Last Updated : 27 May, 2025 03:28 PM

 

Published : 27 May 2025 03:28 PM
Last Updated : 27 May 2025 03:28 PM

நிதி ஆயோக் நிர்வாகக் குழு கூட்டம் முதல் நார்வே செஸ் தொடர் வரை: சேதி தெரியுமா? @ மே 20 - ஜூன் 2

மே 20: நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் சட்டங்களில் நீதிமன்றங்கள் தலையிடுவதில்லை என்று வக்பு திருத்த சட்டம் தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் கருத்து தெரிவித்தார்.

மே 20: சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே தனியார் கல் குவாரியில் பாறைகள் சரிந்து விழுந்து 5 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.

மே 21: துணைவேந்தர் நியமன அதிகாரத்தை ஆளுநரிடமிருந்து அரசுக்கு மாற்றும் தமிழக அரசின் சட்டங்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது.

மே 21: ஒருங்கிணைந்த கல்வி திட்டத்தின் கீழ் தமிழகத்துக்கு வழங்க வேண்டிய ரூ.2,152 கோடி நிதியை 6% வட்டியுடன் சேர்த்து குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் விடுவிக்க மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.

மே 21: சத்தீஸ்கரில் நாராயண்பூரில் பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் நக்சல் அமைப்பின் முக்கிய தலைவர் பசவராஜ் உள்பட 27 நக்சலைட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

மே 22: டாஸ்மாக்கில் ரூ.1000 கோடி முறைகேடு விவகாரத்தில் அமலாக்கத் துறை விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது. கூட்டாச்சி விதிமுறைகள், அனைத்து வரம்புகளையும் அமலாக்கத் துறை மீறியுள்ளதாக உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது.

மே 22: ‘ஹார்ட் லாம்ப்’ சிறுகதை தொகுப்புக்காக கன்னட எழுத்தாளர் பானு முஸ்தாக் சர்வதேச புக்கர் விருதை வென்றார். முதல் முறையாக சிறுகதைத் தொகுப்புக்காக புக்கர் விருது வழங்கப்பட்டுள்ளது.

மே 23: இந்தியாவுடனான போர் நிறுத்த ஒப்பந்தத்தில் உறுதியாக இருக்கிறோம் என்று பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

மே 24: டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக்கின் நிர்வாகக் குழு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பங்கேற்ற தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், மத்திய வருவாயிலிருந்து மாநிலங்களுக்கு வரி பகிர்வு பங்கை 50 சதவீதமாக உயர்த்த வேண்டும், கல்வி திட்ட நிதியை உடனே விடுவிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

மே 24: தமிழக அரசின் தலைமை காஜி முஃப்தி சலாவுதீன் முகமது அயூப் (84) உடல் நலக் குறைவால் சென்னையில் காலமானார்.

மே 25: மலேசிய மாஸ்டர்ஸ் பாட்மிண்டன் தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவி இறுதிப் போட்டியில் இந்தியாவின் கிராம்பி ஸ்ரீகாந்த் சீனாவின் லீ செப்பங்கிடம் 11-21, 9-21 என்கிற புள்ளிகள் கணக்கில் தோல்வியடைந்தார்.

மே 25: பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி முதல்வர்கள், துணை முதல்வர்கள் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது.

மே 25: கந்தகம் உள்பட அபாயகரமான ரசாயனங்களை கேரளாவின் விழிஞ்சம் துறைமுகத்திலிருந்து கொச்சிக்குப் புறப்பட்ட லைபீரியாவைச் சேர்ந்த சரக்குக் கப்பல் கொச்சி அருகே கடலில் மூழ்கியது. இக்கப்பலில் பணிபுரிந்த 24 பணியாளர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

மே 25: ஜப்பானை பின்னுக்குத் தள்ளி இந்திய பொருளாதாரம் உலகளவில் 4ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளதாக நிதி ஆயோக் தலைமை செயல் அதிகாரி பி.வி.ஆர். சுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.

மே 26: தமிழகத்தில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் ஜூன் 19இல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. திமுக எம்.பி.க்கள் எம். சண்முகம், முகமது அப்துல்லா, பி. வில்சன், பாமக எம்.பி. அன்புமணி ராமதாஸ், மதிமுக எம்.பி. வைகோ, அதிமுக எம்.பி. சந்திரசேகரன் ஆகியோரின் பதவிக் காலம் ஜூலை 24இல் முடிவடைகிறது.

மே 26: தென் கொரியாவின் குமி நகரில் 26ஆவது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி தொடங்கியது. ஆசிய கண்டத்தில் 43 நாடுகளைச் சேர்ந்த 2000 வீரர், வீராங்கனைகள் இதில் பங்கேற்றுள்ளனர். இந்தியாவிலிருந்து 59 பேர் பங்கேற்றுள்ளனர்.

மே 27: தமிழகத்தைச் சேர்ந்த தொழிலதிபர் நல்லி குப்புசாமி, பறையிசைக் கலைஞர் வேலு ஆசான், மிருதங்கக் கலைஞர் குருவாயூர் துரை, நடிகை ஷோபனா, புதுச்சேரியைச் சேர்ந்த தவில் இசைக் கலைஞர் தட்சிணாமூர்த்தி உள்பட 68 பேருக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பத்ம விருதுகளை வழங்கினார்.

மே 27: ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கையின்போது பாகிஸ்தானின் 72 ராணுவ நிலைகள் முழுவதுமாக அழிக்கப்பட்டன என்று எல்லைப் பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்) தெரிவித்தது.

