பேரம் பேசுவதும் பொருளியல்தான்! - வேலைன்னு வந்துட்டா... | அத்தியாயம் 42

பேரம் பேசுவதும் பொருளியல்தான்! - வேலைன்னு வந்துட்டா... | அத்தியாயம் 42
Updated on
2 min read

ஆட்டோவில் செல்ல பேரம் பேசுவது, கைபேசி ரீசார்ஜுக்கு எந்தத் திட்டத்தைத் தேர்வு செய்வது, மாத இறுதியில் சம்பளத்தை எப்படிப் பிரித்துச் செலவிடுவது உள்ளிட்ட அனைத்தும் பொருளியல் (Economics) சார்ந்த முடிவுகள்தான். பொருளியல் என்பது கல்லூரிகளில் படிக்கப்படும் பாடம் மட்டுமல்ல. வீட்டிலும் வெளியிலும் அன்றாட வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முடிவிலும் பொருளியல் ஒளிந்திருக்கிறது.

அடிப்படை

உலகப் பொருளியல் ஆய்வுல கில் 140 ஆண்டுகளுக்கும் மேலாக முக்கியப் பங்காற்றி வரும் ‘அமெரிக்கன் எகனாமிக் அசோசி யேஷன்’ (AEA), பொருளியலின் அடிப்படைக் கருத்தை மிக எளிமை யாக விளக்குகிறது.

நுண்ணியல் பொருளியல் (Microeconomics) என்பது தனிநபர் அல்லது குடும்பங்கள் எடுக்கும் அன்றாடப் பொருளாதார முடிவுகளைப் பற்றியது. பேரியல் பொருளியல் (Macroeconomics) என்பது ஒரு நாட்டின் ஒட்டுமொத்தப் பொருளாதாரம் எவ்வாறு இயங்கு கிறது என்பதைப் பற்றியது.

2019ஆம் ஆண்டு பொருளியலுக் கான நோபல் பரிசு பெற்ற அபிஜித் பானர்ஜி, வறுமை ஏற்றத்தாழ்வு குறித்த தனது ஆய்வுகளில் ஒரு முக்கியமான கருத்தைக் கூறுகிறார். வசதியான குடும்பங்களைச் சேர்ந்த பெற்றோர், தங்கள் குழந்தைகளின் கல்வி வளர்ச்சிக்காக அதிகமாகச் செலவிட முடிகிறது.

ஆனால், ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த குழந்தை களுக்கு அந்த தொடக்கக் கால வாய்ப்புகள் குறைவாக இருப்பதால், அவர்கள் பள்ளியில் சேரும் முன்பே பின்தங்கும் நிலை ஏற்படுகிறது.

இங்கேதான் பொருளியல் முக்கியத்துவம் பெறுகிறது. ஏழை, பணக்காரர் இடையேயான வேறுபாடு ஏன் உருவாகிறது, அதை எப்படிக் குறைக் கலாம் என்பதைப் புரிந்துகொள்ளப் பொருளியல் உதவுகிறது.

பயன்பாடு

உலகம் முழுவதும் நடைபெறும் சமூக, பொருளாதார மாற்றங்களைப் புரிந்துகொள்ளவும் பொருளியல் உதவுகிறது. எடுத்துக்காட்டாக, எல் சால்வடாரில் அதிகரிக்கும் வெப்ப நிலை விவசாயத்தைப் பாதிப்பதால், மக்கள் வேறு பகுதிகளுக்குக் குடிபெயர்கிறார்கள். இது காலநிலைப் பொருளியலுக்கான ஓர் எடுத்துக் காட்டு.

அதேபோல், ஒரு நிறுவனம் தனது காப்புரிமையை யாருக்கு விற்க வேண்டும், எந்தத் தொழில்நுட்பத்தை வெளியிலிருந்து வாங்க வேண்டும் என்பது போன்ற முடிவுகளும் பொருளியல் அடிப்படையிலேயே எடுக்கப்படுகின்றன.

உலக நாடுகளிலும் இந்தியாவிலும் பட்ஜெட், விவ சாயம், விலைவாசி, வேலைவாய்ப்பு போன்ற பல துறைகளில் அரசின் முடிவுகளை எடுப்பதில் பொருளியல் முக்கியப் பங்கு வகிக்கிறது.

வேலைவாய்ப்பு அறிக்கை 2025

உலகப் பொருளாதார மன்றம் (World Economic Forum) வெளியிட்ட 'Future of Jobs Report 2025' அறிக்கையின்படி, 2030ஆம் ஆண்டுக்குள் உலகம் முழுவதும் 17 கோடி புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும்.

அதேநேரத்தில் சில வேலைவாய்ப்புகள் மறைந்தாலும், தரவைப் பகுப்பாய்வு செய்தல், பகுத்தறிந்து முடிவெடுத்தல் போன்ற திறன்களுக்கு தொடர்ந்து தேவை அதிகரிக்கும். இந்தத் திறன்களை வளர்க்கும் பொருளியல் படிப்பு, எதிர்கால வேலைவாய்ப்புகளுக்கும் முக்கியமானதாக இருக்கும்.

உலகின் முன்னணிப் பல்கலைக்கழகங்கள் பொருளியலை எப்படிக் கற்பிக்கின்றன? இந்தியக் கல்லூரிகளின் நிலை என்ன? பொருளியலில் இரட்டைப் பட்டம் (Dual Degree) படிக்க முடியுமா ஆகியவற்றைப் பற்றி அடுத்த வாரம் விரிவாகப் பார்க்கலாம்.

- கட்டுரையாளர், உயர் கல்வி ஆலோசகர்; ticf@indiacollegefinder.org

பேரம் பேசுவதும் பொருளியல்தான்! - வேலைன்னு வந்துட்டா... | அத்தியாயம் 42
மக்கள்தொகை அறிவியலில் உலக வாய்ப்புகள் - வேலைன்னு வந்துட்டா... | அத்தியாயம் 41

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in