

இன்றைய மாணவர் உலகம் மாற்றத்தின் வேகத்தை அனுபவிக்கிறது. இந்த மாற்றங்கள் இயல்பானவை என்பது அனைவரும் அறிந்ததே.
என்கிறபோதும், அவை மாணவர்களின் ஒழுக்கம், அடையாளம், கல்வி, நோக்கம் ஆகியவற்றில் எவ்வாறு பிரதிபலிக்கின்றன என்பதை முக்கியமாகக் கவனிக்க வேண்டியுள்ளது.
கவனச்சிதறல் பிரச்சினை
அண்மைக் காலமாக கல்வி நிறுவனங்களில் உடை ஒழுங்கு குறித்த விவாதம் அதிகரித்து வருகிறது. சீருடை என்பது சமத்துவம், ஒழுக்கத்தின் அடையாளமாகக் கருதப்படுகிறது.
ஆனால், நடைமுறையில் அதை மாற்றி அணியும் வழக்கம் பல இடங்களில் காணப்படுகிறது. கை, கால்களில் கட்டப்படும் கயிறுகள், விதவிதமாக முடி வெட்டும் முறை, டாட்டூ போன்றவை பள்ளிப் பருவத்திலேயே பரவலாகத் தோன்றுகின்றன.
இத்தகைய மாற்றங்கள் வெறும் அலங்காரப்படுத்திக் கொள்வதாக மட்டுமல்லாமல், மாணவர்களின் சமூகப் பழக்கவழக்கங்களிலும் மாற்றங்களை ஏற்படுத்துகின்றன.
மாணவர்களின் இந்தப் பழக்கவழங்களைக் கண்டித்து ஆசிரியர் கட்டுப்பாடுகளை விதிப்பது சவாலாகிவிட்டது. இதன் தாக்கம் கல்வியில் கவனம் செலுத்துவதையும் பாதிக்கிறது.
கவனச்சிதறல் அதிகரிக்கிறது. ‘மற்றவரைப் போல இருக்க வேண்டும்’ என்கிற எண்ணம் தனித்திறன் வளர்ச்சியை மறைக்கிறது. சமூக ஊடகங்களின் தாக்கம் அதிகரிப்பதால் மாணவர்களின் மொழித் திறனும் பாதிக்கப்படுகிறது.
இளைய தலைமுறை
இந்தியாவில் இளைஞர்கள் ஒரு பெரிய வளமாகக் கருதப்படுகின்றனர். இருப்பினும், அந்த வளத்தை முழுமையாகப் பயன்படுத் துவதில் சவால்கள் நீடிக்கின்றன. இளைய தலைமுறையைச் சேர்ந்த பெரும்பாலா னோர் கல்வி, வேலை, பயிற்சி ஆகியவற்றில் ஈடுபடாமல் உள்ளனர்.
உயர்கல்வி சேர்க்கை உயர்ந்திருந்தாலும், அதனுடனான வேலை வாய்ப்பு இணைப்புக் குறை பாடு தொடர்கிறது. இதுபோன்ற நிலை கல்வி வேலை வாய்ப்புக்கு இடையிலான இடைவெளியைச் சுட்டிக்காட்டுகிறது.
தகுதித் தேர்வு, போட்டித் தேர்வு ஆகியவற்றின் நோக்கம் பற்றிய தெளிவு பலருக்கு இல்லை. இதனால், மாணவர்களின் போட்டித்திறன் வளர்ச்சி தாமதப்படுகிறது. போட்டித் தேர்வின் உச்சமாக மத்திய அரசின் யுபிஎஸ்சி தேர்வு உள்ளது.
இதற்காகத் தயாராகும் பெரும்பாலான மாணவர்கள் யுபிஎஸ்சியைவிடக் குறைந்த நிலை கொண்ட வேறு பல போட்டித் தேர்வுகளையும் எழுதலாம். இதன் பலனாக யுபிஎஸ்சி தேர்வில் அவர்கள் வெற்றி பெறாமல் போனாலும், ஏதாவது ஒரு போட்டித்தேர்வில் வென்று மத்திய அல்லது மாநில அரசு சார்ந்த பல்வேறு துறைப் பணிகளைப் பெறும் வாய்ப்புகள் உள்ளன.
காலத்தின் தேவை
கல்வி நிறுவனங்களில் உடை ஒழுங்கு நடத்தை விதிகள் தெளிவாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். வாழ்க்கைத் திறன், மொழித் திறன், போட்டித் தேர்வு பற்றிய விழிப்புணர்வு ஆகியவை பாடத்திட்டத்துடன் இணைக்கப்பட வேண்டும்.
பெற்றோர் - ஆசிரியர் இணைப்பு வலுப்படுத்தப்பட வேண்டும். சமூக ஊடகப்பயன்பாட்டுக்கு வழிகாட்டுதல்கள் வழங்கப் பட வேண்டும். பள்ளி நிலையிலேயே தொழில் வழிகாட்டுதல் திறன் மேம்பாட்டுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும்.
மாணவர்களின் ஒழுக்கம், திறன், போட்டித்திறன் ஆகிய மூன்றையும் இணைக்கும் அணுகுமுறை அவர்களது முன்னேற்றத்துக்கு அடித் தளமாக அமையும். அதுவே சமூகத்தின் நீடித்த வளர்ச்சிக்கும் வழிவகுக்கும்.
- கட்டுரையளர், பி. ரவிச்சந்திரன் பேராசிரியர்; gtnravi@gmail.com