2025-இல் உயர் கல்வியும் வேலைவாய்ப்பும்

2025-இல் உயர் கல்வியும் வேலைவாய்ப்பும்
Updated on
2 min read

2025-26ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் கல்விக்காக ரூ.1,28,650 கோடி ஒதுக்கப்பட்டது. கடந்த ஆண்டைவிட இது 6.22% அதிகம். இதில் முக்கியமாக, அனைத்து அரசு நடுநிலைப் பள்ளிகளிலும் இணைய வசதியை உருவாக்குதல், 500 கோடி ரூபாய் மதிப்பில் கல்விக்கான செயற்கை நுண்ணறிவுச் சிறப்பு மையத்தை உருவாக்குதல் போன்றவை அறிவிக்கப்பட்டன.

பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) ஜனவரியில் வெளியிட்ட வரைவு விதிமுறைகளின்படி பல்கலைக்கழகத் துணைவேந்தர் நியமனத் தேடுதல் குழுவை வேந்தரான ஆளுநரே முடிவு செய்வார் என்கிற அறிவிப்புக்குத் தமிழ்நாடு, கேரளம், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்கள் எதிர்ப்புத் தெரிவித்தன.

பல்கலைக்கழக மானியக் குழுவின் புதிய வரைவு நெறிமுறைகளை மத்திய அரசு திரும்பப்பெற வலியுறுத்தித் தமிழ்நாடு சட்டப்பேரவையில் தனித் தீர்மானம் நிறை வேற்றப்பட்டது.

ஐ.நா. கல்வி அறிவியல் பண்பாட்டு அமைப்பு (யுனெஸ்கோ) தொடங்கப்பட்டு 2025இல் 80 ஆண்டுகளை நிறைவுசெய்கிறது. உலக அளவில் கல்வி ஒரு அடிப்படை மனித உரிமை என்பதைத் தொடர்ந்து வலியுறுத்தும் இந்த அமைப்பு, வளர்ந்து வரும் செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ) தொழில்நுட்பக் கல்வியை ஆசிரியர்களுக்கு முதலில் பயிற்றுவிக்க வேண்டும் எனச் சுட்டிக்காட்டியுள்ளது.

விருதுநகர் மாவட்டம் படந்தால் ஊரைச் சேர்ந்தவர் யோகேஸ்வரி. தேநீர்க் கடையில் வேலை பார்க்கும் அப்பா, பட்டாசுத் தொழிலாளியான அம்மா என ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த இவர், வளர்ச்சிக் குறைபாட்டுடன் பிறந்திருந்தாலும் கல்வியில் சாதித்துக் காட்டியுள்ளார். தமிழ்நாடு அரசின் ‘நான் முதல்வன்’ திட்டத்தில் பயிற்சி பெற்று ஐஐடி மும்பையில் ஏரோஸ்பேஸ் பொறியியல் படிக்கத் தேர்வானார்.

2025 செப்டம்பரில் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் ‘கல்வியில் சிறந்த தமிழ்நாடு’ விழா நடைபெற்றது. தமிழ்நாடு அரசின் கல்விக்கான சிறப்புத் திட்டங்கள் பற்றியும் கொள்கைகள் பற்றியும் விரிவாக எடுத்துரைக்கப்பட்ட இந்த விழாவில் தெலங்கானா முதலமைச்சர் அ. ரேவந்த் ரெட்டி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பதவியேற்புக்குப் பிறகு விசா விதிமுறைகளில் மாற்றங்கள் கொண்டு வரப்பட்டன. இதனால், அமெரிக்காவில் கல்வி கற்கச் செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. 2025இல் இந்தியாவில் இருந்து அமெரிக்காவில் உயர் கல்வி பயிலச் செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை, கடந்த ஆண்டைவிட 45% குறைந்துள்ளதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன.

நாடு முழுவதும் உள்ள உயர்கல்வி நிறுவனங்களில் 'மற்றொரு இந்திய மொழியைக் கற்றுக்கொள்வோம்' எனும் திட்டத்தைப் பல்கலைக்கழக மானியக் குழு செயல்படுத்தத் திட்டமிட்டுள்ளது. அதன்படி, ஒவ்வொரு கல்லூரியும் குறைந்தது மூன்று இந்திய மொழிகளைப் பாடத்திட்டத்தில் அறிமுகப்படுத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யுஜிசி, ஏஐசிடிஇ, என்சிடிஇ ஆகிய வற்றைக் கலைத்துவிட்டு, உயர்கல்விக்கு ஒரே ஆணையம் அமைக்கும் மசோதா குளிர்காலக் கூட்டத்தொடரின்போது நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. ‘விக்சித் பாரத் சிக்ஷா அதிக்ஷன்’ எனும் இந்த மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.

2025ஆம் ஆண்டில் இந்தியாவில் வேலையின்மை விகிதம், அதிகபட்சமாக ஜூன் மாதத்தில் 5.6% ஆகவும் ஜூலையில் 5.2% ஆகவும் அக்டோபர் - நவம்பர் மாதத்தில் 5.1% ஆகவும் பதிவாகியுள்ளதாகக் குறிப்பிட்ட காலத்துக்கான தொழிலாளர் கணக்கெடுப்பு (PLFS) அமைப்பு தகவல் வெளியிட்டுள்ளது.

2025-இல் உயர் கல்வியும் வேலைவாய்ப்பும்
சர்வதேசம்: கல்வி உதவித் தொகை

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in