மே 27: நார்வேயில் நடைபெற்ற கிளாசிக்கல் செஸ் போட்டியில் உலகின் முதல் நிலை வீரரான நார்வேயின் மேக்னஸ் கார்சல்ன் உலக சாம்பியனான இந்தியாவின் டி. குகேஷை வீழ்த்தினார்.

மே 28: அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் துன்புறுத்தல் வழக்கில் கைதான ஞானசேகரன் மீது சுமத்தப்பட்ட 11 பிரிவுகளின் கீழும் குற்றவாளி என்று சென்னை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

மே 28: மாநிலங்களவைத் தேர்தலில் திமுக வேட்பாளர்களாக பி.வில்சன், சிவலிங்கம், கவிஞர் சல்மா ஆகியோர் அறிவிக்கப்பட்டனர்.

மே 28: மாநிலங்களவைத் தேர்தலில் ஓரிடத்தை மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு திமுக ஒதுக்கியது. அந்த இடத்தில் மநீம தலைவர் கமலஹாசன் போட்டியிடுவார் என்று அக்கட்சி அறிவித்தது.

மே 28: சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஆர். ஸ்ரீராமை ராஜஸ்தானுக்கு இடமாற்றம் செய்ய உச்ச நீதிமன்ற கொலீஜியம் மத்திய அரசுக்குப் பரிந்துரை செய்தது.

மே 28: ஆசிய தடகள சாம்பியன்ஷிப் மும்முறை தாண்டுதல் பிரிவில் தமிழகத்தின் சித்ரவேல் வெள்ளிப் பதக்கம் வென்றார்.

மே 29: உலக நாடுகள் பலவற்றுக்கும் வர்த்தகத்துக்குக் கடுமையான வரி உயர்வை அறிவித்த அமெரிக்க அதிபர் ட்ரம்பின் உத்தரவுக்கு அமெரிக்க சர்வதேச வர்த்தக நீதிமன்றம் தடை விதித்தது.

மே 29: எய்ட்ஸ், ஆஸ்துமா, காசநோய், நீரிழிவு, உடல் பருமன் உள்பட 56 நோய்களைக் குணப்பத்துவதாக விளம்பரம் செய்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநில மருந்து உரிம அலுவலகம் எச்சரித்தது.

மே 29: தமிழக அரசின் 7ஆவது மாநில நிதி ஆணையம் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி கே. அலாவுதீன் தலைமையில் அமைக்கப்பட்டது.

மே 29: உடல்நலக் குறைவால் நடிகர் ராஜேஷ் (76) சென்னையில் காலமானார். தமிழ், தெலுங்கு, மலையாளம் என 150க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர்.

மே 29: ஆசிய தடகள சாம்பியன்ஷிப் 3,000 மீ ஸ்டீப்பிள்சேஸில் இந்தியாவின் அவினஷ் சேபிள்; மகளிருக்கான 4*400 மீ. தொடர் ஓட்டத்தில் ஜிஸ்னா மேத்யூ, ரூபால் சவுத்ரி, ரஜிதா, சுபா வெங்கடேசன் ஆகியோரை உள்ளடக்கிய அணி தங்கம் பதக்கம் வென்றது. மகளிருக்கான 100 மீ. தடை தாண்டும் ஓட்டத்தில் இந்தியாவின் ஜோதி யார்ராஜி தங்கம் வென்றார்.

மே 29: இந்திய ராணுவம் பிரம்மோஸ் ஏவுகணைகள் மூலம் பாகிஸ்தான் விமான தளங்கள் மீது தாக்குதல் நடத்தியது என்று அந்நாட்டு பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் ஒப்புக்கொண்டார்.

மே 30: தங்க நகை கடனுக்கான விதிமுறைகளை மறுபரிசீலனை செய்து, சிறு கடன் பெறுவோர் பயன்பெறும் வகையில் தளர்வுகளை அறிவிக்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கிக்கு மத்திய நிதி அமைச்சகம் அறிவுறுத்தியது.

மே 31: ஹைதராபாத்தில் நடைபெற்ற 72ஆவது உலக அழகி போட்டியின் இறுதிச் சுற்றில் தாய்லாந்தின் ஓபல் கச்சாதா சுவாங்ஸ்ரீ தேர்வானார்.

மே 31: தென் கொரியாவின் குமி நகரில் நடைபெற்ற ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா 8 தங்கம், 10 வெள்ளி, 6 வெண்கலப் பதக்கங்களுடன் இரண்டாமிடத்தைப் பிடித்தது. சீனா முதலிடத்தையும், ஜப்பான் மூன்றாமிடத்தையும் பிடித்தன.

ஜூன் 1: மாநிலங்களவை எம்.பி. தேர்தலில் அதிமுக சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் இன்பதுரை, தனபால் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர்.

ஜூன் 2: அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை குற்றவாளி ஞானசேகரனுக்கு 30 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து சென்னை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

ஜூன் 2: கர்நாடக உயர் நீதிமன்றத்திலிருந்து மாறுதலான ஹேமந்த் சந்தன்கவுடர் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாகப் பதவியேற்றார்.

ஜூன் 2: சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக ஆஸ்திரேலிய வீரர் கிளென் மேக்ஸ்வெல் அறிவித்தார்.

ஜூன் 2: நார்வே கிளாசிக்கல் சர்வதேச செஸ் தொடரின் 6ஆவது சுற்றுப் போட்டியில் நார்வே வீரர் மேக்னஸ் கார்ல்சனை இந்திய வீரர் டி.குகேஷ் வீழ்த்தினார்.

தொகுப்பு: மிது

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x