இந்தப் பூவிலும் ‘சுவாசம்’ உண்டு! | இளம் தொழில்முனைவோர்

இந்தப் பூவிலும் ‘சுவாசம்’ உண்டு! | இளம் தொழில்முனைவோர்
Updated on
2 min read

வண்ணமயமான ஷெனீல் (Chenille) கம்பிகளைப் பயன்படுத்தி அழகான மலர்கள், கைவினைப் பொருள்களை உருவாக்குகிறார் சென்னையைச் சேர்ந்தஷாரிகா. ஒரு பக்கம் தரவுப் பகுப்பாய் வாளராகவும் (Data Analyst) இன்னொரு பக்கம் ஷெனீல் கலைப் படிப்புகளையும் உருவாக்கி வரும் அவரோடு நடந்த உரையாடலில் இருந்து...

ஷெனீல் என்றால்?

மெல்லிய நூலிழை போன்ற கம்பிகள், இன்று உலகம் முழுவதும் கைவினைக் கலைஞர்களின் விருப்பப் படைப்புப் பொருளாக மாறியுள்ளன. ‘பைப் கிளீ னர்ஸ்’ என்கிற இந்த வகைக் கம்பி, பரவலாக ‘ஷெனீல்’ என்கிற பெயரில் அறியப் படுகிறது. அதனால்தான் தன்னுடைய பகுதி நேரத் தொழிலுக்கு ‘ஷெனீல் ஷாப்’ எனப் பெயரிட்டுள்ளதாகச் சொல்கிறார் ஷாரிகா.

“தரவு அறிவியல் படிப்பைப் படித்து விட்டு, தரவுப் பகுப்பாய்வாளராகப் பணியாற்றி வருகிறேன். இத்துறை சார்ந்து இயங்கி வந்தாலும், சிறு வயது முதலே கலைப் படைப்புகளை உருவாக்குவதில் ஆர்வம் இருந்தது. ‘டெக்‌ஸ்சர் பெயின்டிங்’கிலும் எனக்கு ஆர்வம் அதிகம்.

இன்ஸ்டகிராமில் ஷெனீல் படைப்புகளைப் பார்த்தபோது, நானே சுயமாகக் கற்றுக்கொண்டு மலர்களை உருவாக்க முயற்சி செய்தேன். முதலில் குடும்பத்தினர், நண்பர் களுக்கு நானே கைப்பட உருவாக்கிய ஷெனீல் மலர்களை கிஃப்டாக வழங்கினேன். அது பிடித்துப் போகவே, தொடர்ந்து செய்யுமாறு என்னை ஊக்கப்படுத்தினர்.

அலுவலகத்தில் நடைபெற்ற ‘பாப்-அப்’ (pop-up) நிகழ்ச்சி ஒன்றில் நான் உருவாக்கிய ஷெனீல் படைப்புகளை விற்பனைக்கு வைத்ததே தொழில்முனைவோராக என்னுடைய முதல் அனுபவம். அதைத் தொடர்ந்து ஷெனீல் படைப்புகளை விற்பனைசெய்து வருகிறேன்” என்றார்.

பாப்-அப் கலாச்சாரம்

சென்னையில் இந்த பாப்-அப் கலாச் சாரம் பிரபலமாகி வருகிறது. அதாவது ஒரு பொது இடத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட இளம் தொழில்முனைவோர் ஒன்றாக இணைந்து ஸ்டால்களை அமைத்து, தங்களுடைய பொருள் களைக் காட்சிப்படுத்தி விற்பனை செய்வதே பாப்-அப் நிகழ்ச்சிகளின் அடிப்படை.

இணையம், இன்ஸ்டகிராம் வழியாகச் சிறுதொழில் செய்துவரும் தொழில்முனைவோருக்கு, வாடிக்கையாளர்களை நேரடியாகச் சந்தித்து, தங்களது தயாரிப்புகளை அறிமுகப்படுத்தி, விற்பனையை அதிகரிப்பதற் கான முக்கியக் களமாக பாப்-அப் நிகழ்ச்சிகள் மாறியுள்ளன. “பாப்-அப் நிகழ்ச்சிகளால் சிறுதொழில் வளர்ச்சி அடையும் என்பது உண்மைதான்.

