இளையோரைச் சீரழிக்கும் டிஜிட்டல் போதை | சொல்... பொருள்... தெளிவு

இளையோரைச் சீரழிக்கும் டிஜிட்டல் போதை | சொல்... பொருள்... தெளிவு
Updated on
2 min read

‘ஒருகாலத்தில் பண்ணைகளில் வாழ்ந்தோம்; பிறகு நகரங்களில் வாழ்ந்தோம்; இப்போது இணையத்தில் வாழ விழைந்துகொண்டிருக்கிறோம்’ என்கிற வாக்கியம் அமெரிக்காவில் மிகவும் பிரபலம். இன்றைக்குச் சிறார் முதல் பெரியோர்வரை அனைவரும் டிஜிட்டல் (எண்ணிலக்க) கருவிகளைச் சார்ந்து வாழத் தலைப்பட்டுவிட்டனர்.

இந்தப் பயன்பாடு அதீதம் என்னும் நிலையைக் கடந்து, அடிமையாகும் நிலையை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறது. இந்தச் சூழல் இன்னும் விஸ்வரூபம் எடுக்கக்கூடும் என்கிற எச்சரிக்கை, அண்மையில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட பொருளாதார ஆய்வறிக்கையில் (Economic Survey) இடம்பெற்றிருக்கிறது.

டிஜிட்டல் அடிமை​யாதல்

வேகமாக வளர்ந்து​வரும் டிஜிட்டல் பொருளா​தா​ரம், வலுவான டிஜிட்டல் கட்டமைப்பு, மலிவான கட்ட​ணத்​தில் இணைய வசதி போன்ற​வற்​றால் ஒரு டிஜிட்டல் சமூகமாக முன்னேற்றம் கண்டு​வரு​கிறது இந்தியா.

2023ஆம் நிதி​ ஆண்​டின் தேசிய வருவா​யில் 11.74% பங்களிப்பு டிஜிட்டல் பொருளா​தா​ரத்​தின் வழியே கிடைத்​த​தாகச் சொல்​கிறது மத்திய அரசு. பெரு​மளவு பயன்​பாடு, வருவாய் ஈட்டலை முன்​வைத்து 2025இல் இது 13.42% ஆக உயரக்​கூடும் என இந்த ஆய்வறிக்கை குறிப்​பிடு​கிறது.

இந்தியா​வில் 2014ஆம் ஆண்டு 25.15 கோடி என இருந்த இணைய இணைப்பு​களின் எண்ணிக்கை 2024இல் 96.96 கோடியாக உயர்ந்​தது. 2025இல் குறைந்த​பட்சம் ஒரு திறன்​பேசி வைத்​திருக்கிற வீடு​களின் எண்ணிக்கை 85.5% என்றாகி​யிருக்​கிறது.

2024இல் மட்டும் ஓடிடி, உணவு விநி​யோகச் செயலிப் பயனர்​களின் எண்ணிக்கை 40 கோடி​யாக​வும் சமூக வலைத்​தளங்​களைப் பயன்​படுத்து​வோரின் எண்ணிக்கை 35 கோடி எனவும் பதிவாகி​யுள்​ளது.

டிஜிட்டல் சூழலால் எந்த அளவுக்கு வசதி வாய்ப்புகள் அதிகரித்​திருக்​கின்​றனவோ, அதே போன்று அவற்றின் எதிர்​மறைத் தாக்​க​மும் அதிகமாக இருப்​ப​தைச் சில ஆய்வுகள் உணர்த்து​கின்றன.

கட்டாய​மான, அதிகப்​படியான டிஜிட்டல் கருவிகள் பயன்​பாட்​டால் பொருளா​தார, சமூக அளவில் பாதிப்புகள் ஏற்பட்​டுள்ளன. உடல் குறை​பாடு​கள், மனநலக் குறை​பாடு​கள், நிதி இழப்பு​கள், மாணவர்​களின் கல்வி, பணியாளர்​களின் செயல்​பாடு​களில் மந்தநிலை உள்ளிட்டவை இந்த வரிசை​யில் சேரும்.

கட்டுப்​பாடுகள்

திறன்பேசிகள், கேமிங் தளங்கள், சமூக வலைத்தளங்கள் என்று டிஜிட்டல் கருவிகளில் ஒரு நாளின் பெரும்பொழுதுகளைச் செலவழிப்பதை டிஜிட்டல் போதைப்பழக்கம் என வரையறுக்கிறது மருத்துவ உலகம்.

