

ஏறக்குறைய முந்நூறு ஆண்டுகளாக இந்தியர்களிடையே புழங்கும் ஆங்கில மொழியில், பண்பாட்டுக்கு ஏற்றபடி பல மாற்றங்கள் புகுத்தப்பட்டுள்ளன.
ஆங்கிலேயர்களே எதிர்பார்த்திராதவையாக, சக இந்தியர்களுக்கே ஆச்சரியத்தை அளிக்கக்கூடியவையாக அவை உள்ளன. முக்கியமாக, சில தொடர்கள் திருத்தங்கள் தேவைப் படுபவையாக உள்ளன.
அண்மையில் சமூக வலைத்தளங்களில் விவாதத்துக்கு உள்ளான ‘What is your father?’ வினாவையே எடுத்துக்கொள்வோம். ‘‘உன் அப்பாவின் தொழில் என்ன?’ என்பதற்கு ‘What is your father?’ எனக் கேட்க வேண்டும் என்றுதான் இந்தியச் சமூகத்தில் பல ஆண்டுகளாகக் கற்பிக்கப்பட்டு வந்தது.
இந்த வினா முழு வடிவத்துடன் இல்லை; ‘உன் அப்பாவின் தொழில் என்ன?’ என்பதை ‘What does your father do?'/ ‘What is your father’s profession?’ போன்ற வினாக்களே சரியாக உணர்த்துகின்றன என்கிற வாதங்கள் விவாதத்தில் அதிகம் ஒலித்தன. ‘What is your father?’ஐ தவறான பயன்பாடு என்றே பலர் கூறுகின்றனர்.
பல ஆண்டுகளாகவே இது குறித்து இணையத் தளங்களில் ஐயங்கள் எழுப்பப்பட்டு வந்துள்ளன. இதழ்களிலும் தொலைக்காட்சிகளிலும் ஆங்கிலம் தொடர்பான தொடர்களில் விளக்கப்பட்ட ஒன்றாகவே இவ்வினா இருந்துள்ளது.
எல்லாவற்றிலும் 'What does your father do?’/‘What is your father’s profession?’/ ‘What is your father’s occupation?’ போன்றவையே சரியானவை என்கின்றனர் வல்லுநர்கள். எனினும், கனி இருக்கக் காயைப் பறிப்பதுபோல ‘What is your father?’ என்றே பலர் கேட்டு வந்திருக்கின்றனர்.
இதுபோல ஆங்கிலேயர்களிடமே பயன்பாட்டில் இல்லாத சில தொடர்கள் இந்தியர்களால் விடாப்பிடியாகப் பயன்படுத்தப்பட்டு வருவதை, மொழி வல்லுநர்கள் தொடர்ந்து சுட்டிக்காட்டி வருகின்றனர்.
பிரிட்டிஷ் கவுன்சில் இணையத்தளத்தில் ஆங்கில மொழி ஆசிரியரான ஸ்டீவன் பேக்கர், இந்தியர்களிடையே புழக்கத்தில் இருக்கும் ஆச்சரியப்படத்தக்க சொற்றொடர்கள் சிலவற்றைப் பட்டியலிட்டுள்ளார்.
ஒரே விஷயத்தை ஆங்கிலேயர்களும் இந்தியர்களும் அணுகுவதில் உள்ள பண்பாடு, மனநிலை சார்ந்த வேறுபாட்டையும் இதில் அவர் குறிப்பிடுகிறார். சரியானது/தவறானது என அவர் வகைப்படுத்தவில்லை.
எனினும், ஆங்கிலேயர்களான தாங்கள் எப்படிப் பயன்படுத்துகிறோம் என்பதை அவர் குறிப்பிடுகிறார். அதையே நாமும் பின்பற்றுவது பிழையற்ற,
தெளிவான ஆங்கில உரையாடலுக்கு நம்மை வழிநடத்தும்.
1. I am doing my graduation in London.
ஆங்கிலேயர்களுக்கு ‘கிராஜூவேஷன்’ என்பது குறிப்பிட்ட காலம் படித்து முடித்ததைத் தொடர்ந்து நிகழ்கிற பட்டமளிப்பு. ஆனால், இந்தியர்கள் அதை ‘கோர்ஸ்’ ஆக மட்டுமே கருதுவதன் வெளிப்பாடுதான் இந்தத் தொடர்.
சரி: I am studying for my degree in London.
2. I passed out of college
‘pass out’ என்றால் மயங்கி விழுதல். பிரிட்டனில் யாரும் இப்படிக் கூறுவதில்லை.
சரி: I graduated.
3. I belong to Delhi
எந்த ஊர் அல்லது நாட்டைச் சேர்ந்தவர் என்கிற வினாவுக்கான பதிலை இந்தியர்கள் இப்படித்தான் கூறுகின்றனர். ஆனால் ‘belong’ என்கிற சொல், விசுவாசம், கடமை போன்றவற்றைக் குறிக்கிறது.
சரி: I am from Delhi.
4. My teacher is sitting on my head.
இப்படி யாராவது சொன்னால் ‘உன் ஆசிரியரைக் கீழே இறங்கச் சொல்’ என்பதுதான் ஆங்கிலேயர்களது எதிர்வினையாக இருக்கும். ‘மேரா டீச்சர் பே பேத்தாஹை’ என்கிற இந்தித் தொடர் நேரடியாக மொழி பெயர்க்கப்பட்டதன் விளைவு இது.
சரி: My teacher is stressing me out - ஆசிரியர் என்னைப் பாடாய்ப் படுத்துகிறார் அல்லது மன அழுத்தத்துக்கு உள்ளாக்குகிறார் எனலாம்.
5. I am having a doubt
இது ஐயத்தை வெளிப்படுத்தவில்லை; ஒன்றின் மீதான நம்பகத்தன்மையைக் கேள்விக்கு உட்படுத்துவதாக உள்ளது.
சரி: I have a question / I need clarification on this.
இப்படிப் பல தவறான பயன்பாடுகள் உள்ளன. எனினும் பிழைகள் ஒருவரது எல்லைகளைச் சுருக்கிவிடக் கூடாது. சரியான சொற்களை அறிந்து மொழியின் கூர்மையைப் பாதுகாப்பதே சிறந்த அணுகுமுறை.
- anandchelliah@hindutamil.co.in