

கல்லூரிப் படிப்பின்போது நடைபெற்ற ஒரு நிகழ்ச்சிக்காகப் பரிசுப் பொருள்கள் வாங்கித் தரும் பணியைத் திறம்படச் செய்யத் தொடங்கி, இன்று ‘கார்ப்பரேட் கிஃப்ட்டிங்’ துறையில் வெற்றிகரமாக ஒரு நிறுவனத்தை நடத்தி வருகிறார் சென்னையைச் சேர்ந்த பிரேம்.
தமிழ்நாடு மட்டுமன்றி ‘பான் இந்தியா’ அளவில் தொழிலை விரிவுபடுத்தியுள்ள ‘கிரீன் ரூட்ஸ்’ நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பில் உள்ள அவரோடு ஓர் உரையாடல்.
அதென்ன ‘கார்ப்பரேட் கிஃப்ட்டிங்’?
பெருநிறுவனங்களில் புதிதாக வேலைக்குச் சேரும் நபருக்கு ‘வெல்கம் கிட்’ அளித்து வரவேற்பது வழக்கம். இதில் பணியாளரின் பெயர் பொறிக்கப்பட்ட பாட்டில்கள், நோட்டுப் புத்தகங்கள், பேனா, பை போன்ற பொருள்கள் அடங்கும்.
இதுபோல கார்ப்பரேட் நிறுவனங்களில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சி களின்போது பணியாளர்களுக்குப் பரிசுகள் அளிக்கப்படுகின்றன. பெரு நிறுவனங்களின் தேவைக்கேற்ப ‘பர்சனலைஸ்டு’ எனப்படும் தனிநபருக் கேற்பப் பொருள்களைத் தயார் செய்து விநியோகம் செய்வதே ‘கார்ப்பரேட் கிஃப்டிங்’.
இளம் தொழில்முனைவோராகத் தனது பயணம் தொடங்கியதைப் பற்றிப் பகிர்ந்துகொண்டார் பிரேம். “இளங்கலை பி.காம். படிப்பும், முதுகலை சமூகத் தொழில் முனைவு படிப்பும் படித்திருக்கிறேன். நானும் என்னுடைய தோழி சிம்ரனும் சேர்ந்து ரூ. 5,000 மதிப்பில் முதல் புராஜெக்ட்டை எடுத்தோம்.
கல்லூரிப் படிப்பின்போது எடுத்த அந்த புராஜெக்ட்டை அடுத்து, நிறுவனம் ஒன்றைத் தொடங்கி மூன்று ஆண்டுகள் ஆகிவிட்டன. இன்று தமிழ்நாடு கடந்து பல மாநிலங்களில் ஆண்டுக்குச் சில கோடி ரூபாய் மதிப்பில் தொழில் செய்துவருகிறோம். ஆறு பேர் கொண்ட அணியாக நிறுவனமும் வளர்ச்சி அடைந்திருக்கிறது.
பிரேம்
ஒரு நிறுவனத்தின் எதிர்பார்ப்பு தேவைக்கு ஏற்ப பொருள்களைத் தயார் செய்து, அவர்களுக்கு டெலிவரி செய்கிறோம். பொருள் தயாரிப்பவரிடம் நேரடியாகத் தொடர்பில் இருப்பதாலும் தொடர்ந்து பணியாற்றுவதாலும் நிறுவனங்களுக்கு வைக்கப்படும் விலையைவிடக் குறைவான விலைக்கு எங்களால் பொருள்களை வாங்கித் தர முடிகிறது. ஒரு நிகழ்ச்சிக்குத் தேவையான பரிசுப் பொருள்களை முழுமையான பேக்கேஜாக டெலிவரி செய்கிறோம்” என்று விளக்குகிறார்.
என்ன செய்யலாம்?
கிரீன் ரூட்ஸ் நிறுவனத்தைப் பொறுத்தவரை பி-டு-பி மாடலைத்தான் (Business to Business) செயல் படுத்தியுள்ளார் பிரேம். இன்னும் பி-டு-சி (Business to Customer) தொடங்கவில்லை. குறைந்தபட்சம் 100 ஆர்டர்கள் உள்ள புராஜெக்ட்டைதான் இவர் எடுக்கிறார். 100 முதல் 3 லட்சம் ஆர்டர்கள்வரை டெலிவரி செய்துள்ளாராம்.
சமூக வலைத்தளங்கள் வழியே ஏராளமான பி-டு-சி தொழில்கள் வளர்ந்துவரும் இச்சூழலில், கார்ப்ப ரேட் நிறுவனங்களுடனான பி-டு-பி தொழில் நிலைத்து நிற்பது எப்படி?
“தொழில் தொடங்கிய ஆரம்ப காலத்தில் சென்னையில் ஒவ்வொரு கார்ப்பரேட் நிறுவனத்தின் வாசலையும் தட்டி புராஜெக்ட் கேட்டிருக்கிறோம். கிடைத்த வாய்ப்பைத் தவற விடாமல், புராஜெக்ட் எடுத்துப் பணி யாற்றினோம்.
தொழில் ஓரளவு அடுத்த கட்டத்தை எட்டியபோது ‘ரெஃபரல்ஸ்’ (Referrals) பெரும் உதவி யாக இருந்தன. ஒரு கிளைன்ட்டுக்கு உங்களின் பணி மனநிறைவைத் தந்துவிட்டது என்றால், அடுத்து தனக்குத் தெரிந்த சுற்றுவட்டாரத்தில் உங்களை அவர் ‘ரெஃபர்’ செய்வார். அப்படி வாய் வழியாகப் பரிந்துரை செய்யப்படும் புராஜெக்ட்டுகளைக் கெட்டியாகப் பிடித்துக்கொள்ள வேண்டும்.
தரத்தில் மட்டும் சமரசம் செய்துகொள்ளக் கூடாது. பி-டு-பி அல்லது பி-டு-சி எதுவாக இருந்தாலும் சந்தையின் அளவைப் புரிந்துகொண்டு வியாபாரம் செய்ய வேண்டும். இரண்டுக்குமான வாடிக்கையாளர் வேறு என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
எனக்கும் பி-டு-சி தொடங்க வேண்டுமென்கிற எண்ணம் இருந்தது. கார்ப்பரேட் கிப்ஃடிங்கைப் போல வாடிக்கையாளர்களுக்கு நேரடியாக டெலிவரி செய்யக்கூடிய ‘ரிட்டன் கிப்ஃட்’ தொழிலைத் தொடங்கலாம் என்கிற திட்டம் உள்ளது.
சந்தை மாறிக்கொண்டே இருப்பதால், இதுபோன்ற எண்ணங்களைத் தவிர்க்க முடிவதில்லை என்கிறபோதும், எதைச் செய்யப் போகிறோம் எதைச் செய்யக் கூடாது என்பதில் தெளிவு இருந்தால்தான் தொழிலுக்கு நல்லது.
தொழில் தொடங்கிய உடனே லாபம் பார்த்துவிடலாம் என்று நினைக்கக் கூடாது. செய்யும் தொழிலைத் திறம்பட இடைவெளி இல்லாமல் செய்ய வேண்டும். இதுவே நீண்ட காலத்துக்குத் தொழிலை நடத்த உதவும். மற்றவையெல்லாம் தன்னால் கைக்கூடி வரும்.” என்று தொழில் ரகசியத்தைப் பகிர்ந்துகொண்டார்.
கிரீன் ரூட்ஸ் இணையதளம்: thegreenroots.in
- karthiga.rajendran@hindutamil.co.in