பூதக்கண்ணாடி: மனச்சிதைவு கதாபாத்திரமும், மம்மூட்டி நிகழ்த்திய அசாத்தியமும் | ஓடிடி திரைப் பார்வை
‘பிரம்மயுகம்’ ‘களம்காவல்’ படங்களில் நாம் காணும் மம்மூட்டியின் உலகம் பைத்தியம் பிடிக்க வைக்கிறது என்கின்றனர் நெட்டிசன்கள். ஆனால், இதுபோன்ற கதாபாத்திரங்களை அவர் 25 ஆண்டுகளுக்கு முன்பே தன் நடிப்பாற்றலால் ஊதித் தள்ளியிருக்கிறார். அப்படியொரு தொடக்கக் காலக் கதாபாத்திரத்தைப் பூதக்கண்ணாடி வைத்துப் பார்க்கலாமா?
மலையாளத் திரையுலகில் 90-களின் கடைசியில் நல்ல வரவேற்பைப் பெற்ற பல படங்கள் உண்டு. அந்த வரிசையில் 1997-இல் கேரள மாநில அரசின் சிறந்த திரைப்படத்துக்கான விருதைப் பெற்றது மம்மூட்டி நடித்த படம் ‘பூதக்கண்ணாடி’. இத்திரைப்படத்தை இயக்கிய லோகிததாஸ் 45-வது தேசியத் திரைப்பட விருது விழாவில் சிறந்த அறிமுகப்பட இயக்குநருக்கான இந்திரா காந்தி விருதைப் பெற்றுள்ளார். இவ்வளவு சிறப்புமிக்க படத்தின் கதையையும் அதன் உருவாக்க நேர்த்தியையும் பார்ப்போம்.
கதையின் மைய கதாபாத்திரமான வித்யாதரன் (மம்மூட்டி - நாயகர்) மனைவியை இழந்தவர். தனது பெண் குழந்தை ஸ்ரீ குட்டியே உலகமென வாழ்ந்து வரும் வித்யாதரன், மறுமணம் செய்துகொள்ள மறுக்கிறார். பால்ய காலத்தில் இரண்டு பாம்புகள் பின்னிப் பிணைந்திருந்தபோது, அவற்றின்மீது கற்களை எரிந்து பிரித்துவிடுகிறார். அதனால் தான், தன்னுடைய மனைவி பாம்பு கடித்து இறந்துவிட்டதாகவும், இன்னும் பாம்பிற்குப் பழிவாங்கும் உணர்ச்சி தீரவில்லை எனவும் நம்பும் அவர், மறுமணம் புரியும் பெண்ணும் பாம்பால் பழிவாங்கப்படலாம் என்று மறுமணத்தை மறுத்து வருகிறார்.
இன்னொரு பக்கம், கணவர் மீது பிடிப்பின்றி, வாழ்வை ஏனோதானோ என்று தனது மகள் மீனுவுடன் தனித்து வாழ்ந்துவருகிறார் சரோஜினி (ஸ்ரீலட்சுமி- நாயகி). சரோஜினியிடம் அவ்வூரில் உள்ள சில ஆண்கள் தவறான கண்ணோட்டத்தில் பழக முயல்கின்றனர். அவர்களைச் சரியான விதத்தில் கையாண்டு தவிர்கிறார். வித்யாதரனும் சரோஜினியும் பள்ளிப்பருவம் முதலே நட்பாகப் பழகியவர்கள். ஒருவர்மீது ஒருவர் அன்பும் அக்கறையும் கொண்டுள்ளனர். இந்நிலையில் அது காதலாக மலர வேண்டாம் என முடிவெடுத்துள்ளார்கள்.
கடிகாரம் பழுதுநீக்கும் கடை வைத்துள்ள வித்யாதரன், பகலிலும் மின்விளக்கு (torch light) எடுத்துச் செல்லும் அளவுக்கு இருளின் மீது பெரும் பயம் கொண்டவராக உள்ளார். ஸ்ரீக்குட்டியுடன் விளையாடிக் கொண்டிருந்த மீனு, வித்யாதரனிடம் கூறிவிட்டு இருட்டியதும் தன் வீட்டை நோக்கிப் புறப்படுகிறார். சிறிதுநேரம் கழித்து மீனு காணாமல் போனதை அறிந்து ஊர் மக்கள் எல்லோரும் ஒன்று கூடி தேடுகின்றனர்.
அப்போது, குகை ஒன்றில் மீனு பாலியல் வன்கொடுமை ஆளாகி, கொடூரமாகக் கொல்லப்பட்டுக் கிடப்பது தெரியவருகிறது. ‘இருள் என்றும் பார்க்காமல் மீனுவை தான் கொண்டுபோய் விட்டிருந்தால் இந்த நிலைமை வந்திருக்காதே’ என எண்ணி மனமுடைகிறார் வித்யாதரன். காவல் துறை விசாரணையில் வேட்டைக்காரன்தான் இந்தக் கொடிய குற்றத்தைச் செய்திருப்பான் என வித்யாதரன் தனது சந்தேகத்தைக் கூறுகிறார்.
