சுவடியியல் படிப்பைப் பற்றித் தெரியுமா?

சுவடியியல் படிப்பைப் பற்றித் தெரியுமா?
Updated on
2 min read

நம் கடந்தகால அறிவியலையும் இலக்கியங்களையும் கலாச்சாரத்தையும் எதிர்காலச் சந்ததியினருக்குக் கடத்த வேண்டும். அது சுவடியியல் (Manuscriptology) மூலம் சாத்தியமாகும்.

தொல்லியல் துறையின் துணைப்பிரிவாகச் சுவடியியல் இருக்கிறது. தமிழ்நாட்டில் தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகம், வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழகம், சென்னை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் ஓராண்டு சுவடியியல் கல்வி வழங்கப்படுகிறது. இந்தப் படிப்புக்குப் பிறகு சுவடிகளைப் பாதுகாத்தல், தமிழ்ச் சுவடிகளைக் கண்டறிந்து படியெடுத்தல், மொழிபெயர்த்தல், விளக்கம் கொடுத்தல், படியெடுத்ததை வெளியிடுதல், பதிப்பித்தல், இணையத்தில் பதிவேற்றம் செய்தல் போன்ற வேலைவாய்ப்புகளைப் பெறலாம்.

தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் முதுகலை சுவடியியல் படிப்பு வழங்கப்படுகிறது. திருவள்ளுவர் பல்கலைக்கழகத்திலும் சுவடியியல் சான்றிதழ் படிப்பும் பட்டயப் படிப்பும் வழங்கப்படுகிறது. உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் கடந்த 2013ஆம் ஆண்டு முதல் ஓராண்டு பட்டயப் படிப்பு வழங்குவதுடன், தமிழ்நாடு அரசு மாதம்தோறும் இப்படிப்பில் பயிலும் மாணவர்களுக்கு ஊக்கத் தொகையை வழங்குகிறது.

தேர்வு அடிப்படையில் தேர்ச்சிப் பெறும் 10 மாணவர்களுக்கு மட்டும் ரூ.3000 ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. தமிழ்ப் படித்த மாணவர்களும், தமிழ் ஆர்வலர்களும் இலக்கியப் படிப்பு முடித்தவர்களும் இப்படிப்பில் சேரலாம். விருப்பமுள்ளவர்கள் குறைந்தது பத்தாம் வகுப்பில் தேர்ச்சிப் பெற்றவராகவும், 40 வயதுக்குட்பட்டவராகவும் இருக்க வேண்டும்.

சுவடிகளைப் பாதுகாத்து, பராமரித்து, வகைப்படுத்தும் பணிகளுக்காக அருங்காட்சியகத்திலும் நூலகங்களிலும் வேலைவாய்ப்பு கிடைக்கும். சுவடிகளில் உள்ள தகவல்களை ஆய்வு செய்ய, கலாச்சார - தொல்லியல் துறையில் பணியாற்றும் வாய்ப்பைப் பெறலாம். இந்து சமய அறநிலையத்துறையில் பக்தி நூல்கள், மூலிகை, சுவரோவியங்கள், சுவடிகளைப் பாதுகாக்கும் வேலைகளைப் பெறலாம்.

பதிப்புத் துறையில் சுவடிகளைப் புதிய நூல்களாகத் தொகுத்துப் பதிப்பிக்கலாம். ஓலைச்சுவடிகளில் உள்ள தமிழ் இலக்கியங்களை இணையத்தில் பதிவேற்றும் வேலைகளும், பழைய ஓலைச் சுவடிகளை ‘ஸ்கேன்‌’ செய்து டிஜிட்டல் நிரலாக மாற்றும் வேலைகளும் இருக்கின்றன.

சுவடிகளைப் பாதுகாத்து ஆய்வு செய்பவரை, சுவடியியல் வல்லுநர்கள் என்றழைக்கிறார்கள். சுவடியியல் படிப்பு பல்வேறு துறைகளின் வளர்ச்சிக்கும் அடிப்படையாக உள்ளது. தமிழ் வளர்ச்சி, மருத்துவம், ஜோதிடம், வானியல் போன்ற துறைகளில் ஆராய்ச்சிகளை ஆழப்படுத்தவும் புதிய கண்டுபிடிப்புகளுக்கும் வழிவகை செய்கிறது.

- அ. பவித்ரா (பயிற்சி இதழாளர்)

சுவடியியல் படிப்பைப் பற்றித் தெரியுமா?
கலை ஆர்வமிக்க மாணவர்களுக்கு ஏற்ற ஆடை வடிவமைப்புப் படிப்புகள் | புதியன விரும்பு 2.0 – அத்தியாயம் 33
சுவடியியல் படிப்பைப் பற்றித் தெரியுமா?
பூதக்கண்ணாடி: மனச்சிதைவு கதாபாத்திரமும், மம்மூட்டி நிகழ்த்திய அசாத்தியமும் | ஓடிடி திரைப் பார்வை

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in