

சமூகத் தொழில்முனைவு படிப்பைப் படித்தவர்கள் பல்வேறு துறைகளில் தாக்கத்தை ஏற்படுத்திவருகின்றனர். கல்வி, சுகாதாரம், பெண்கள் முன்னேற் றம், கிராமப்புற வாழ்வாதாரம், நிதி, கழிவு மேலாண்மை உள்ளிட்ட துறைகளில் நிலவும் சமூகப் பிரச்சினைகளுக்குப் புதுமையான, நிலைத்த தீர்வுகளைக் கண்டறிய இப்படிப்பைப் படித்தவர்கள் முயற்சி செய்துவருகின்றனர்.
புதுமையான, நிலைத்த தீர்வுகள்
கல்வித் துறையில் ‘அக்ஷய பாத்ரா’ அமைப்பு அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஊட்டச்சத்துமிக்க மதிய உணவை வழங்குவதன் மூலம் மாணவர்களின் பள்ளி வருகை, அவர்களின் கற்றல் தொடர்ச்சியை ஊக்கு விக்கிறது.
‘Teach For India’ அமைப்பு கிராமப்புறங்கள், குறைந்த வருமானம் உள்ள குடும்பங்கள் வாழும் பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு இளம் ஆசிரியர், தன்னார்வலர்களை அனுப்பி, அப்பகுதியைச் சேர்ந்த மாணவர்களுக்குக் கல்வி கற்பிக்கிறது.
‘Barefoot College' அமைப்பு முறையான கல்வி பெறாத கிராமப்புறப் பெண்களுக்குச் சூரிய ஆற்றல் தொழில்நுட்பப் பயிற்சியை அளித்து, அவர்களைச் சமூக மாற்றத்தின் முன்னோடிகளாக உருவாக்கியுள்ளது.
முறைசாரா துறையில் பணிபுரியும் பெண்களுக்குத் தொழில்முனைவு, வங்கிச் சேவைகள், வாழ்வாதார ஆதரவை வழங்கி, பொருளாதார அதிகாரமளிப்பதை ‘SEWA’ அமைப்பு வலுப்படுத்துகிறது.
நகர்ப்புறங்களில் பயன்படுத்தப்படாத பொருள்களைக் கழிவாகக் கருதா மல், சமூக வளர்ச்சிக்கான வளங்களாக மாற்றுகிறது ‘Goonj’ அமைப்பு.
இந்தியாவில் இத்தகைய பல சமூகத் தொழில் முனைவு அமைப்புகள் சமூகப் பிரச்சினைகளுக்குப் புதுமையான, நிலைத்த தீர்வுகளை உருவாக்கி வெற்றி கரமாகச் செயல்பட்டு வருகின்றன.
எங்கு படிக்கலாம்?
உலகின் முன்னணிப் பல்கலைக்கழகங்கள் சமூகத் தொழில்முனைவைத் தனிப் படிப்பாக வழங்குகின்றன. ஆக்ஸ்ஃபோர்டு பிசினஸ் பள்ளி, ஸ்டான்போர்டு கிராஜுவேட் ஸ்கூல் ஆஃப் பிசினஸ், ஹார்வர்டு பிசினஸ் பள்ளி, டியூக் பல்கலைக்கழகத்தின் ‘CASE’ மையம் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களில் Social Innovation, Impact Measurement, Design Thinking உள்ளிட்ட பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன.
இந்தியாவில் மும்பையில் உள்ள டாடா சமூக அறிவியல் நிறுவனம் (TISS), சமூகத் தொழில்முனைவில் முதுகலை (Master of Arts in Social Entrepreneurship – MASE) இரண்டாண்டுப் படிப்பை வழங்குகிறது. வகுப்பறைக் கற்றலுடன் களப்பணி, சமூகம் சார்ந்த நிறுவனங் களில் பயிற்சி, தொழில்முனைவை மேம்படுத்துதல் (Incubation) ஆகியவற்றுக்கு இதில் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.
சென்னை சமூகப் பணிக் கல்லூரியில் (MSSW) இரண்டாண்டு எம்.ஏ. சமூகத் தொழில்முனைவு படிப்பு வழங்கப்படுகிறது. குஜராத்தின் ஆனந்தில் உள்ள கிராமப்புற மேலாண்மை நிறுவனம் (IRMA), ஐஐஎம் கொல்கத்தா இன்னோவேஷன் பார்க் போன்ற நிறுவனங்கள் சமூகத் தொழில்முனைவோருக்கான பயிற்சி, வழிகாட்டுதல், நிறுவனத்தின் தொடக்க நிலையில் ஆதரவு ஆகியவற்றை வழங்கிவருகின்றன.
வேலைவாய்ப்புகள் என்ன?
அரசுத் திட்டங்கள், தன்னார்வ அமைப்புகள், சமூக நிறுவனங்கள், CSR பிரிவுகள், சர்வதேச வளர்ச்சி அமைப்புகள் ஆகியவற்றில் பணியாற்றவோ அல்லது சொந்த சமூகத் தொழில்முனைவு நிறுவனத்தைத் தொடங்கவோ வாய்ப்புகள் உள்ளன. திட்ட மேலாளர், சமூக ஆய்வாளர், CSR ஆலோசகர் போன்ற பணிகளிலும் சேரலாம்.
இந்தியாவில் CSR நிதி, இம்பாக்ட் இன்வெஸ்ட் மென்ட், அட்டல் இன்னோவேஷன் மிஷன் போன்ற அரசுத் திட்டங்கள் சமூகத் தொழில்முனைவுக்கு ஊக்க மளித்து வருகின்றன. காலநிலை மாற்றம், செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) விவசாயம், பொதுச் சுகாதாரம், திறன் மேம்பாடு போன்ற துறைகளில் சமூகத் தொழில்முனைவோருக்கான தேவை தொடர்ந்து அதிகரித்துவருகிறது.
கல்வி, வேலைவாய்ப்புகளை வழங்குகிற வளர்ந்து வரும் துறையாகச் சமூகத் தொழில்முனைவுத் துறை உள்ளது. சமூகப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வேண்டும் என்கிற ஆர்வம் கொண்ட மாணவர்கள் பயன்படுத்தி கொள்ளலாம்!
- கட்டுரையாளர், உயர் கல்வி ஆலோசகர்; ticf@indiacollegefinder.org