இந்நிகழ்ச்சிகளின் மூலம் கிடைக்கும் அனுபவமும் எக்ஸ்போஷரும் தொழில்முனைவோருக்குப் பயனுள்ளதாக இருக்கும். ஆனால், பாப்-அப்நிகழ்ச்சிகளில் சில குறைகளும் இருக்கவே செய்கின்றன. ஸ்டால் அமைப்பதற்கு அதிகக்கட்டணம் வசூலிப்பது, சரியான இடம் ஒதுக்காதது போன்ற பிரச்சினைகளும் அவ்வப்போது ஏற்படுகின்றன.

அது மட்டுமல்லாமல் சிறியது முதல் பெரியதுவரை அனைத்து நிறுவனங்களுக் கும் ஸ்டால் அமைக்க ஒரே கட்டணம் வசூலிக்கப்படும் நிலை மாற வேண்டும். தொழிலுக்கேற்ப கட்டணம் வசூலித்தால் அது அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும். அப்போது சிறு தொழில்முனை வோரும் லாபம் ஈட்ட முடியும்” என்றார்.

தனித்துவமான படைப்புகள்

ஷெனீல் ஷாப்புக்கான பொருள்களை வாங்குவது, படைப்புகளை உருவாக் குவது, விற்பனை செய்வது என அனைத்து வேலைகளுக்கும் ஷாரிகா மட்டுமே பொறுப்பு. சரியான வண்ணங் களைத் தேர்வு செய்வது, நுணுக்கமான வேலைப் பாடு போன்ற காரணங்களால் தன்னுடைய படைப்புகள் தனித்துவமாகத் தெரிவதாகச் சொல்கிறார் அவர்.

“ஷெனீல் கம்பிகளைப் பொறுத்த வரை குறைவான விலையிலும் மூலப் பொருள்களை வாங்க முடியும். ஆனால், தத்ரூபமான வகையில் மலர்களை உருவாக்க வேண்டுமெனில் தரமான மூலப் பொருள்களைப் பயன்படுத்த வேண்டும்.

அவையே பல நாள் நீடித்து நிலைக்கும் தன்மை உடையவை. எனவே, ஒரு படைப்பை உருவாக்கும் முன்பு ஒரு பேப்பரில் அதை டிசைன் செய்து என்னென்ன வண்ணங்களைப் பயன்படுத்தப் போகி றேன் என்பதைத் திட்டமிட்டுக் கொண்ட பின்பே ஷெனீலில் உருவாக்குவேன்.

சில மணி நேரம் முதல் ஓரிரு நாள்கள்வரை படைப்புக்குஏற்ப நேரம் எடுத்துக்கொள் வேன். 35 ரூபாய் முதல் சில ஆயிரம் ரூபாய் வரை பொருள் களுக்கான விலையை நிர்ணயித்துள்ளேன். பார்ப்பதற்கு குரோஷேவைப் போல இருப்பதால் பலரும் குழம்பிவிடுகிறார்கள்.

ஆனால், இது குரோஷே அல்ல, ஷெனீல் படைப்புகள். மலர்கள், விளக்குகள், வீடுகள் போன்று ஷெனீலைப் பயன் படுத்தி கிரியேட்டிவாகவும் சில படைப்பு களை உருவாக்கும் திட்டம் உள்ளது” என்றார்.

‘ஷெனீல் ஷாப்’

இன்ஸ்டகிராம் பக்கம்: instagram.com/chenilleshop_flowersandmore

- karthiga.rajendran@hindutamil.co.in

இந்தப் பூவிலும் ‘சுவாசம்’ உண்டு! | இளம் தொழில்முனைவோர்
கலைக்கு இழுத்துவந்த மனசு! | இளம் தொழில்முனைவோர்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in