எதிர்பாராதவிதமாக அந்த வேட்டைக்காரனைச் சந்தித்தபோது இருவருக்குமிடையில் கைகலப்பு ஏற்படுகிறது. அந்தப் பதற்றமான சூழலில், எதிர்பாராதவிதமாக, வேட்டைக்காரன் மலையிலிருந்து கீழே விழுந்து இறந்துவிடுகிறார். ஆனால், வித்யாதரன் கீழே தள்ளிக் கொன்றுவிட்டதாக ஊர் நம்புகிறது. இதனால் கொலைக் குற்றத்துக்கு ஆளாகி ஏழு ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவிக்கிறார்.
சிறையில் இருக்கும்போது, அதிகாரிகளுக்குக் கடிகாரம் பழுதுநீக்கிக் கொடுப்பது உள்படப் பல உதவிகளைச் செய்கிறார். இதனால், தன்னுடைய சிறை அறையில் பூதக்கண்ணாடியை வைத்துக்கொள்ளும் பிரத்தியேக வசதியைப் பெறுகிறார் வித்யாதரன். சுவரில் இருக்கும் ஓட்டை வழியே குன்றுகளையும் அங்குப் பாடல்கள் பாடி யாசகம் பெறும் தம்பதியையும் அவர்களின் மகனையும் மகள் மீனுவையும் ‘பூதக்கண்ணாடி’ மூலம் பார்க்கிறார். ஒருநாள் அதுபோல் பார்க்கையில் சிறைக் காவலர் ஒருவர் அந்த யாசகர் தம்பதியின் மகளைப் பாலியல் வன்கொடுமை செய்வதைப் பார்க்கிறார். எதுவும் செய்ய இயலாமல் நிர்க்கதியான நிலையில் மனமுடைகிறார்.
வித்யாதரன் விடுதலையாகும் நாளன்று, சிறைக் காவலருடன் சண்டையிட, உயரதிகாரி வந்து விசாரிக்கிறார். வித்யாதரன் சுவரின் துளை வழியாகப் பார்த்த இடத்தைக் காட்ட, அப்போது அங்குத் துளையே இல்லை. அவர் கண்டது அனைத்தும் பிரமையே எனப் பின்பே தெரியவருகிறது. சிறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வித்யாதரனுக்கு மனச்சிதைவு நோய் உள்ளதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். சரோஜினியும் ஸ்ரீ குட்டியும் வித்யாதரனை அழைக்க வரும்போதும், இருவரையும் பார்த்து ‘நீங்கள் யார்?’ என்று வித்யாதரன் கேட்க, சோகத்துடன் முடிவடைகிறது ‘பூதக்கண்ணாடி’ திரைப்படம்.
இப்படத்தை இயக்கிய லோஹிததாஸ் திரைக்கதை எழுத்தாளராக திரைத்துறையில் பணியாற்றி பின்பு இயக்குநராக வளர்ந்தவர். நாயகக் கதாபாத்திரத்துக்கான வழக்கத்தைத் தகர்த்து, கூச்சச் சுபாவமும் பயமும் உள்ள ஆணாக வித்யாதரனை படைத்திருக்கிறார் நாயகி கதாபாத்திரத்துக்கான வழக்கத்தைத் தகர்த்து, துணிவான பெண்ணாகக் காண்பித்துள்ளார் லோஹிததாஸ். படத்தொகுப்பாளர் முரளி, ஒரு மணி நேரம் ஐம்பது நிமிடங்களில் சுவாரசியமாக படத்தைத் தொகுத்துள்ளது, கதையின் ஓட்டத்துக்கு வலிமை சேர்த்துள்ளது.
நடிகர் மம்மூட்டி கதாநாயகராக நடிக்காமல், கதைக்குத் தேவையான கதாபாத்திரமாக நடித்துள்ளார். ஒற்றையடிப் பாதை, குறுகிய தெரு, மண் சுவர், முள்ளாலான படல் என 90-களின் நிலப்பரப்பை அப்படியே அழகாகப் படம்பிடித்துள்ளனர். வண்ணங்களை அள்ளித் தெளிக்காமல் எப்படி இருக்கிறதோ, அப்படியே வண்ண அமைப்பு செய்யப்பட்டுள்ளது.
காதல், இச்சை, போன்ற அடிப்படையான மனித உணர்வுகளை யதார்த்தமாக படம் பிரதிபலித்திருக்கிறது. இணையத் திரைப்படத் தரவுத்தளம் (IMDB) இப்படத்துக்கு 7.9/10 மதிப்பீடு அளித்துள்ளது. இப்படத்தை இப்போதும் ஜியோ ஹாட்ஸ்டார் தளத்தில் காணலாம்.
- ஏழுமலை பூங்கார்ச்சுனன், பயிற்சி இதழாளர்.
