழுவதும் ஏழு ஆண்டுகள் குடும்பம் போல ஒன்றாக வேலை பார்த்தது .
வெளி உலகக் கவனச் சிதறல்கள் இல்லை. குறைவான வருமானத்தில் மிக நிறை வாக வாழ்ந்ததுபோலத் தோன்றியது. ஏன் அந்தப் பற்றுதல் இப்போது இல்லை? இந்தச் சந்ததியினருக்கு வேலையிலும் பற்றில்லை, மனிதர்களிடமும் மரியாதை யில்லை. என்ன செய்ய?
போனில் வந்த அலாரம் அடுத்த சந்திப்பை நினைவுபடுத்தியது. டாக்டர் கே.கே.யுடன் ஆண்டு நடப்புக்கான பயிற்சிகள் பற்றிய ஆய்வறிக்கையை விவாதிக்க வேண்டும்.
அடுத்த ஒரு மணி நேரம் சுவாரசியமாகப் போகும் என்று நினைத்துக்கொண்டே சந்திப்பு அறைக்குச் சென்றார். அங்கு டாக்டர் கே.கே. நாற்காலியில் உட்கார்ந்தவாறு சிறு சிறு எளிய உடற்பயிற்சிகளைச் செய்து கொண்டிருந்தார்.
“என்ன சார், காலையில ஜிம் போக லையா?” என்று கேட்டதற்கு, “ஒரு மணி நேரத்துக்கு மேல் உட்கார்ந்தா இப்படி எதையாவது செஞ்சு உடலுக்கு ஒரு ஹலோ சொல்லணும்.
புகை பிடிப்பதை விட ஆபத்தானது எழுந்திருக்காமல் வேலை செய்வது” என்றார். இது போல அவர் வாயிலிருந்து உதிரும் முத்துகளுக்குத் தான் கம்பெனி இவரைக் கொண்டாடுகிறது.
“முதல்ல உங்களுக்கு ஒரு தேங்க்ஸ் சொல்லணும் சார். உங்க 500 ரூபாய் எடுத்துக்காட்டைப் பயன்படுத்தினேன். நல்ல மாற்றம் தெரிஞ்சது!” என்று கை குலுக்கி நன்றி தெரிவித்தார் ராஜன். “என்ன பண்ணீங்க?” என்பது போலப் பார்த்தார். “முதல்ல எழுந்து நின்னு மரியாதையா கொடுத்தேன்.
அப்புறம் அந்த நோட்டைக் கசக்கி எறிந்து எடுத்துக் கோன்னு சொன்னேன். இரண்டுக்கும் உள்ள வித்தியாசத்தை உணர்வுரீதியா புரிய வச்சேன்” என்றார் பெருமிதமாக.
“இதைத் திருப்பிப் போட்டா இன்னொரு பாடம் புகட்டும்” என்று புதிராகச் சிரித்தார். “அதைப் பெறுநர் கோணத்துல பார்க்காம அந்த 500 ரூபாய் தாளின் பார்வையில பார்த்தா?” “புரியலை டாக்டர் கே.கே.”
“நீங்க நோட்டை எப்படிக் கசக்கினாலும் அதன் மதிப்பு மாறப்போவதில்ல, அந்த நோட்டு செல்லும். பிறர் மரியாதையை வச்சு, நம்ம மதிப்பு மாறப்போவதில்ல ராஜன். அதையும் சேர்த்துச் சொல்லுங்க!”
கன்னத்தில் அறைந்து சொல்லித் தந்ததுபோல இருந்தது. மரியாதை பிறர் கொடுத்து வருவதில்லை. அது நாமே நம் மதிப்பை உணரும் தருணம். அதை உணர்ந்தால் வெளியிலிருந்து தரப்படும், ‘மரியாதை குறைவு’ அவ்வளவு பெரிய பாதிப்பைத் தராது.
“உங்க அனுமதி இல்லாம யாரும் உங்களை அவமானப்படுத்த முடியாது.” “யெஸ் சார். மகாத்மா காந்தி சொன்னது.”
“அவர் படமும் அந்த ரூபாய் நோட்டுல இருக்கே.. இதை, நமக்கு அடிக்கடி ஞாபகப்படுத்தத்தான்..” என்று சொல்லி புன்னகைத்தவாறு மீட்டிங்கைத் தொடங்கினார்!
(பேசலாம்)