பெர்ஃபியூம் துறையில் உலக வேலை - வேலைன்னு வந்துட்டா... | அத்தியாயம் 32

பெர்ஃபியூம் துறையில் உலக வேலை - வேலைன்னு வந்துட்டா... | அத்தியாயம் 32
Updated on
2 min read

நாள்தோறும் பயன்படுத்தும் சோப்பு, ஷாம்பூ, பிஸ்கட், ஜூஸ் போன்ற சாதாரணப் பொருள் களின் பின்னால் மிகப்பெரிய தொழில்துறை ஒன்று உலகம் முழுக்கச் செயல்பட்டு வருகிறது.

இப்பொருள்களின் வாசனையும் சுவையும் உருவாகக் காரண மான ‘ஃபிளேவர் அண்டு ஃபிராகிரன்ஸ்’ துறைதான் அது. இன்று உலக அளவில் இந்தத் துறை பல லட்சம் கோடி ரூபாய் மதிப்பை எட்டியிருக்கிறது.

இந்தியாவில் வளர்ச்சி

இந்திய பெர்ஃபியூம் சந்தை வேக மாக வளர்ந்துவருகிறது. குறிப்பாக இயற்கை வாசனைகள், மூலிகை சார்ந்த பொருள்களுக்கு உலகளவில் மவுசு கூடியுள்ளது. சுவிட்சர்லாந்தின் ‘Givaudan’, 'dsm-firmenich’ அமெரிக்காவின் ’IFF’, ஜெர்மனியின் ‘Symrise’ ஆகிய நிறுவனங்கள் இந்தத் துறையின் முன்னணி நிறுவனங்களாக பார்க்கப்படுகின்றன.

வாசனைப் பொருட்கள் உற்பத்தியின் உலகச் சந்தையில் பாதிக்கும் மேற்பட்ட அளவை இந்த நான்கு நிறுவனங்களே கட்டுப்படுத்து கின்றன. 145க்கும் மேற்பட்ட நாடுகளில் செயல்படும் ‘Givaudan’ நிறுவனம் முதல் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் (ஏ.ஐ.) மூலம் வாசனை வகை கள் உருவாக்கும் ‘Symrise’ வரை, இந்த நிறுவனங்கள் அனைத்தும் இந்தியாவிலும் இயங்குகின்றன.

இதனால் இந்திய மாணவர்களுக்கு இத்துறையில் வேலை வாய்ப்புகள் அதிகரித்திருக்கின்றன. இந்தியாவைப் பொறுத்தவரை Fogg, Wild Stone, SKINN, Ajmal, Forest Essentials போன்ற பிராண்டுகள் வேகமாக வளர்ந்து வருகின்றன.

புதுமை புகுதல்

பிரான்சின் ISIPCA, Givaudan School, Grasse Institute போன்ற கல்வி நிறுவனங்களில் சேர்ந்து இந்தத் துறை சார்ந்து படிப்பது சிறப்பு. இந்தியாவில் மும்பையில் உள்ள ‘இன்ஸ்டிடியூட் ஆஃப் கெமிக் கல் டெக்னாலஜி’யில் இப்படிப்பு வழங்கப்படுகிறது.

தற்போது ஏ.ஐ. தொழில்நுட்பமும் வாசனைத் துறையில் பெரிய மாற்றத்தை உருவாக்கி வருகிறது. Givaudan நிறுவனத்தின் ‘Carto’, Symrise, IBM இணைந்து உருவாக்கிய ‘Philyra’, dsm-firmenich நிறுவனத்தின் ‘EmotiON’ போன்ற தொழில் நுட்பங்கள் மனிதர்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு வாசனை வகைகளைத் தயாரிக்கின்றன.

ஏ.ஐ. பெர்ஃபியூம் தொடர்பான தேடல்கள் கடந்த இரண்டு ஆண்டுகளில் பல மடங்கு அதிகரித்துள்ளன. இந்தத் துறையில் ஜூனியர் பெர் ஃபியூமர் முதல் மாஸ்டர் பெர்ஃபியூமர் வரை பல்வேறு பணிகள் உள்ளன.

இந்தியாவில் தொடக்கநிலை சம்பளம் ஆண்டுக்கு ரூ.5 லட்சம். சர்வதேச அளவில் மாஸ்டர் பெர்ஃபியூமர்கள் கோடிகளில் சம்பாதிக்கிறார்கள். வேதியியல் பொறியியல், உயிரித்தொழில் நுட்பம், உணவுத் தொழில் நுட்பம் படிப்புகளைப் படித்தவரும் இத்துறையில் வேலைவாய்ப்பைப் பெறலாம். எனவே இத்துறையைத் தவறவிடாதீர்கள்.

தமிழ்நாட்டின் மதுரை மல்லி உள்ளூர்ச் சந்தையைத் தாண்டி உலக நறுமணத் தொழிலில் முக்கிய இடம்பெறக்கூடிய திறன் கொண்டது. பெர்ஃபியூம், காஸ்மெடிக்ஸ், அரோமா தெரபி, பிளேவரிங் போன்ற துறைகளில் மதுரை மல்லிக்கு மிகப்பெரிய வணிக வாய்ப்பு உள்ளது.

உலகளவில் இயற்கை வாசனை வகைகளுக்கான தேவை அதிகரித்துவரும் நிலையில், மல்லிகை எண்ணெய் பிரபலமாகி வருகிறது. ஆனால் பெரிய அளவிலான முதலீடுகள் இங்கு இல்லை. சரியான தொழில்நுட்பமும் முதலீடும் இருந்தால் உலக நறுமணச் சந்தையில் தமிழ்நாட்டின் பெயரை மதுரை மல்லி உயர்த்தும்!

- கட்டுரையாளர், உயர் கல்வி ஆலோசகர்; ticf@indiacollegefinder.org

பெர்ஃபியூம் துறையில் உலக வேலை - வேலைன்னு வந்துட்டா... | அத்தியாயம் 32
முன்னேற்றத்துக்கு அடித்தளமான ‘3’

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in