உறவுகள், நட்புப் பிணைப்பு பலவீனமாவது, சமூகப் பங்கேற்பு குறைவது, வழக்கமான திறன்களை இழப்பது போன்றவற்றில் தொடங்கிப் பலவற்றுக்கு இது காரணமாகிறது.

டிஜிட்டல் கருவி​களுக்கு அடிமை​யாதல் என்பது உலகள​வில் முக்​கியப் பிரச்சினையாக உருவெடுத்​திருக்​கிறது; ஒழுங்கு​முறை, சிகிச்சை, கல்விப்புலம் சார்ந்த நடவடிக்கைகளை அரசும் சுகாதார அமைப்பு​களும் சமூக​மும் மேற்​கொள்​வதற்கான தூண்​டுதலை ஏற்படுத்​தி​ உள்​ளது.

‘கேமிங் பிரச்சினை’களின் கீழ் ஐசிடி-11இல் ஒரு மனநலக் குறை​பாடாக ‘கேமிங் அடிமை​யாத’லை வகைப்​படுத்​தி​யிருக்​கிறது உலகச் சுகாதார நிறு​வனம்.

மற்ற செயல்​பாடு​களைவிட கேமிங்​கில் அதிக ஆர்வம் காட்டு​தல், அந்தச் செயல்​பாட்​டில் கட்டுப்​பாடு​களைக் கடைப்​பிடிக்க இயலாமை, எதிர்மறை விளைவு​களுக்கு மத்தி​யிலும் அதைத் தொடர்தல் போன்ற​வற்​றால் இது வரையறுக்​கப்​படு​கிறது.

ஆஸ்திரேலி​யா​வில் 16 வயதுக்​குக் கீழ் உள்ளவர்கள் சமூக வலைத்​தளங்​களைப் பயன்​படுத்த அண்மை​யில் தடை விதிக்​கப்​பட்​டது. தென் கொரி​யா​வில் நள்ளிர​வில் கேமிங் தளங்​களைப் பயன்​படுத்தச் சிறாருக்​குத் தடை உள்ளது.

சீனா​வில் பயனர்கள் உண்மையான பெயரைப் பயன்​படுத்தி கேமிங் விளை​யாடும் வகையிலான கட்டுப்​பாடுகள் வரையறுக்​கப்​பட்​டுள்ளன.

பிரேசில், ஃபிரான்ஸ், பின்​லாந்து, ஸ்பெ​யின், ஜப்பான் போன்ற நாடு​களி​லும், அமெரிக்​கா​வின் சில மாகாணங்​களி​லும் மாணவர்கள் டிஜிட்டல் கருவி​களைப் பயன்​படுத்து​வதற்​குக் கடுமையான கட்டுப்​பாடுகள் பின்​பற்​றப்​படு​கின்றன.

இந்தியா​வைப் பொறுத்​தவரை, பதினாறு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான சமூக ஊடக அணுகலைக் கட்டுப்படுத்துவதற்கான முன்மொழிவை கர்நாடக அரசு அறிவித்துள்ளது.

மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) பள்ளி​கள், பள்ளிப் பேருந்துகளில் பாது​காப்பான இணையப் பயன்​பாட்டுக்கான வழிகாட்டு​தல்களை வெளி​யிட்​டுள்​ளது.

மத்திய சுகா​தாரத் துறை​யின் கீழ் 2022 முதல் ‘டெலி-​மானஸ்’ (Tele MANAS) என்னும் இலவச மனநல உதவிமையச் சேவை செயல்​படுத்​தப்​படு​கிறது.

2024இல் அறிமுகப்​படுத்​தப்​பட்ட இதற்கான செயலி​யில் டிஜிட்டல் அடிமை​யாதலைத் தடுப்பது உள்ளிட்ட அம்சங்கள் இடம்​பெற்றன.

அதிகப்​படியான தொழில்​நுட்பப் பயன்​பாட்​டால் பாதிப்​புக்கு உள்ளான இளையோரை மீட்​டெடுக்​கும் வகையில் பெங்​களூரு​வின் நிம்​ஹான்ஸ்​-இல் உள்ள ‘ஷட்’ (SHUT - Service for Healthy Use of Technology) செயல்​பட்டு​வரு​கிறது.

