உலக அரங்குக்கு அழைத்துச் செல்லும் புதிய துறை - வேலைன்னு வந்துட்டா... | அத்தியாயம் 36

உலக அரங்குக்கு அழைத்துச் செல்லும் புதிய துறை - வேலைன்னு வந்துட்டா... | அத்தியாயம் 36
Updated on
2 min read

ஜியோடசி துறையின் வரலாற்றுப் பின்னணி, அதன் பயன்பாடுகள், நாட்டின் பாதுகாப்பில் அதன் பங்கு ஆகியவற்றைப் பற்றிக் கடந்த வாரம் பார்த்தோம். இந்தத் துறையில் படிக்க விரும்பும் மாணவர்களுக்காக உலகின் சிறந்த பல்கலைக்கழகங்கள், இந்தியக் கல்வி நிறுவனங்கள், வேலைவாய்ப்புகளைப் பற்றி இந்த வாரம் பார்க்கலாம்.

முன்னணிப் பல்கலைக்கழகங்கள் உலக அளவில் ஜியோடசியும் இத்துறையோடு தொடர்புடைய ஜியோமேட்டிக்ஸ், புவிசார் தகவல் அமைப்பு, புவிக் கண்காணிப்பு போன்ற துறைகளில் உயர்கல்வி வழங்கும் பல முன்னணிப் பல்கலைக் கழகங்கள் உள்ளன.

நெதர்லாந்தின் டெல்ஃப்ட் தொழில்நுட்பப் பல்கலைக் கழகம், சுவிட்சர்லாந்தின் ஈ.டி.எச். சூரிக், ஜெர்மனியின் மியூனிக் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம், லெய்ப்னிஸ் ஹானோவர் பல்கலைக் கழகம் ஆகியவை ஜியோடசி கல்வியில் முன்னணியில் உள்ளன.

அமெரிக்காவின் ஒஹையோ மாகாணப் பல்கலைக்கழகம், ஆஸ்திரேலியாவின் கர்டின் பல்கலைக்கழகம், நியூ சவுத்வேல்ஸ் பல்கலைக்கழகம், இங்கிலாந்தின் லண்டன் பல்கலைக்கழகக் கல்லூரி ஆகியவையும் இந்தத் துறையில் சிறப்பான ஆராய்ச்சிகளுக்காக அறியப்படுகின்றன.

ஐரோப்பிய நாடுகளில் கல்வி கற்கும் மாணவர் களுக்கு எராஸ்மஸ்+ போன்ற உதவித்தொகைத் திட்டங்களும் திறமை அடிப்படையிலான கல்வி நிதியுதவிகளும் கிடைக்கின்றன.

குறிப்பாக டெல்ஃப்ட், ஈ.டி.எச். சூரிக் போன்ற பல்கலைக்கழகங்களில் திறமையான மாணவர்களுக்கு முழு அல்லது பகுதி அளவில் நிதியுதவிகிடைக்கும். சில பல்கலைக்கழகங் களில் இந்திய மாணவர்கள் ‘GRE’ மதிப்பெண் இல்லாமலேயே விண்ணப்பிக்க முடியும்.

இந்தியாவில் எங்கே படிக்கலாம்?

இந்தியாவில் ஜியோடசி இன்னும் பரவலாகக் கற்பிக்கப்படும் துறையாக இல்லை. ஆனால், இதுவே அதன் தனித்துவமும்கூட. இந்தத் துறையில் பயிற்சி பெற்ற

நிபுணர்கள் குறைவாக இருப்ப தால், அவர்களுக்கான தேவை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

ரூர்கேலா, மும்பை, கான்பூர், காரக்பூர், சென்னை ஆகிய நகரங்களில் உள்ள ‘ஐஐடி’ களில் ஜியோடசி தொடர்பான உயர்கல்வி, ஆராய்ச்சிப் படிப்புகள் வழங்கப்படுகின்றன.

