

இன்ஜினீயரிங் படிப்பு, தொழில் நுட்பத் துறையில் கார்ப்பரேட் வேலை எனப் பரபரப்பான பணிச் சூழலில் இருந்தாலும் தனக்குப் பிடித்த கலையைத் தொடர்ந்து செய்து வருகிறார் சென்னையைச் சேர்ந்த ஐஷ்வர்யா அசோக்.
பகுதி நேரமாகத் தொடங்கிய கலைப் பயணத்தை, இணையவழியில் கலைப் பொருள்களை விற்பனை செய்யும் தொழிலாக வளர்த்திருக்கிறார்.
‘ரூ டே ஆர்ட்ஸ்’ (Rue des arts) எனும் பெயரில் கலைப் பொருள்களை விற்பனை செய்யும் தொழிலை நிர்வகிப்பது மட்டு மல்லாமல் இசை, பாட்காஸ்ட், கலை நடை (art walk) எனப் பல்வேறு சுவாரசியமான விஷ யங்களிலும் ஈடுபட்டுவருகிறார் இவர்.
முழுநேர கார்ப்பரேட் வேலைக்கு மத்தியில் இத்தனை விஷயங்களையும் எப்படிச் செய்கிறார் என்றால், ஆர்வம்தான் அதற்கு முக்கியம் என்கிறார் இந்த 90ஸ் கிட்.
‘ரூ டே ஆர்ட்ஸ்’ என்றால்?
பிரெஞ்சு மொழியில் ‘கலை களின் தெரு’ எனப் பொருள் தரும் ‘ரூ டே ஆர்ட்ஸ்’ என்பதையே தனது பிராண்டின் பெயராகத் தேர்ந்தெடுத்திருக்கிறார் ஐஷ்வர்யா.
2019-2020 காலக் கட்டத்தில் தொடங்கிய கலைத் தொழிலைக் கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தீவிரமாகச் செயல்படுத்தி வருகிறார்.
முதலில் பிறருக்குப் பரிசளிப்பதற்காகக் கலைப் பொருள்களை உருவாக்கத் தொடங்கியவர், பின்னர் அதையே தொழிலாக மாற்றியிருக்கிறார். ஐஷ்வர்யா வரையும் பெரும்பாலான ஓவியங்களில் ஏதாவது ஓர் ஊரும் அந்த ஊர் சொல்லும் கதைகளும் முக்கிய இடம்பிடிக்கின்றன.
கலை நடை செல்வதும், தான் பார்க்கும் இடங்களை ஓவியங்களாகக் கைப்பட வரைவதும் அவருக்கு மிகவும் பிடித்தமானவை. சென்னை, கோவா, கொல்கத்தா, ஜோத்பூர், கொச்சி எனப் பல்வேறு நகரங்களின் தனித்துவத்தையும் அங்குள்ள வாழ்க்கை முறையையும் தனது ஓவியங்களில் பதிவு செய்திருக்கிறார். அந்த ஓவியங்கள் ஒரு கதை சொல்லல் இருப்பது போல அமைந்திருப்பது தனிச்சிறப்பு.
“சிறு வயதில் தாத்தாவோடு ஊர் சுற்றிய போது அவர் நிறையக் கதைகளைச் சொல்வார். அதில் இருந்து கதையைக் கேட்கவும் சொல்லவும் எனக்கும் ஆர்வம் வந்தது. ஏதாவது ஓர் இடத்துக்கு அல்லது ஊருக்குப் பயணம் செய்தால், அங்கு பார்ப்பவற்றைக் கைப்பட வரைந்துவிடுவேன்.
அந்த ஓவியங்களை வைத்து ஆர்ட் பிரிண்ட், போஸ்ட் கார்டு, புக் மார்க், நோட்டுப் புத்தகம், டிராவல் டேக், களிமண்ணால் செய்யப்பட்ட மேக்னட் எனப் பல்வேறு பொருள்களைத் தயாரிக்கிறேன். அவற்றை விற்பனையும் செய்கிறேன்” என்கிறார்.
