திறன் பெற்றவர்களை வரவேற்கும் வேலைவாய்ப்பு உலகம் | வெற்றி உங்கள் கையில்

திறன் பெற்றவர்களை வரவேற்கும் வேலைவாய்ப்பு உலகம் | வெற்றி உங்கள் கையில்
Updated on
1 min read

நான் ஒரு பட்டதாரி. ஓராண்டாகச் சரியான வேலை கிடைக்கவில்லை. இப்போது டெலிவரி வேலைக்குப் போகலாம் என்று நினைக்கிறேன். அதில் சேரலாமா அல்லது வேறு வேலை தேடலாமா எனக் குழப்பமாக உள்ளது, வழிகாட்டுங்கள். - வெள்ளியங்கிரி, சரவணம்பட்டி.

முதலில் நீங்கள் மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ள வேலையின் தன்மை, அதன் நீண்ட காலச்சாதக பாதகங்களை அறிந்து கொள்ளுங்கள். 2025ஆம் ஆண்டு கணக்கீட்டின்படி இத்தகைய பணிகளில் சுமார் 1.1 கோடி பேர் நாடு முழுவதும் ஈடுபட்டுள்ளனர்.

இவர்களுக்கு உரிய சமூகப் பாதுகாப்பு, பணி நேரம் போன்ற முக்கிய அம்சங்களில் பல மாநில அரசுகள் தகுந்த முன்னெடுப்பை மேற்கொண்டுவருகின்றன.

நாடு முழுவதும் ஆண்டுதோறும் வெளிவரும் பட்டம் பெறுபவர்களில் 20% பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். இன்றைய வேலைவாய்ப்பு உலகம் திறன் பெற்றவர்களை இருகரம் நீட்டி வரவேற்கத் தயாராக உள்ளது. ஆனால், பலர் வேலைவாய்ப்புத் திறன்களைப் பெறத் தவறி விடுகின்றனர்.

நீங்கள் உடனடித் தேவைக்காக மட்டும் இப்பணியில் சேரலாம். இதில் கிடைக்கும் வருமானத்தை வைத்து, திறன் பயிற்சிகளைப் பெற முயலுங்கள் அல்லது போட்டித் தேர்வுகளான ரயில்வே தேர்வுகள், மத்திய அரசுப் பணிகள், தமிழ்நாடு அரசு தேர்வாணையத்தின் போட்டித் தேர்வுகள், வங்கித் தேர்வுகள் உள்ளிட்ட அனைத்தையும் எழுதுங்கள்.

மேலும் ராணுவம், துணை ராணுவம், தமிழ்நாடு அரசு காவல்துறை பணியிடங்களுக்கான தேர்வுகளுக்கும் உடற்தகுதி முதல் அனைத்து வகையிலும் தயாராகுங்கள்.

அண்மையில் இளைஞர் ஒருவர் ரயில் நிலைய நடைமேடை விளக்கில் படித்து, நாட்டின் உயரியபணியிடத்துக்குத் தேர்வானதாக நாளிதழில் செய்திகள் வெளியாகின.

போட்டித் தேர்வு களுக்குப் பயிற்சியளிக்கத் தமிழ்நாடு அரசு பல்வேறு முயற்சிகளை முன்னெடுத்துள்ளது. ‘நான் முதல்வன்’ திட்டத்தின் மூலம் போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி, மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகங்களின் வாயிலாகப் பயிற்சிகள் போன்றவற்றோடு இதர துறைகளும் பயிற்சிகளை வழங்குகின்றன. எனவே, முயற்சியும் பயிற்சியும் இருந்தால் வெற்றி நிச்சயம்.

திறன் பெற்றவர்களை வரவேற்கும் வேலைவாய்ப்பு உலகம் | வெற்றி உங்கள் கையில்
இளையோரைச் சீரழிக்கும் டிஜிட்டல் போதை | சொல்... பொருள்... தெளிவு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in