

திவ்யா
ஓவியங்கள் வரைவது, கலைப் படைப்புகளை உருவாக்கி விற்பனை செய்வது, குழந்தை களுக்கு ஓவியக் கலையைக் கற்றுக்கொடுப்பது எனப் பன்முகமாக இயங்கி வருகிறார் சென்னையைச் சேர்ந்த திவ்யா. ‘நிறங்கள்’, ‘ஹோலோஹியூட்’ எனும் இன்ஸ்டகிராம் பக்கங்களை நிர்வகித்துவருகிறார்.
கலையைச் சுற்றி...
பள்ளிப் படிப்புக்குப் பிறகு கட்டிடக் கலையில் பட்டம் பெற்று பல்வேறு துறைகளில் பணியாற்றி வந்த திவ்யாவுக்கு, கலையின்மீது அளவுகடந்த ஆர்வம். அவ்வப்போது ஓவியங்கள் வரைந்து வந்த அவர், வேலையைத் துறந்துவிட்டு முழு நேரமாகக் கலையைக் கையில் எடுத்துவிட்டார்.
“அனைவருக்கும் ஏதாவது ஒரு ‘ஹாபி’ இருக்கும். என்னுடைய ‘ஹாபி’ கலைதான். சிறு வயதில் ஓவியம் வரை வதற்குத் தேவையான பொருள்களை வாங்கிக்கொடுத்து, தாத்தா என்னை ஊக்கப்படுத்தினார்.
பின்னாளில் கல்லூரிப் படிப்பு முடிந்து வேலைக்குச் சென்றபோதும்கூடக் கலையைச் சுற்றியே இயங்க வேண்டும் என என் மனசு விரும்பியது.
முதலில் நானே வரைந்து டிசைன் செய்த ஹோலோகிராம் ஸ்டிக்கர்கள், பெயர் பொறித்த ‘கஸ்டமைஸ்டு’ சாவிக்கொத்துகள் ஆகிய வற்றை உருவாக்கினேன். சில பாப்-அப் நிகழ்ச்சிகளில் பங்கேற்று ஆர்டர்களை எடுத்து விற்பனையும் செய்தேன்.
‘நிறங்கள்’, ‘ஹோலோஹியூட்’ எனும் இன்ஸ்டகிராம் பக்கங்களில் நான் வரைந்த ஓவியங்களை, படைப்புகளைப் பதிவுசெய்து வருகிறேன். நேரில் அல்லது இணையம் வழியே குழந்தைகளுக்கு ஓவியம் வரையக் கற்றுத்தருகிறேன்.
முன்பு இருந்ததைப்போல இல்லாமல் பெற்றோரும் குழந்தைகளை ‘ஆர்ட்’ சார்ந்து இயங்க ஊக்கப்படுத்து கின்றனர். இந்த மாற்றம் ஆரோக்கியமானது. படிப்பைப் போல கலை, விளை யாட்டுக்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகி விட்டது.
ஒரு துறையை மட்டுமே சார்ந்து இருக்காமல் இரண்டு அல்லது மூன்று திறன்களை வளர்த்துக் கொள்ள வேண்டும். எடுத்துக்காட்டுக்கு, கலைத் துறையில் பயணிக்கும் ஒருவர் கலைப் படைப்புகளை மட்டுமே செய்ய வேண்டு மென்கிற கட்டாயம் இனி இருக்காது என நினைக்கிறேன்.
இ-காமர்ஸ், மார்க் கெட்டிங், அறிவியல் - தொழில்நுட்பம் எனப் பல்துறை சார்ந்தும் கலைத்திறன் கொண்டவர்கள் பணியாற்றலாம். அதற்கான வாய்ப்புகள் அதிக அளவில் பெருகியுள்ளன” என்கிறார்.
வழி தேடி...
கலைமீது ஆர்வம் இருந்தாலும், தொடர்ந்து அத்துறை சார்ந்து ‘அப்டேட்’ செய்துகொள்ள வேண்டியது அவசியம் என்கிறார் திவ்யா. “டிஜிட்டல் வளர்ச்சியால் ஓவியங்கள் வரைய, டிசைன் செய்வதற்கான சாஃப்ட்வேர்கள், கற்றுக்கொள்வ தற்கான தளங்கள் ஏராளம் வந்துவிட்டன.
ஒருவர் எந்தத் துறையில் இருந்தாலும் அத்துறை சார்ந்து தொடர்ந்து ‘அப்டேட்’ ஆகிக்கொள்ள வேண்டும். சாஃப்ட்வேர்கள் பயன்பாட்டைப் பொறுத்த வரை அதிகாரபூர்வமற்ற இணையத் தளங்களில் இருந்து பதிவிறக்கம் செய்வதைத் தவிர்க்க வேண்டும்.
அது தேவையில்லாத சிக்கல்களை உண்டாக் கும். தேடிப் பார்த்தால் ‘ஓபன் சோர்ஸ்’ இணையத்தளங்கள் பலவற்றைக் காண முடியும். அவற்றைப் பயன்படுத்தலாம்.
முதலில் முழுநேரமாகக் கலையை மையமாகக் கொண்டு இயங்க முடியுமா என்கிற சந்தேகம் இருந்தது. ஆனால், தயக்கத்தைத் தகர்த்து வந்தால் மட்டுமே சாதிக்க முடியும். இதுதான் என முடிவு செய்துவிட்டு வாய்ப்புகளைத் தேடினேன்.
நானே சிலவற்றை உருவாக்கவும் செய்தேன். இப்படித்தான் ஓவியம் வரையத் தொடங்கி, படைப்புகளை உருவாக்கி விற்பனைசெய்து, தற்போது ஓவிய ஆசிரியராகவும் மாறியிருக்கிறேன். கலைத்துறை சார்ந்து மேலும் புது வாய்ப்புகளைத் தேடியே பயணிக்கப் போகிறேன்” என்கிறார் நம்பிக்கையோடு.
‘நிறங்கள்’ இன்ஸ்டகிராம் பக்கம்: instagram.com/nirrungal/
- karthiga.rajendran@hindutamil.co.in