கரோனா காலத்தில் வளர்ந்த தொழில்! | இளம் தொழில்முனைவோர்

கரோனா காலத்தில் வளர்ந்த தொழில்! | இளம் தொழில்முனைவோர்
Updated on: 
2 min read

‘எது பண்ணாலும் பிளான் பண்ணிப் பண்ணணும்’ என்பது பிரபல நகைச்சுவை வசனம். பயணங்களுக்கோ இது அத்தி யாவசியம். அண்மைக் காலமாக உலக அளவில் கவனத்தை ஈர்த்துவருகிறது சுற்றுலாத் துறை.

அதில் புதுமைகளைப் புகுத்தி, ‘டூர் ஆன்’ (Tour On) நிறுவனத்தை வெற்றிகரமாக நடத்திவருகிறார் தஞ்சாவூரைச் சேர்ந்த விகாஷ். சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு பெங்களூரு, கோவை எனத் தனது நிறுவனத்தின் கிளைகளை விரிவுபடுத்தியி ருக்கும் விகாஷின் பயணம் சுவாரசியமானது.

தொழில்முனைவு கனவு

சிறு வயது முதலே சொந்தமாகத் தொழில் தொடங்க வேண்டும் என்பது விகாஷின் கனவு. பெற்றோருடன் இணைந்து தனியார் நிறுவனத்தின் வணிக முதலீட்டு நிகழ்ச்சிகளுக்குச் செல்வது அவரது வழக்கம். அங்கு தொழில் தொடங்குபவர்கள் தங்களது யோசனைகளை முதலீட்டாளர்களிடம் முன்வைக்கும் விதம் உள்ளிட்டவற்றைக் கவனித்து வந்திருக்கிறார்.

என்கிறபோதும் பெற்றோரின் விருப்பத்துக்காகப் பொறியியல் படிப்பை முடித்துவிட்டுத் தகவல் தொழில்நுட்பத் துறையில் சில ஆண்டுகள் பணியாற்றி யுள்ளார். வேலையில் இருந்தவாறே, பயண நிறுவனத்தைத் தொடங்கி அதில் கவனம் செலுத்தத் தொடங்கினார்.

ஒரே ஆண்டில் குடும்பத்தினரின் நம்பிக்கையைப் பெற்று 2019ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து தொழில் முனைவில் மட்டுமே ஈடுபடத் தொடங்கி யுள்ளார். “பணம் சம்பாதிப்பதற்காக மட்டும் ஒரு தொழிலைத் தொடங்க முடியாது. அது நமக்கென ஒரு தனி அடையாளத்தைத் தரும். அதுவே தொழில்முனைவின் சிறப்பு” என்கிறார் விகாஷ்.

கரோனாவுக்குப் பிறகு

2020இல் கரோனா பெருந்தொற்று உலகையே முடக்கிப்போட்டது. சுற்றுலாத் துறையும் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. ஆனால், நிறுவனத்தை மறுசீரமைக்கவும் அதன் செயல்பாடுகளை மேம்படுத்தவும் கிடைத்த வாய்ப்பாக அந்தக் காலக்கட்டத்தை விகாஷ் பயன்படுத்திக்கொண்டார்.

“பொதுவாக வியாபாரத்தில் ‘பிட் ஸ்டாப்’ (Pit Stop) என்பது முக்கியமானது. ஒரு திருப்புமுனை என வைத்துக்கொள்ளலாம். அப்படித்தான் கரோனா காலம் எனக்கு அமைந்தது. அந்தக் காலக்கட்டத்தில் எனக்கு நல்லது நடந்தது என்றால் நம்ப முடிகிறதா? கரோனா ஊரடங்கின்போது கிடைத்த ஆறு மாதங்களைப் பயனுள்ளதாக மாற்றிக்கொண்டேன்.

ஒரு பயண நிறுவனமாக பிசினஸ் மேற்கொள்ள 18 நாடுகளின் சான்றிதழ்களைப் பெற்றதுடன், நிறுவனத்தின் இணையத்தளத்தை உருவாக் கினோம். இந்த முயற்சிகளில் எனக்குத் தெரிந்த இரண்டு இளம் பொறியியல் பட்டதாரிகள் உதவினார்கள்.