குறிப்பாக ஐஐடி ரூர்கேலாவில் புவிசார் அளவையியல் பொறியியல் படிப்பு தனித்துறையாகக் கற்பிக்கப்படுகிறது. இஸ்ரோவின் கீழ் செயல்படுகிற டேராடூனில் உள்ள இந்திய ரிமோட் சென்சிங் நிறுவனமும் (IIRS) முன்னணிக் கல்விமையங்களில் ஒன்றாக விளங்குகிறது.

ஜியோடசியில் பயிற்சி பெற்ற வர்களுக்கு அரசு, பொதுத்துறை நிறுவனங்களில் வேலைவாய்ப்புகள் உள்ளன. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகள் மூலம் நில அளவை, வரைபடவியல் சார்ந்த பணிகளில் சேர முடியும்.

இந்திய நில அளவைத் துறை, இஸ்ரோ, நகர வளர்ச்சித் திட்ட அமைப்புகள், புவித்தரவு மேலாண்மை நிறுவனங்களிலும் இந்தத் துறைக்கான நிபுணர்கள் தேவைப்படுகின்றனர்.

விண்வெளி ஆய்வு, செயற்கைக்கோள் வழிகாட்டல், இணைய வரைபடங்கள், சுரங்கத் தொழில், பேரிடர் மேலாண்மை, காலநிலை ஆய்வு, நவீன வேளாண் தொழில் நுட்பம் உள்ளிட்ட பல துறைகளில் இத்துறை சார்ந்த நிபுணர்களின் பங்களிப்பு முக்கியமானதாகக் கருதப்படுகிறது.

பூமியைப் பற்றிய துல்லியமான தரவுகளின் தேவை அதிகரித்துவரும் நிலையில், ஜியோடசி நிபுணர்களுக்கான வேலை வாய்ப்புகளும் அதிகரித்து வருகின்றன.

எதிர்காலம்

அடுத்த பத்து ஆண்டுகளில் ஜியோடசியின் பயன்பாடுகளும் ஆய்வுத் திசைகளும் குறிப்பிடத் தக்க அளவில் விரிவடையக்கூடும் என்று கணிக்கப்படுகிறது. நிலவுக்கான துல்லிய வரை படங்களை உருவாக்கும் லூனார் ஜியோடசி, கடலடித் தட்டு நகர்வுகளைக் கண்காணிக்கும் ஓஷன் பாட்டம் ஜியோடசி, செயற்கை நுண்ணறிவுடன் இணைந்த இன்டலிஜென்ட் ஜியோடசி, குவான்டம் அடிப்படை யிலான குவான்டம் ஜியோடசி போன்ற புதிய துறைகள் வேகமாக வளர்ந்து வரு கின்றன.

நகரங்களை முழுமையாக முப்பரிமாண வடிவ மாதிரியாக வடிவமைக்கும் ‘அர்பன் டிஜிட்டல் ட்வின்ஸ்’ தொழில்நுட்பம், உலகம் முழுவதும் விரிவடைந்து வருவதால் ஜியோடசி, புவிசார் தகவல் நிபுணர் களுக்கான தேவை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜியோடசியில் ஆர்வமுள்ள மாணவர்கள் கணிதம், இயற்பியல், கணினி அறிவியல், புவியியல் ஆகிய பாடங்களில் வலுவான அடிப்படை அறிவை வளர்த்துக்கொள்ள வேண்டும். ஜிஐஎஸ், ரிமோட் சென்சிங், பைத்தன் புரோகிராமிங், டேட்டா அனாலிசிஸ் போன்ற திறன் களையும் கற்றுக்கொள்வது கூடுதல் பலனளிக்கும்.

- கட்டுரையாளர், உயர் கல்வி ஆலோசகர்; ticf@indiacollegefinder.org

உலக அரங்குக்கு அழைத்துச் செல்லும் புதிய துறை - வேலைன்னு வந்துட்டா... | அத்தியாயம் 36
ஜியோடசி: பூமியை அளக்கும் அறிவியல் துறை - வேலைன்னு வந்துட்டா... | அத்தியாயம் 35

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in