

நாள்தோறும் கூகுள் மேப்பில் வழி தேடுகிறோம். ஜி.பி.எஸ் மூலம் இருப்பிடத்தைத் துல்லியமாக அறிகிறோம். சுனாமி எச்சரிக்கைகள், செயற்கைக்கோள் வழிகாட்டுதல், ட்ரோன் கண்காணிப்பு போன்றவை இன்று சாதாரணமாகத் தோன்றினாலும், இவை அனைத்துக்கும் பின்னால் செயல்படும் முக்கிய அறிவியல் துறை ஒன்று உள்ளது. அதுதான் ‘ஜியோடசி’ (Geodesy).
ஜியோடசி என்றால் என்ன?
‘Geodesy’ என்பது கிரேக்க மொழியில் ‘பூமியைப் பிரித்து அளவிடுதல்’ என்கிற பொருளிலிருந்து உருவான சொல். எளிமையாகச் சொல்ல வேண்டுமென்றால், ‘பூமியை அளக்கும் அறிவியல்’ என்பதே ஜியோடசி.
பூமியின் வடிவம், அளவு, ஈர்ப்பு விசை, இடங்களின் துல்லியமான நிலை ஆகியவற்றை அளவிடும் இந்த அறிவியல், நாட்டுப் பாதுகாப்பிலிருந்து விண்வெளி ஆராய்ச்சிவரை பல துறை களின் அடிப்படையாகத் தற்போது மாறியுள்ளது. 21ஆம் நூற்றாண்டின் மிக முக்கியமான, ஆனால் அதிகம் அறியப்படாத துறைகளில் இதுவும் ஒன்று.
பூமியின் உண்மையான வடிவம் என்ன? அதன் ஈர்ப்பு விசை எவ்வாறு மாறுகிறது? பூமியில் உள்ள புள்ளிகள் காலப்போக்கில் எவ்வாறு நகர்கின்றன என்பது போன்ற அடிப்படைக் கேள்விகளுக்கு இந்தத் துறை விடை தேடுகிறது.
செயற்கைக்கோள்கள், லேசர் தொழில்நுட்பம், ஜி.பி.எஸ் போன்ற வற்றின் மூலம் பூமியை அளவிடும் ‘Space Geodesy’, பூமியின் ஈர்ப்பு விசை அமைப்புகளை ஆய்வு செய்யும் ‘Physical Geodesy’, துல்லியமான நிலவரைபட, இருப்பிடக் கட்டமைப்புகளை உரு வாக்கும் ‘Geometric Geodesy’ என இத்துறையின் கீழ் பல கிளைகள் உள்ளன.
அன்றாட வாழ்க்கையில் ஜியோடசி
ஜியோடசி என்பது வெறும் ஆராய்ச்சித் துறை அல்ல. ஜிபிஎஸ், குளோனாஸ், கலீலியோ, நாவிக் போன்ற உலகளாவிய வழிகாட்டி அமைப்புகள் அனைத்தும் துல்லியமான ஜியோடசி தரவுகளின் அடிப்படையில் இயங்குகின்றன.
ஓரிரு சென்டிமீட்டர் அளவிலான பிழை கூட விமானம், கப்பல், ராணுவ நடவடிக்கைகளில் பெரிய ஆபத்தை உருவாக்கக்கூடும். 2004 சுனாமி போன்ற பேரிடர்களில் கடல்மட்ட மாற்றங்களைக் கண்காணிக்கும் ஜியோடசி கருவிகள் முக்கியத் தகவல் களை வழங்கின. நிலநடுக்கம், நிலச்சரிவு, எரிமலை வெடிப்பு போன்றவற்றை முன்கூட்டியே கணிக்கவும் ஜியோடசி பயன்படுகிறது.
மெட்ரோ ரயில், அணைகள், விமான நிலையங்கள், கடல் பாலங்கள் போன்ற பெரும் கட்டமைப்புத் திட்டங்களில் நில அமைப்பு தரவுகளைத் துல்லியமாகக் கணிப்பது அவசியம். அதனால் நிலத்தின் துல்லியமான அளவீடுகளை வழங்குவதில் ஜியோடசி முக்கியப் பங்கு வகிக்கிறது.
விண்வெளி ஆராய்ச்சிப் பாதுகாப்புத் துறைகளிலும் ஜியோடசியின் தேவை அதிகமாக உள்ளது. இஸ்ரோ, நாசா போன்ற நிறுவனங்களில் செயற்கைக் கோள் செலுத்துதல், விண்கல வழி செலுத்தல், பூமி கண்காணிப்பு போன்ற பணிகளில் ஜியோடசி நிபுணர்கள் செயல் படுகின்றனர்.
அதேபோல், நவீனப் போர் களில் துல்லியமான புவிசார் தகவல்கள் மிகவும் முக்கியமானதாக மாறியுள்ளன. ஏவுகணை தாக்குதல்கள், ட்ரோன் கண்காணிப்பு, ராணுவ வரைபடங்கள், உளவு செயற்கைக் கோள்கள் போன்ற அமைப்புகள் அனைத்தும் ஜியோடசி தரவுகளின் அடிப்படையிலேயே செயல் படுகின்றன.
எதிர்கால வாய்ப்புகள்
2019இல் இந்தியாவின் ‘மிஷன் சக்தி’ சோதனையிலும் ஜியோடசி குழுக்கள் முக்கியப் பங்கு வகித்ததாகக் கூறப்படுகிறது. இந்தியாவின் பாதுகாப்புக் கட்டமைப்பு, விண்வெளித் திட்டங்களில் ஜியோடசியின் பங்கு தொடர்ந்து அதிகரித்துவருகிறது.
செயற்கை நுண்ணறிவு, தானியங்கி வாகனங்கள், ட்ரோன் தொழில்நுட்பங்கள், ஸ்மார்ட் நகரங்கள், காலநிலை அறிவியல், விண்வெளி ஆராய்ச்சி போன்ற எதிர்காலத் துறைகளில் ஜியோடசியின் தேவை வேகமாக அதிகரித்து வருகிறது.
இன்று உலகம் முழுவதும் தரவுகளை மையமாகக் கொண்டு இயங்குகிறது. பெரும்பாலானோர் அறியாத இந்தத் துறை, எதிர்காலத்துக்குத் தேவையான முக்கியத் தொழில்நுட்பமாக உரு வெடுத்து வருகிறது. இத்துறை சார்ந்த கல்வி, வேலைவாய்ப்புகள் பற்றி விரிவாக அடுத்த அத்தியாயத்தில் பார்க்கலாம்.
- கட்டுரையாளர், உயர் கல்வி ஆலோசகர்; ticf@indiacollegefinder.org