உயிர்களின் பிணைப்பை ஆராயும் அறிவியல் வேலைன்னு வந்துட்டா... | அத்தியாயம் 44

உயிர்களின் பிணைப்பை ஆராயும் அறிவியல் வேலைன்னு வந்துட்டா... | அத்தியாயம் 44
Updated on
2 min read

பூமியில் வாழும் ஒவ்வோர் உயிரினமும் பாறைகள், மண், நீர், காற்று ஆகியவற்றுடன் நெருங்கியத் தொடர்பு கொண்டே வாழ்கின்றன. இந்தத் தொடர்பை ஆழமாக ஆராயும் புதிய அறிவியல் துறைதான் ‘புவி உயிரியல்’ (Geobiology). புவியியல் - உயிரியல் ஆகிய இரண்டு துறைகளின் கலவையாக உருவான இந்த இடைநிலைத் துறை, கடந்த சில பத்தாண்டுகளில் உலக அளவில் வேகமாக வளர்ந்து வருகிறது.

தோற்றமும் வளர்ச்சியும்

பூமியும் அதில் வாழும் உயிரினங்களும் குறிப்பாக நுண்ணுயிரிகளும் ஒன்றை மற்றொன்று எவ்வாறு பாதித்து, இணைந்து பரிணாம வளர்ச்சி அடைந்தன என்பதை ஆராயும் அறிவியல் துறைதான் புவி உயிரியல்.

இதில் புவியியல், உயிரியல், நுண் ணுயிரியல், புவி வேதியியல், தொல்லுயிரியல், மரபியல் உள்ளிட்ட பல துறைகளின் அறிவு ஒருங்கிணைக்கப்படுகிறது.

இத்துறை சார்ந்த கருத்துகள் 18ஆம் நூற்றாண்டிலேயே உருவாகத் தொடங்கி னாலும், கடந்த இரண்டு தசாப்தங்களில்தான் தனித்துறைக்கான அங்கீகாரத்தைப் பெற்றது.

பழமையான நுண்ணுயிர்ப் புதைபடிவங்கள் கண்டறியப்பட்டதும் பூமியின் தொடக்கக் கால உயிரினங்கள் குறித்த ஆய்வுகள் அதிகரித்ததும் இதன் வளர்ச்சிக்கு முக்கியக் காரணங்கள். இன்று உலகின் பல முன்னணிப் பல்கலைக்கழகங்களில் இத்துறை தனிப் படிப்பாகவும் ஆராய்ச்சித் துறையாகவும் கற்பிக்கப்படுகிறது.

முக்கிய உள்பிரிவுகள்

புவி உயிரியலில் ஐந்து முக்கிய உள் பிரிவுகள் உள்ளன.

பூமி - உயிர் வரலாறு (History of Earth and Life): பூமியும் உயிரினங்களும் எவ்வாறு தோன்றிப் பரிணாம வளர்ச்சி அடைந்தன என்பதை ஆராய்கிறது.

நுண்ணுயிரியல் - நுண்ணுயிர் சூழலியல் (Microbiology and Microbial Ecology): நுண்ணுயிர்கள் பல்வேறு சூழலியல் தொகுதிகளில் எவ்வாறு வாழ்கின்றன - சுற்றுச்சூழலை எவ்வாறு பாதிக்கின்றன என்பதை ஆய்வுசெய்கிறது.

மூலக்கூறு - ஐசோடோப் புவி உயிரியல் (Molecular and Isotopic Geobiology): பாறைகளில் உள்ள வேதித் தடயங்களைப் பயன்படுத்தி, பழங்கால உயிரினங்களின் இருப்பைக் கண்டறிகிறது.

பழங்காலச் சுற்றுச்சூழல் மறுகட்டமைப்பு (Paleoenvironmental Reconstruction): கோடிக் கணக்கான ஆண்டுகளுக்கு முன் பூமியின் காலநிலை, கடல் மட்டம் - வளிமண்டல அமைப்பு எப்படி இருந்தது என்பதை மீள்கட்டமைத்து ஆய்வு செய்கிறது.

கோள் புவி உயிரியல் (Planetary Geobiology): பூமியில் கிடைத்த அறிவைப் பயன்படுத்தி செவ்வாய் உள்ளிட்ட பிற கோள்களில் உயிர் இருந்ததா அல்லது இருக்கிறதா என்பதை ஆராய்கிறது.

தொடர்புடைய பிற துறைகள்

புவி உயிரியலைப் புரிந்துகொள்ள அதனுடன் இணைந்து செயல்படும் சில துறைகளையும் அறிந்துகொள்வது அவசியம். விண்வெளி உயிரியல் (Astrobiology) பூமிக்கு வெளியே உயிர் இருக்கிறதா என்பதை ஆராய்கிறது.

உயிர் - புவி வேதியியல் (Biogeochemistry) கார்பன், நைட்ரஜன் போன்ற தனிமங்கள் உயிரினங்களுக்கும் சுற்றுச்சூழலுக்கும் இடையே எவ்வாறு பங்காற்றுகின்றன என்பதை விளக்குகிறது. புவித் தொல்லியல் (Geoarchaeology) புவியியல் ஆய்வு முறைகளைப் பயன் படுத்தி பழங்கால மனித வாழ்விடங்களையும் நாகரிகங்களையும் ஆராய்கிறது.

பயன்பாடுகள்

புவி உயிரியலின் பயன்பாடுகள் ஆய்வகங் களைத் தாண்டிப் பல துறைகளுக்கு விரிகின்றன. பூமியில் உயிர் தோன்றிய விதம், ஆக்சிஜன் நிறைந்த வளிமண்டலம் உருவான வரலாறு, செவ்வாய் உள்ளிட்ட பிற கோள்களில் உயிர் இருந்ததா என்பது போன்ற கேள்விகளுக்கு விடை தேட இது உதவுகிறது.

எண்ணெய்க் கசிவு, சுரங்கக் கழிவுகள் போன்ற மாசுபாடுகளை நுண்ணுயிரிகளின் உதவியுடன் சுத்தப்படுத்துதல், காலநிலை நெருக்கடியைப் புரிந்துகொள்ளப் பழங்காலப் புவிச் சூழலை ஆய்வுசெய்தல், மண், நீரில் உள்ள கனிமங்கள் மனித ஆரோக்கியத்தில் ஏற்படுத்தும் தாக்கத்தை அறிதல், பெட்ரோ லியம், இயற்கை எரிவாயு துரப்பணத்தை ஆய்வு செய்தல் ஆகியவை இதன் முக்கியப் பயன்பாடுகள்.

சுற்றுச்சூழல், உயிரியல், புவியியல், விண்வெளி அறிவியலை இணைக் கும் எதிர்காலத் துறைகளில் ஒன்றாகப் புவி உயிரியல் கருதப்படுகிறது.

புவி உயிரியல் படிக்க இந்தியாவிலும் உலகின் சிறந்த பல்கலைக்கழகங்களிலும் இருக்கும் ஆராய்ச்சி வாய்ப்புகள், தொழில் வாய்ப்புகள் குறித்து அடுத்த அத்தியாயத்தில் விரிவாகப் பார்க்கலாம்.

- கட்டுரையாளர், உயர் கல்வி ஆலோசகர்; ticf@indiacollegefinder.org

உயிர்களின் பிணைப்பை ஆராயும் அறிவியல் வேலைன்னு வந்துட்டா... | அத்தியாயம் 44
பொறியியலோடு பொருளியலும் தேவை! - வேலைன்னு வந்துட்டா... | அத்தியாயம் 43

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in