கரோனாவுக்குப் பிறகு சுற்றுலாத் துறை வேகமாக வளரத் தொடங்கியது. நீண்ட நாள்கள் வீடுகளிலேயே முடங்கியிருந்த மக்கள், வெளியிடங்களுக்குச் செல்லவும் புதிய இடங்களைச் சுற்றிப்பார்க்கவும் ஆர்வம் காட்டினார்கள்.

நிறுவனத்தின் தொழில்நுட்பக் கட்டமைப்பையும் செயல்பாடு களையும் ஏற்கெனவே மேம்படுத்தியிருந்தது பெரும் பலமாக அமைந்தது” என்கிறார் விகாஷ்.

தனித்துவம்

வாடிக்கையாளர்களின் விருப்பத்துக்கு ஏற்பப் பயணத் திட்டங்களை உருவாக்கு வதுடன், தொழில்நுட்ப வளர்ச்சிக்கு மத்தியிலும் மனிதத் தொடர்பின் முக்கியத் துவத்தை வலியுறுத்துகிறார் விகாஷ்.

“ஏற்கெனவே தயாராக இருக்கும் டூர் பேக்கேஜ்களை வழங்குவதற்குப் பதிலாக, வாடிக்கையாளர்களின் விருப்பங்களையும் தேவைகளையும் கேட்டறிந்து, அதற்கேற்ப பயணத் திட்டத்தை உருவாக்குவதே ‘டூர் ஆன்’ நிறுவனத்தின் சிறப்பம்சம்.

இன்று செயற்கை நுண்ணறிவு (ஏஐ) மூலம் பயணத் திட்டங்களை உருவாக்கலாம். இடங்கள், தங்குமிடங்கள், போக்குவரத்து என அனைத்தையும் திட்டமிட முடியும்.

ஆனால், ஒரு பயணியின் தனிப்பட்ட விருப்பங்களையும் எதிர்பார்ப்புகளையும் புரிந்துகொண்டு, அவருக்கான அனுப வத்தை உருவாக்குவதற்கு மனிதத் தொடர்பு அவசியம்.

தொழில்நுட்பம் பயணத்தைத் திட்டமிட உதவும். ஆனால், அந்தப் பயணத்தைச் சிறந்த அனுபவமாக மாற்ற மனிதர்களின் பங்களிப்பு தேவை.

எடுத்துக்காட்டாக, கேரளப் பயணம் என்றால் வழக்கமான சுற்றுலாத் தலங்களை மட்டும் பட்டியலிடாமல் வர்கலா கடற்கரை, குமரகத்தின் கழிமுகப் பகுதிகள், மூணாறின் மலைப்பகுதிகள் என வெவ்வேறு நிலப்பரப்புகளை இணைக்கலாம்.

இப்படிப்பட்ட பயணத்தைத் திட்டமிட வழிகாட்டுவதே பயண நிறுவனத்தின் பொறுப்பு” என்று விளக்குகிறார் விகாஷ். சுற்றுலாத் துறையில் தொழில்முனைவுக்கு மட்டுமன்றி, வேலைவாய்ப்புகளுக்கும் நிறைய வாய்ப்புகள் உள்ளன.

“டிராவல் கன்சல்டன்ட், ஆபரேஷன்ஸ், புக்கிங், கன்டென்ட், மனிதவள அதிகாரி, கிரியேட் டிவ் டிசைன், அக்கவுன்ட்ஸ், கஸ்டமர் ரிலேஷன்ஸ் எனப் பல்வேறு பிரிவுகளில் வேலைவாய்ப்புகள் உள்ளன.

இப்படி எங்கள் நிறுவனத்தில் ஒவ்வொரு பிரிவுக்கும் தனித்தனியாகப் பணியாளர்கள் உள்ளனர். அனைவரின் பங்களிப்பால்தான் ஒரு பயணத்தை என்றென்றைக்கும் நினைவுகூரும் விதமாகச் சிறப்பாகத் திட்டமிட முடிகிறது” என்கிறார் விகாஷ்.

பயண நிறுவனத்தின் இன்ஸ்டாகிராம் பக்கம்: instagram.com/touron.in

- தொடர்புக்கு: karthiga.rajendran@hindutamil.co.in

கரோனா காலத்தில் வளர்ந்த தொழில்! | இளம் தொழில்முனைவோர்
உயிர் வேதிப்பொருள்களின் இடது விருப்பம்! | நோபல் பரிசுகள் 2026

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in