

ஜூன் 24: பத்து நாட்களுக்கு மேலாக நடந்த ஈரான் - இஸ்ரேல் இடையேயான போர் முடிவுக்கு வந்தது. இரு நாடுகளும் போர் நிறுத்தத்தை அறிவித்துள்ளன. இரு நாடுகளும் எக்காரணத்தைக் கொண்டும் இனி தாக்குதலில் ஈடுபடக் கூடாது என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் எச்சரித்தார்.
ஜூன் 24: திருப்பரங்குன்றம் மலை தொடர்பான வழக்கில் இரண்டு நீதிபதிகள் கொண்ட உயர் நீதிமன்ற மதுரை அமர்வு மாறுபட்ட தீர்ப்பை வழங்கியது. இதனால், உரிய முடிவு எடுக்க வழக்கு தலைமை நீதிபதிக்கு பரிந்துரை செய்யப்பட்டது.
ஜூன் 24: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் திலீப் தோஷி (77) உடல்நலக் குறைவால் லண்டனில் காலமானார்.
ஜூன் 25: இந்திய விண்வெளி வீரர் ஷுபன்ஷு சுக்லா உள்ளிட்ட 4 வீரர்கள் அடங்கிய குழு ஆய்வுப் பணிக்காக டிராகன் விண்கலத்தில் அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள நாசாவின் கென்னடி விண்வெளி மையத்திலிருந்து சர்வதேச விண்வெளி மையத்துக்குப் புறப்பட்டு சென்றது.
ஜூன் 25: செக் குடியரசின் ஆஸ்ட்ராவா நகரில் நடைபெற்ற கோல்டன் ஸ்பைக் தடகளப் போட்டியில் ஆடவருக்கான ஈட்டி எறிதலில் இந்தியாவின் நட்சத்திர வீரர் நீரஜ் சோப்ரா 85.29 மீட்டர் தூரம் எறிந்து, முதலிடம் பிடித்து பட்டம் வென்றார்.
ஜூன் 26: டிராகன் விண்கலம் மூலம் 28 மணி நேரப் பயணத்துக்குப் பிறகு சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு இந்திய வீரர் ஷுபன்ஷு சென்றடைந்தார்.
ஜூன் 26: புதிதாக வெளியாகும் திரைப்படங்களை முதல் மூன்று நாட்களுக்கு விமர்சனம் செய்ய தடை கோருவது பேச்சு மற்றும் கருத்து சுதந்திரத்துக்கு எதிரானது என்று தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம், இது தொடர்பாக தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்தது.
ஜூன் 26: பொது இடங்களில் உள்ள கட்சிக் கொடிக் கம்பங்களை அகற்றும் விவகாரம் தொடர்பான வழக்கு கூடுதல் நீதிபதிகள் அமர்வு விசாரணைக்கு சென்னை உயர் நீதிமன்றம் மதுரை அமர்வு பரிந்துரை செய்தது.
ஜூன் 26: பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்குக் கண்டனம் தெரிவிக்காததால் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) கூட்டறிக்கையில் கையெழுத்திட இந்தியா மறுத்தது.
ஜூன் 26: தேர்தலில் போட்டியிடாத 345 அரசியல் கட்சிகளை நீக்கி இந்தியத் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்தது.
ஜூன் 26: நாடாளுமன்றத்தைவிட அரசியல் சாசனமே உயர்ந்தது என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் கருத்து தெரிவித்தார்.
ஜூன் 27: போதைப் பொருள் பயன்படுத்திய வழக்கில் நடிகர் ஸ்ரீகாந்தைத் தொடர்ந்து நடிகர் கிருஷ்ணா கைது செய்யப்பட்டார்.
ஜூன் 28: தமிழகத்தில் ஒரு தேர்தலில்கூட போட்டியிடாத பதிவு செய்யப்பட்ட 24 அரசியல் கட்சிகளுக்கு முதல் கட்டமாக தேர்தல் துறை நோட்டீஸ் அனுப்பியது.
ஜூன் 28: உஸ்பெகிஸ்தான் மாஸ்டர்ஸ் கோப்பை செஸ் போட்டியில் இந்திய கிராண்ட் மாஸ்டர் ஆர். பிரக்ஞானந்தா சாம்பியன் பட்டம் வென்றார். இந்த வெற்றியின் மூலம் சர்வதேச செஸ் தரவரிசையில் டி.குகேஷை பின்னுக்குத் தள்ளி 4ஆவது இடத்துக்கு பிரக்ஞானந்தா முன்னேறினார். மேலும் முதல் 5 இடங்களில் தமிழகத்தைச் சேர்ந்த இரண்டு வீரர்கள் இடம் பிடித்து சாதித்துள்ளனர்.
ஜூன் 28: இந்திய உளவுத் துறையான ரா அமைப்பின் தலைவராக பராக் ஜெயின் நியமிக்கப்பட்டார்.
ஜூன் 30: டாஸ்மாக் மதுக்கடைகளை அரசே நடத்த வேண்டிய அவசியம் என்ன என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு கேள்வி எழுப்பியது.
ஜூன் 30: தமிழ்நாட்டில் முதல் முறையாக சென்னையில் 120 மின்சாரப் பேருந்து சேவைகளை முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
தொகுப்பு: மிது