

அறிவியல் மீது ஆர்வமா? மனிதர் பாதுகாப்பில் பங்களிக்க விருப்பமா? உலகளாவிய தொழில் வாய்ப்பை நாடுகிறீர்களா? அப்படியானால் ‘ஹெல்த் பிசிக்ஸ்’ உங்கள் எதிர்காலத்தை ஒளிரவைக்கும். இயற்பியலை விரும்பும் மாணவர்களுக்கும் சமூக நலனில் ஈடுபட விரும்புபவர்களுக்கும் ஹெல்த் பிசிக்ஸ் ஓர் அரிய வாய்ப்பு.
எடுத்துக்காட்டுக்கு, புற்றுநோய் சிகிச்சை அறையை எடுத்துக்கொள் வோம். நோயாளிக்குத் தேவையான அளவு கதிர்வீச்சு சரியாகக் கட்டுப்படுத்தப் பட்டுள்ளதா என்பதை மெடிக்கல் பிசிசிஸ்ட் உறுதிப்படுத்துவார். சிகிச்சை அறைச் சுவர்கள் போதுமான பாதுகாப்புடன் உள்ளனவா, வெளியில் இருப்பவர் களுக்குக் கதிர்வீச்சு செல்லவில்லையா என்பதை ஹெல்த் பிசிசிஸ்ட் உறுதிப்படுத்துவார்.
அதாவது, சிகிச்சையின் துல்லியத்தை உறுதிப்படுத்துவது மெடிக்கல் பிசிக்ஸ் துறையின் பொறுப்பாகவும் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது ஹெல்த் பிசிக்ஸ் துறையின் பொறுப் பாகவும் பிரிகிறது. இரண்டுமே மனித குலத்திற்கு மிக அவசியமான, சிறந்த பணிகள்.
படிப்புகள்
இயற்பியல், பொறியியல் அல்லது பிற அறிவியல் துறைகளில் இளநிலைப் பட்டம் பெற்ற பின்னர், ஹெல்த் பிசிக்ஸ் அல்லது கதிர்வீச்சுப் பாதுகாப்பு தொடர்பான முதுநிலைப் படிப்புகளைத் தொடரலாம்.
இந்தியாவில் பாபா அணு ஆராய்ச்சி மையம் (BARC) வழங்கும் கதிர்வீச்சுப் பாதுகாப்பில் டிப்ளோமா (DipRP), எய்ம்ஸ் (AIIMS) வழங்கும் எம்.எஸ்சி. மெடிக்கல் பிசிக்ஸ் படிப்பு, அணு ஆற்றல் ஒழுங்குமுறை வாரியம் (AERB) அங்கீகரித்துள்ள ‘Radiation Safety Officer’ (RSO) சான்றிதழ் பயிற்சிகள் இந்தத் துறைக்கான முக்கியத் தகுதிகளாகக் கருதப்படுகின்றன.
வெளிநாடுகளில் அமெரிக்காவின் ஜான்ஸ் ஹாப்கின்ஸ், விஸ்கான்சின்–மாடிசன், ஓரிகான் ஸ்டேட், மின்னசோட்டா, பென்சில்வேனியா, ஸ்டான்ஃபோர்டு, சிகாகோ பல்கலைக்கழகங்கள், கனடா வின் மெக்கில் பல்கலைக்கழகம், அயர்லாந்தின் யுனிவர்சிட்டி கல்லூரி - டப்ளின் ஆகியவற்றில் ஹெல்த் பிசிக்ஸ், கதிர்வீச்சுப் பாதுகாப்பு தொடர்பான உயர்கல்வி வழங்கப்படுகிறது.
இதே போல் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா நாடுகளில் உள்ள பல முன்னணிப் பல்கலைக்கழகங்களிலும் மெடிக்கல் பிசிக்ஸ், கதிர்வீச்சு அறிவியல் பாடப் பிரிவுகள் கற்பிக்கப்படுகின்றன.
எதிர்காலம்
உலக அளவில் தகுதியான ஹெல்த் பிசிசிஸ்ட்களுக்குப் பற்றாக்குறை நிலவி வருகிறது. இதனால், இத்துறையில் வேலைவாய்ப்புகள் அதிகரித்துள்ளன. அரசுத் துறையில் பாபா அணு ஆராய்ச்சி மையம், கல்பாக்கம் அணுமின் நிலையம், அணுசக்தி ஒழுங்குமுறை வாரியம் போன்ற நிறுவனங்களில் ‘சயின்டிபிக் ஆபீசர்’ (Scientific Officer) பதவிகளில் பணி யாற்றலாம். இவை அணுப் பாதுகாப்பு, கதிர்வீச்சுக் கண்காணிப்பு, தேசியப் பாதுகாப்பு தொடர்பான முக்கியப் பொறுப்பு களை உள்ளடக்கியவை.
கார்ப்பரேட் மருத்துவத் துறையிலும் நல்ல வாய்ப்புகள் உள்ளன. அப்பலோ, அடையாறு கேன்சர் இன்ஸ்டிடியூட் போன்ற முன்னணி மருத்துவமனைகளில் ‘ரேடியேஷன் சேஃப்டி ஆபீசர்’ (RSO) ஆகப் பணிபுரிந்து, கதிர்வீச்சு சிகிச்சை, மருத்துவக் கருவிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் பொறுப்புகளை வகிக்கலாம்.
பன்னாட்டு மருத்துவக் கருவித் தயாரிப்பு நிறுவனங்களான சீமென்ஸ், ஜி.இ. ஹெல்த்கேர், வேரியன் போன்றவற்றில் ‘அப்ளிகேஷன் ஸ்பெஷலிஸ்ட்’ (Application Specialist) அல்லது தொழில் நுட்ப நிபுணராக இணைந்து மேம்பட்ட கதிர்வீச்சு, மருத்துவப் படமெடுப்பு கருவிகளின் வடிவமைப்பு, பயன்பாடு ஆகியவற்றின் தயாரிப்புக்கான ஆலோசனை யில் ஈடுபடலாம்.
வெளிநாடுகளில் வாய்ப்பு
அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் மெடிக்கல் பிசிசிஸ்ட் பணிக்குத் தகுதியான நிபுணர்கள் குறைவாக இருப்பதால், அங்கு இந்தத் துறையினருக்கு மிகுந்த வரவேற்பும் உயர்ந்த பணிநிலையும் வழங்கப்படுகின்றன.
உலகளாவிய அளவில் மருத்துவமனைகள், அணுமின் நிலையங்கள், அரசு அமைப்புகள், பாதுகாப்புத் துறை, சுற்றுச்சூழல் பாது காப்பு நிறுவனங்கள், கல்வி ஆராய்ச்சி மையங்கள் போன்ற பல துறைகளில் பணியாற்றும் வாய்ப்பு உள்ளது.
மேலும், இத்துறை சார்ந்த கருவிகள், அணுப் பாதுகாப்புத் தொழில்நுட்பம், மருத்துவப் படமெடுப்பு (Medical Imaging) போன்றவற்றின் ஆராய்ச்சித் துறைகளில் நவீனத் தொழில்நுட்பத்துடன் பணியாற்றும் வாய்ப்பும் கிடைக்கிறது. இவை தொடர் பாக இயங்க விருப்பமுள்ள மாணவர்கள் இத்துறையைத் தேர்ந்தெடுக்கலாம்.
- கட்டுரையாளர், உயர் கல்வி ஆலோசகர்; ticf@indiacollegefinder.org