படிப்படியாக வளர்ச்சி
தொழில் தொடங்கிய காலத்திலிருந்து தனது பிராண்டை மெல்ல மெல்ல வளர்த்து வருகிறார் ஐஷ்வர்யா. கலைப் பொருள்களைத் தயாரிக்கும்போது தரத்தில் எந்தவித சமரசமும் இருக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருப்பதாகவும் சொல்கிறார்.
கார்ப்பரேட் வேலையையும் கலைத் தொழிலையும் எப்படிச் சமாளிக்கிறார்? “இரண்டு வேலைகளையும் பேலன்ஸ் செய்வதற்கான மந்திரம் ‘ஒரு நேரத்தில் ஒரு வேலை மட்டுமே’ (ஒன் அட் எ டைம்) என்பதுதான்.
ஒரு வேலையைச் செய்யும்போது அதில் மட்டும் முழு ஈடுபாடும் கவனமும் இருக்க வேண்டும். பல விஷயங்களை ஒரே நேரத்தில் செய்து சொதப்புவதைவிட, அந்தந்த நேரத்தில் ஒரு விஷயத்தில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. அப்படிச் செய்யும்போது வேலையின் தரமும் சிறப்பாக இருக்கும். செய்யும் வேலையையும் சரியாகச் செய்து முடிக்க முடியும்” என்கிறார் ஐஷ்வர்யா.
தனித்துவமான டிசைன்
கலைப் பொருள்களை வாடிக்கையாளர்கள் நேரடியாக வாங்குவதற்காகத் தனியாக இணையதளத்தையும் உருவாக்கியிருக்கிறார் ஐஷ்வர்யா.
இணையத்தளத்தை வடிவமைத்தது முதல் ஒவ்வொரு பொருளின் விவரங்களையும் பதிவிடுவதுவரை அனைத்தையும் அவரே கவனித்துக்கொள்கிறார்.
தனது கலைப் படைப்புகள் அனுமதியின்றி பிறர் பயன்படுத்து வதைத் தவிர்க்கும் வகையில், இணைய தளத்தின் அனைத்துப் பக்கங்களிலும் தனது பிராண்டின் லோகோ இடம்பெறுமாறு வடிவமைத்திருக்கிறார்.
“தொழில்நுட்பத் துறையில் பணியாற்று வதால், காப்புரிமையின் முக்கியத்துவம் எனக்குத் தெரியும். அதேநேரத்தில், ஒருகலைஞராகவும் இருப்பதால், என்னுடைய படைப்புகளும் டிசைன்களும் களவாடப்படாமல் இருப்பதற்காக இப்படி வடிவமைத்தேன்” என்கிறார் அவர்.
ஐஷ்வர்யாவின் இணையவழிக் கடையில் புதுவரவாக ‘லினோ’ (Lino) அட்டைப்பட நோட்டுப் புத்தகங்கள் இடம்பெற்றுள்ளன. லினோ என்பது லினோலியம் எனப்படும் மென்மையான தாளில் டிசைன்களைச் செதுக்கி, அதில் மையைத் தடவி, அந்த வடிவத்தை நோட்டுப் புத்தகம் போன்றவற்றில் அச்சிடும் கலை நுட்பம்.
கலை மீதான ஆர்வத்தில் தொடங்கிய இந்தப் பயணத்தில், புதுப்புது டிசைன்களையும் பொருள்களையும் அறிமுகப்படுத்தி பிராண்டைத் தொடர்ந்து வளர்ப்பதே தனது திட்டம் என்கிறார்.
'ரூ டே ஆர்ட்ஸ்’ இன்ஸ்டாகிராம் பக்கம்: instagram.com/rue.des.arts/
- karthiga.rajendran@hindutamil.co.in