ஆழ்கடலை ஆராயும் தமிழ்நாட்டு விஞ்ஞானி - வேலைன்னு வந்துட்டா... | அத்தியாயம் 30

ஆழ்கடலை ஆராயும் தமிழ்நாட்டு விஞ்ஞானி - வேலைன்னு வந்துட்டா... | அத்தியாயம் 30
Updated on
2 min read

கடல்சார் அறிவியல் ஆராய்ச்சியில் இந்தியா ஒரு புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. நாட்டின் முதல் ஆழ்கடல் மனிதப் பயணத் திட்டமான 'சமுத்ரயான்' 2026ஆம் ஆண்டில் செயல்படுத்தப்பட உள்ளது.

இந்தியாவிலேயே வடிவமைக்கப்பட்ட 'மத்ஸ்யா 6000' எனும் நீர்மூழ்கிக் கலம், மூன்று நபர்களை 6,000 மீட்டர் ஆழத்துக்கு அழைத்துச் செல்லவுள்ளது. இதன் மூலம் அமெரிக்கா, ரஷ்யா, ஜப்பான், பிரான்ஸ், சீனா ஆகிய நாடுகளுக்கு அடுத்தபடியாக இந்தத் தொழில்நுட்பத்தைப் பெற்ற உலகின் ஆறாவது நாடாக இந்தியா வரலாற்றுச் சாதனை படைக்கும்.

சென்னையில் உள்ள தேசிய கடல்சார் தொழில்நுட்ப நிறுவனம் (NIOT), இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்துடன் இணைந்து இந்த நீர்மூழ்கிக் கலத்தை உருவாக்கியுள்ளது. இது விண்வெளி கடல்சார் அறிவியலின் அபூர்வ சங்கமமாகப் பார்க்கப்படுகிறது.

<div class="paragraphs"><p>சி.ஆர். தீபக்</p></div>

சி.ஆர். தீபக்

தமிழ்நாட்டின் பெருமை

திறமையான விஞ்ஞானிகள், தொழில்நுட்ப வல்லுநர்களின் நீண்டகால அர்ப்பணிப்பின் பலனாக இந்தியாவின் ஆழ்கடல் ஆராய்ச்சி முன்னேற்றம், அடைந்துள்ளது. கடலடித் தாதுக்கள் ஆய்வு, கடல்சார் சுரங்கத் தொழில்நுட்பம், ஆழ்கடல் இயந்திரங்கள் போன்ற துறைகளில் தொடர்ந்து செய்யப்பட்ட முயற்சிகள் இந்த வளர்ச்சிக்கு வலுவான அடித்தளமாக அமைந்துள்ளன.

இத்தகைய முன்னேற்றப் பாதையில், தமிழ்நாட்டைச் சேர்ந்த விஞ்ஞானிகளும் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கி வருகின்றனர். அந்த வரிசையில், தனித்துவமான இடத்தைப் பெற்றவர் முனைவர் சி.ஆர். தீபக்.

அண்ணா பல்கலைக்கழகத்தின் கிண்டி பொறியியல் கல்லூரியில் சுரங்கவியல் பொறியியல் பயின்ற இவர், சென்னை இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் இயந்திரப் பொறியியலில் முதுகலைப் பட்டம் பெற்றார்.

தற்போது சென்னையில் உள்ள தேசிய கடல்சார் தொழில்நுட்ப நிறுவனத்தின் ஆழ்கடல் சுரங்கப் பிரிவின் தலைவராகப் பணியாற்றி வருகிறார். சுரங்கவியல், கடல் பொறியியல் ஆகிய இரண்டு வெவ்வேறு துறைகளிலும் இணையற்ற நிபுணத்துவம் பெற்றிருப்பது இவரது தனிச்சிறப்பு.

2001ஆம் ஆண்டு முதல் சர்வதேச அளவில் புகழ்பெற்ற ‘ஸ்பிரிங்கர்' (Springer) போன்ற அறிவியல் வெளியீடுகளிலும், ஆழ்கடல் சுரங்கக் கருத்தரங்குகளிலும் இவரது ஆய்வுக் கட்டுரைகள் தொடர்ந்து வெளியாகிச் சர்வதேச கவனத்தை ஈர்த்து வருகின்றன.

இந்தியாவின் பல்வகை உலோகக் கனிமத் தொகுப்புகளைச் (Polymetallic Nodules) சேகரிக்கும் தொழில்நுட்பத்தை வடிவமைத்த முதன்மைச் சிற்பிகளில் இவரும் ஒருவர்.

<div class="paragraphs"><p>சமுத்ரயான்</p></div>

சமுத்ரயான்

2008ஆம் ஆண்டு சென்னையில் ஐக்கிய நாடுகளின் சர்வதேச கடல்சார் ஆணையம் (ISA) நடத்திய மாநாட்டில், இந்தியாவின் ஆழ்கடல் திட்டங்களை உலக அரங்கிற்கு இவர் எடுத்துரைத்தார்.

அப்போது சர்வதேச ஊடகங்களுக்கு இவர் அளித்த பேட்டியில், "நாட்டின் உலோகத் தேவைகளைப் பூர்த்தி செய்ய, ஆழ்கடலில் கிடைக்கும் இந்தக் கனிமங்கள் ஒரு மிகச்சிறந்த தீர்வாகும்" என்று குறிப்பிட்டது, உலக அளவில் இந்தியாவின் கடல்சார் கொள்கைக்கு ஒரு புதிய அங்கீகாரத்தைப் பெற்றுத் தந்தது.

முனைவர் தீபக் தலைமையி லான குழு உருவாக்கிய 'வராகா-1' என்கிற சுரங்க இயந்திரம், கடலுக்கு அடியில் 5,270 மீட்டர் ஆழத்தில் கனிமங்களைச் சேகரித்து மாபெரும் வெற்றி பெற்றது.

இத்தகைய அபாரமான ஆழத்தில், தொழில்நுட்ப வல்லரசாகக் கருதப்படும் சீனா கூட முழுமையாகச் சாதிக்காத ஒன்றை, முனைவர் தீபக்கின் பங்களிப்புடன் இந்தியா நிகழ்த்திக் காட்டியுள்ளது.

ஆழ்கடல் ஆராய்ச்சி வளர்ந்து வரும் துறைகளில் ஒன்று. இத்துறையில் ஆர்வமுள்ள மாணவர்களுக்கு தற்போது ஏராளமான வாய்ப்புகள் காத்திருக்கின்றன.

கடின உழைப்பும் தேடலும் இருந்தால் முனைவர் தீபக் நிகழ்த்தியது போன்ற ஒரு சாதனையை நீங்களும் நிகழ்த்த முடியும். நாட்டின் வளர்ச்சிக்காகக் கடலடியில் ஆய்வு செய்யும் இந்த விஞ்ஞானிகளின் பணி, உலக அளவில் இந்திய அறிவியலின் பெருமையை உரக்கச் சொல்கிறது.

- கட்டுரையாளர், உயர் கல்வி ஆலோசகர்; ticf@indiacollegefinder.org

ஆழ்கடலை ஆராயும் தமிழ்நாட்டு விஞ்ஞானி - வேலைன்னு வந்துட்டா... | அத்தியாயம் 30
கடலடியில் ஒளிந்திருக்கும் முத்தான வாய்ப்புகள்! - வேலைன்னு வந்துட்டா... | அத்தியாயம் 29

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in