கலை ஆர்வமிக்க மாணவர்களுக்கு ஏற்ற ஆடை வடிவமைப்புப் படிப்புகள் | புதியன விரும்பு 2.0 – அத்தியாயம் 33

கலை ஆர்வமிக்க மாணவர்களுக்கு ஏற்ற ஆடை வடிவமைப்புப் படிப்புகள் | புதியன விரும்பு 2.0 – அத்தியாயம் 33
Updated on
3 min read

இன்றைய இளைய தலைமுறையின் மந்திர வார்த்தை ‘ஃபேஷன்’. புதிய டிசைன்களுடனான நவீன பாணி உடை வகைகளே இன்றைய இளைய தலைமுறையின் அடையாளம். ஜவுளி, ஆயத்த ஆடை உற்பத்தித் தொழிலில் இந்தியா அமோக வளர்ச்சி கண்டுள்ளது.

தற்போது ஆடை வடிவமைப்போடு ரீடெய்ல் துறையும் வேகமாக வளர்ந்து வருவதால் ஆடை வடிவமைப்புப் படிப்புகளைப் படிப்பவர்களுக்கு உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் வேலைவாய்ப்புகள் அதிகரித்து வருகின்றன. சமீபகாலமாக, கலை ஆர்வமிக்க மாணவர்கள் இந்தப் படிப்புகளில் சேருவதில் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

நிஃப்ட் கல்வி நிறுவனம்:

தமிழ்நாட்டில் உள்ள சில கல்வி நிறுவனங்களில் ஃபேஷன் டிசைன், காஸ்ட்யூம் டிசைன் அண்ட் ஃபேஷன் போன்ற படிப்புகள் உள்ளன. ஆனாலும், ஃபேஷன் டிசைன், ஃபேஷன் டெக்னாலஜி படிப்புகளைப் படிப்பதற்கு ஏற்ற முக்கியத்துவம் வாய்ந்த கல்வி நிறுவனம் `நிப்ஃட்’ என்று அழைக்கப்படும் நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் ஃபேஷன் டெக்னாலஜி. மத்திய அரசின் ஜவுளித்துறையின் கீழ் உருவாக்கப்பட்டுள்ள இந்தக் கல்வி நிறுவனம், சென்னை, டெல்லி, பெங்களூரு, காந்திநகர், மும்பை, ஹைதராபாத், கொல்கத்தா, போபால், புவனேஸ்வரம், ஜோத்பூர், காங்க்ரா, கண்ணூர், பாட்னா, பஞ்ச்குலா, ரேபரேலி, ஷில்லாங், ஸ்ரீநகர், வாராணசி, டாமன், நவ ராய்ப்பூர் உள்ளிட்ட 20 நகரங்களில் செயல்பட்டு வருகிறது.

நிப்ஃட் கல்வி நிலையங்களில் ஆக்சசரி டிசைன், ஃபேஷன் கம்யூனிகேஷன், ஃபேஷன் டிசைன், நிட்வேர் டிசைன், லெதர் டிசைன், டெக்ஸ்டைல் டிசைன், ஃபேஷன் இன்ட்ரீயர்ஸ் ஆகிய பாடப் பிரிவுகளில் பி.டெஸ். என்கிற நான்கு ஆண்டுப் படிப்பைப் படிக்கலாம். இந்தப் படிப்புகளில் சேர பிளஸ் டூ படித்திருக்க வேண்டும். பி.எஃப்.டெக். (அப்பேரல் புரடக்ஷன்) படிப்பில் சேர பிளஸ் டூ வகுப்பில் கணிதம், இயற்பியல், வேதியியல் ஆகிய பாடப்பிரிவுகளை எடுத்துப் படித்திருக்க வேண்டும்.

இங்குள்ள படிப்புகளில் சேர அகில இந்திய அளவில் நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. அனைத்து பி.டெஸ். பட்டப் படிப்புகளில் சேருவதற்கான நுழைவுத் தேர்வில் ஜெனரல் எபிலிட்டி டெஸ்ட், கிரியேட்டிவ் எபிலிட்டி டெஸ்ட் நடத்தப்படும். குவாண்டிடேட்டிவ் எபிலிட்டி, கம்யூனிகேஷன் எபிலிட்டி, இங்கிலீஷ் காம்ப்ரிஹென்சன், அனலிட்டிக்கல் எபிலிட்டி, ஜெனரல் நாலெட்ஜ் அண்ட் கரண்ட் அஃபையர்ஸ் ஆகிய பிரிவுகளில் ஜெனரல் எபிலிட்டி டெஸ்ட் இருக்கும்.

