நாட்டின் எதிர்காலத்தை எண்களால் வாசிக்கும் துறை! - வேலைன்னு வந்துட்டா... | அத்தியாயம் 40

நாட்டின் எதிர்காலத்தை எண்களால் வாசிக்கும் துறை! - வேலைன்னு வந்துட்டா... | அத்தியாயம் 40
Updated on
2 min read

உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட நாடு இந்தியா. இதில் பாதிக்கும் மேற்பட்டோர் 30 வயதுக்கு உள்பட்ட இளைய தலைமுறையினர்.

இந்த மாபெரும் மனிதவளத்தை நாட்டின் வலிமையாக மாற்றுவதா, சுமையாக மாற்றுவதா என்பதைத் தீர்மானிப்பதில் துல்லியமான மக்கள்தொகைத் தரவுகளும் அவற்றை ஆய்வுசெய்யும் நிபுணர்களும் முக்கியப் பங்கு வகிக்கின்றனர். அந்த நிபுணர்களை உருவாக்கும் துறைதான் மக்கள்தொகை அறிவியல் (Population Sciences).

கிரேக்க மொழியில் 'Demos' என்றால் மக்கள்; ‘Graphein' என்றால் எழுதுதல் அல்லது பதிவுசெய்தல். எனவே ‘Demography’ (மக்கள் தொகையியல்) என்பது மக்களைப் பற்றிய அறிவியல்பூர்வமான ஆய் வாகும்.

ஒரு நாட்டின் அல்லது பகுதி யின் மக்கள்தொகையில் நிகழும் பிறப்பு, இறப்பு, திருமணம், கருவுறும் திறன், ஆயுள்காலம், இடப்பெயர்வு, வயது–பாலின விகிதங்கள் உள்ளிட்ட அம்சங்களைப் புள்ளியியல் முறைகளால் அளந்து, அவற்றுக் கான காரணங்களை ஆராய்ந்து, எதிர்காலப் போக்குகளைக் கணிக் கும் துறை இது.

மக்கள்தொகை அறிவியல் ஒரு பன்முகத் துறை. புள்ளியியல், கணிதம், சமூகவியல், பொருளாதாரம், புவியியல், பொதுச் சுகா தாரம், கணினி வழித் தரவுப் பகுப்பாய்வு ஆகிய பல துறைகளின் சங்கமமாக இது விளங்குகிறது. மக்கள் தொகைக் கணக்கெடுப்பு, மாதிரி ஆய்வுகள், வாழ்க்கை முறை அட்டவணைகள், கணித மாதிரி கள் ஆகியவை இத் துறையின் முக்கியக் கருவிகளாகும்.

ஏன் முக்கியம்?

மக்கள்தொகை பங்குவீதம் (Demo graphic Dividend): இந்தியாவின் சரா சரி வயது சுமார் 28. இந்த இளைஞர் சக்திக்கு ஏற்பக் கல்வி, திறன் பயிற்சி, வேலைவாய்ப்புத் திட்டங்களை வடிவமைக்க மக்கள்தொகைத் தரவுகள் இன்றியமையாதவை.

முதுமைச் சமூகத்திற்கான திட்டமிடல்: வரும் ஆண்டு களில் முதியோர் நலம், ஓய்வூதியம், சுகாதாரக் கட்டமைப்பு ஆகியவற்றுக் கான திட்டமிடலில் இத்துறை நிபுணர்களின் பங்கு மிகவும் அவசியம்.

சுகாதாரக் கொள்கை: தேசியக் குடும்ப நலக் கணக்கெடுப்புத் (NFHS) தரவுகளின் அடிப்படையில் தான் தடுப்பூசி, தாய் – சேய் நலம், ஊட்டச்சத்து உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் வடிவமைக்கப்படு கின்றன.

அரசு நிர்வாகம்: தொகுதி மறு வரையறை, நிதி ஒதுக்கீடு, நகர்ப்புறத் திட்டமிடல், பேரிடர் மேலாண்மை என அனைத்துக்கும் மக்கள்தொகைத் தரவுகளே அடிப் படையாக உள்ளன.

தனியார் துறை: காப்பீடு, சந்தை ஆய்வு, தரவுப் பகுப்பாய்வு உள்ளிட்ட நிறுவனங்கள் மக்கள்தொகை அறிவியல் நிபுணர்களை அதிக ஊதியத்தில் பணியமர்த்துகின்றன. சர்வதேச அளவில், ஐக்கிய நாடுகள் அவை வகுத்துள்ள நிலைத்த வளர்ச்சி இலக்குகளைக் (SDGs) கண்காணிக்க உலக நாடுகள் அனைத்துக்கும் மக்கள்தொகை அறிவியலாளர்கள் தேவை.

அரசின் உதவித்தொகை?

மும்பையில் செயல்படும் சர்வதேச மக்கள்தொகை அறிவியல் நிறுவனம் (International Institute for Population Sciences – IIPS), இந்தியாவில் மக்கள்தொகை அறிவியல் கல்வி - ஆய்வில் முன்னணி நிறுவனமாக விளங்குகிறது.

இங்கு இரண்டு ஆண்டுகள் மக்கள்தொகை ஆய்வில் எம்.ஏ./எம்.எஸ்சி., உயிர்ப் புள்ளியியல், மக்கள் தொகையியலில் எம்.எஸ்சி., கணக்கெடுப்பு ஆய்வு - தரவுப் பகுப்பாய்வில் எம்.எஸ்சி.

ஆகிய முதுகலைப் படிப்புகளும் மக்கள்தொகை ஆய்வில் முழுநேர, பகுதிநேர முனைவர் பட்டப் படிப்பும், முனைவர் பட்ட மேலாய்வுப் படிப்பும் வழங்கப்படுகின்றன. முதுகலைப் படிப்புகளுக்கு சியூஇடி (முதுகலை) மதிப்பெண் அடிப்படையில் சேர்க்கை நடைபெறுகிறது.

இந்தப் படிப்புகளில் சேரும் இந்திய மாணவர்களுக்கு மத்திய அரசின் சார்பில் மாதம் ரூ.5,000 உதவித்தொகை வழங்கப்படுகிறது. மேலும், தேர்வாகும் அனைத்து மாணவர்களுக்கும் விடுதி வசதி உறுதிசெய்யப்படுகிறது.

குறைந்த செலவில் தரமான கல்வி, உதவித்தொகை, விடுதி வசதி ஆகியவற்றால் முதல் தலைமுறைப் பட்டதாரிகள், பொருளாதாரத்தில் பின்தங்கியக் குடும்பங்களைச் சேர்ந்த மாண வர்களுக்கு இந்தத் துறை சிறந்த வாய்ப்பாக அமைகிறது.

மக்கள்தொகை அறிவியலை இந்தியாவிலும் உலகின் முன்னணி பல்கலைக் கழகங்களிலும் எங்கு படிக்கலாம், இந்தத் துறையில் என்னென்ன வேலைவாய்ப்புகள் உள்ளன என்பதை அடுத்த பகுதியில் பார்ப்போம்.

- கட்டுரையாளர், உயர் கல்வி ஆலோசகர்; ticf@indiacollegefinder.org

நாட்டின் எதிர்காலத்தை எண்களால் வாசிக்கும் துறை! - வேலைன்னு வந்துட்டா... | அத்தியாயம் 40
சமூக மாற்றத்தை ஏற்படுத்தும் படிப்பு - வேலைன்னு வந்துட்டா... | அத்தியாயம் 39

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in