டிஜிட்டல் போதை, நிதி இழப்புகள் போன்ற​வற்றில் இளைய தலைமுறை​யினர் சிக்கு​வதைத் தடுக்​கும் வகையில் இணைய விளை​யாட்டு (ஒழுங்கு​முறை) சட்டம் 2025 மத்திய அரசால் கொண்டு​வரப்​பட்​டுள்​ளது.

சூதாட்ட முறை​யில் பணத்தைப் பயன்​படுத்​தும் இணைய விளை​யாட்டு​களுக்​குத் தடை விதிப்​பது, விளம்​பரங்​களைக் கட்டுப்​படுத்து​வது, அனும​திக்​கப்​பட்ட திறன் அடிப்​படையிலான விளை​யாட்டு​களுக்கான ஓர் உரிமக் கட்டமைப்பை அறிமுகப்​படுத்துவது ஆகிய​வற்றை இது மேற்​கொள்​கிறது.

கல்லூரி​கள், பணியிடங்​களில் டிஜிட்டல் அடிமை​யாதலைத் தடுக்​கும் வகையில் விழிப்பு​ணர்வு நிகழ்ச்சிகள் நடத்து​வது, தொழில்​நுட்பம் இல்லாத பகுதிகளை உருவாக்கு​வது, ஆரோக்​கியமான டிஜிட்டல் பழக்​கங்​களைப் பின்​பற்றுகிற வகையில் வழிகாட்டுதல் அமைப்​பைச் செயல்​படுத்து​வது, ‘டிஜிட்டல் டயட்’ என்கிற பெயரில் டிஜிட்டல் கருவி​களைப் பயன்​படுத்தாத சூழலை எதிர்​கொள்வது போன்ற​வற்​றைப் பின்​பற்ற முயல்வது பலன் தரும்.

டிஜிட்டல் போதைக்கு அடிமை​யானவர்களை மீட்​கும் வகையில் கர்நாடகத்​தில் ‘டிஜிட்டல் போதைத் தடுப்பு மையம்’ செயல்​படுத்​தப்​படு​கிறது.

டிஜிட்டல் கருவி​களைப் பயன்​படுத்துகிற வழக்கம் பள்ளிப் பருவத்​திலேயே பெரு​கிவரும் நிலை​யில், அவற்றின் பயன்​பாட்டுக்​கும் மனநலனுக்​குமான பிணைப்பு குறித்து மாணவர்​களிடத்​தில் விழிப்பு​ணர்வை ஏற்படுத்துவது அவசி​ய​மானது.

அதேபோலக் குடும்​பங்​களும் திறன்​பேசி அல்லது கணினித் திரையைப் பார்ப்​ப​தற்கான கட்டுப்​பாடு​களைக் கடுமை​யாக்க வேண்​டியது அவசி​யம்.

அக்கருவிகள் இல்லாத சூழலை எதிர்​கொள்ள, குழந்தை​களைப் பெற்​றோர் பழக்கு​வதோடு வேறு விளை​யாட்டு​கள், செயல்​பாடு​களில் அவர்​களைத் திருப்​பலாம்.

சிறப்​பம்​சங்கள் இல்லாத கைபேசி, கற்றலுக்கு மட்டுமே பயன்​படுத்​தத்​தக்க டேப்​லெட் போன்ற கருவி​களைக் குழந்தை​களிடம் கொடுக்​கலாம்.

அக்​கருவி​களின் உள்​ளடக்​கத்தைக் கட்டுப்​படுத்துகிற வழி​முறை​களைச் செயல்​படுத்​தலாம். இவற்​றோடு ‘டெலி-​மானஸ்’ செயலி மூல​மாகத் தரப்​படுகிற ஆலோ​சனை​களைப் பள்ளி, கல்​லூரி​கள் அளவில் ஒருங்​கிணைப்​பதும் காலத்​தின் தேவை.

இளையோரைச் சீரழிக்கும் டிஜிட்டல் போதை | சொல்... பொருள்... தெளிவு
தங்கம் விலை பவுனுக்கு ரூ.560 உயர்வு: இன்றைய சந்தை நிலவரம் என்ன?

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in