இத்தேர்வுக்கு விடையளிக்க இரண்டு மணி நேரம் வழங்கப்படும். கிரியேட்டிவ் எபிலிட்டி டெஸ்ட்டில் விடையளிக்க 3 மணி நேரம் வழங்கப்படும். இந்தத் தேர்வுகளில் நெகட்டிவ் மதிப்பெண்கள் கிடையாது. பி.டெஸ். படிப்புகளில் மாணவர்களைச் சேர்ப்பதற்கான. இத்தேர்வில் தகுதி பெறுபவர்கள் சிச்சுவேஷன் டெஸ்ட் எழுத அனுமதிக்கப்படுவார்கள். அதிலிருந்து தகுதியுடைய மாணவர்கள் பி.டெஸ். படிப்புக்குத் தேர்வு செய்யப்படுவார்கள்.

பி.எஃப்.டெக். படிப்பில் சேர விரும்பும் மாணவர்களுக்கு ஜெனரல் எபிலிட்டி டெஸ்ட் மட்டுமே இருக்கும். இத்தேர்வுக்கு விடையளிக்க மூன்று மணி நேரம் வழங்கப்படும். அதன் அடிப்படையில் அந்தப் படிப்புகளுக்கு மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

ஃபேஷன் டிசைன், பேஷன் டெக்னாலஜி ஆகிய இரண்டு படிப்புகளிலும் சேருவதற்கும் நுழைவுத் தேர்வு எழுத மாணவர்கள் அனுமதிக்கப்படுவார்கள். பின்னர், அதிலிருந்து ஒரு படிப்பைத் தேர்வு செய்துகொள்ளலாம்.

தமிழ்நாட்டில் சென்னை, மதுரை, கோவை, கடலூர், நாகர்கோவில், சேலம், தஞ்சாவூர், திருச்சி, வேலூர், புதுச்சேரி உள்பட நாட்டின் முக்கிய நகரங்களில் நிப்ஃட் கல்வி நிலையத்தில் படிப்பதற்கான நுழைவுத் தேர்வை எழுதலாம்.

உலகளாவிய அனுபவம்

டிசைனிங் துறையில் ஆர்வமும் படைப்பாற்றலும் உள்ள மாணவர்களுக்கு ஏற்ற படிப்புகள் ஃபேஷன் டிசைன், ஃபேஷன் டெக்னாலஜி ஆகியவை. இங்கு படிக்கும் மாணவர்களுக்கு தியரி பாடங்களுடன் தொழில் நிறுவனங்களில் பணிபுரிவதற்கு ஏற்ற வகையில் செயல்முறைப் பயிற்சிக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.

சர்வதேச அளவில் புகழ் பெற்ற 23 ஃபேஷன் டெக்னாலஜி கல்வி நிறுவனங்களுடன் நிப்ஃட் தொடர்பு வைத்துள்ளது. நியூயார்க்கில் உள்ள ஃபேஷன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி கல்வி நிலையத்துடன் நிப்ஃட் கல்வி நிறுவனம் டியூயல் டிகிரி (Dual Degree) வழங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த டியூயல் டிகிரி திட்டத்தின்கீழ் பட்டங்களைப் பெறத் தேர்வு செய்யப்படும் சிறந்த மாணவர்கள் நிப்ஃட் கல்வி நிலையத்தில் இரண்டு ஆண்டுகள் படிப்பார்கள். அதைத் தொடர்ந்து ஓராண்டு நியூயார்க்கில் ஃபேஷன் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி கல்வி நிலையத்தில் படிப்பார்கள்.

அதன்பிறகு, அந்த மாணவர்கள் நிப்ஃட் கல்வி நிலையத்தில் படிப்பைத் தொடர்வார்கள். படிப்புக் காலம் முடிந்ததும். நிப்ஃட் கல்வி நிலையத்திலும் நியூயார்க்கில் உள்ள ஃபேஷன் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி கல்வி நிலையத்திலும் ஒரு சேர பட்டங்களைப் பெறலாம். 2025-26ஆம் ஆண்டில் 29 மாணவர்கள் நியூயார்க்கில் உள்ள ஃபேஷன் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி கல்வி நிலையத்தில் டியூயல் டிகிரி படிப்பில் சேர அனுமதிக்கப்பட்டார்கள்.

சர்வதேச வாய்ப்புகள்

இதேபோல ஸ்விட்சர்லாந்தில் ஜூரிச் நகரில் உள்ள எஸ்டிஎஃப் கல்வி நிலையத்தில் மூன்று வார கோடைக்காலப் பயிற்சியில் சேரும் வாய்ப்பை நிப்ஃட் மாணவர்கள் பெறுகிறார்கள். இங்குப் படிக்கச் சேரும் தகுதி படைத்த மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகையும் கிடைக்கும் சாத்தியம் உண்டு.

இங்குப் படிக்கும் மாணவர்கள் சர்வதேச அளவில் நடத்தப்படும் டிசைன் போட்டிகளில் வாகை சூடி இந்தக் கல்வி நிறுவனத்துக்குப் பெருமை சேர்த்து வருகிறார்கள். இங்கு படிக்கும் மாணவர்களுக்கு உள்நாட்டு நிறுவனங்களிலும் பன்னாட்டு நிறுவனங்களிலும் கேம்பஸ் இன்டர்வியூ மூலம் நல்ல வேலைவாய்ப்பு கிடைக்கிறது. டிசைன் ஸ்டுடியோ வைத்து லட்சக்கணக்கில் சம்பாதிக்கும் திறமைசாலி மாணவர்களும் இருக்கிறார்கள். தனியே சொந்த முதலீட்டில் ’பொட்டீக்’ அமைப்பவர்களும் இருக்கிறார்கள்.

இங்குப் படித்த முன்னாள் மாணவர்களில் பலர் ஃபேஷன் டிசைன் துறைகளில் பிராண்ட் மேனேஜர்கள், குவாலிட்டி கண்ட்ரோலர்கள், புரடக்ஷன் மேனேஜர்கள், ஃபேஷன் ஒருங்கிணைப்பாளர்கள், மார்க்கெட்டிங் மேனேஜர்கள் போன்ற முக்கியப் பொறுப்புகளை வகித்து வருவதோடு, லண்டன், பாரிஸ், நியூயார்க் உள்ளிட்ட முக்கிய ஃபேஷன் மையங்களில் தங்களின் நவீன டிசைன்களைக் காட்சிக்கு வைத்திருக்கிறார்கள்.

ரசனை, கற்பனை, கலைத்திறன், துணிகளின் தரத்தைக் கண்டறிவதில் ஆழ்ந்த அறிவு, எந்தத் துணி எந்தவிதமான உடையை வடிவமைப்பதற்குப் பொருத்தமாக இருக்கும் என்பதை நிர்ணயிக்கும் நுண்ணறிவு, எந்த வண்ணம் எதற்குப் பொருத்தமாக இருக்கும் என்பதைத் தீர்மானிக்கும் கலை உணர்வு, காலத்துக்கு ஏற்ற வகையில் புதியபுதிய டிசைன்களை உருவாக்கும் கலைத்திறன, நினைத்த டிசைன்களைக் கோட்டுச் சித்திரங்களாக வரைந்து காட்டும் ஓவியத்திறன், மாறிவரும் ஃபேஷன் டிரெண்டுகளை உடனுக்குடன் அறிந்து கொள்வதில் ஆர்வம் போன்றவை இருந்தால், ஃபேஷன் துறையில் முத்திரை பதிக்கலாம். மேலும் விவரங்களுக்கு: www.nift.ac.in

- கட்டுரையாளர், மூத்த பத்திரிகையாளர் | தொடர்புக்கு: pondhanasekaran@yahoo.com

கலை ஆர்வமிக்க மாணவர்களுக்கு ஏற்ற ஆடை வடிவமைப்புப் படிப்புகள் | புதியன விரும்பு 2.0 – அத்தியாயம் 33
கனவுத் தொழிற்சாலைக்கு வழிகாட்டும் திரைப்படத் தொழில்நுட்பப் படிப்புகள் | புதியன விரும்பு 2.0 - அத்தியாயம் 32

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in