முன்னேற 10 திறன்கள்!

முன்னேற 10 திறன்கள்!
Updated on
1 min read

இன்றைய கார்ப்பரேட் தொழில் உலகில் பட்டப்படிப்போ மதிப்பெண்களோ மட்டுமே ஒருவரது வெற்றியைத் தீர்மானிப்பதில்லை.

எந்தத் துறையில் இருந்தாலும் சில அடிப்படைத் திறன்களை வளர்த்துக் கொள்வது மற்றவர்களிடமிருந்து உங்களைத் தனித்துவப் படுத்தி, வேலைவாய்ப்பிலும் தொழில் முன்னேற்றத்திலும் அடுத்தக் கட்டத்துக்கு அழைத்துச் செல்லும்.

பேச்சுத் திறன்

எண்ணங்களையும் கருத்துகளையும் தெளிவாகவும் சுருக்கமாகவும் நம்பிக்கையுடனும் வெளிப்படுத்தும் திறன் மிக அவசியம். நேர்முகத் தேர்வு,

திட்ட விளக்கவுரை, தலைமைப் பொறுப்பு எனப் பணியிடத்தின் அனைத்துச் சூழல்களிலும் இத்திறன் உங்களுக்குக் கைகொடுக்கும்.

கதை சொல்லும் திறன்

ஒரு சிக்கலான கருத்தையோ வணிகத் திட்டத்தையோ சுவாரசியமாகவும் கேட்பவரின் மனதில் பதியும் வகையிலும் எடுத்துரைக்கும் திறன் இது. ஊடகம், மார்க்கெட்டிங் உள்ளிட்ட பல துறைகளில் இது முக்கியமான திறனாகக் கருதப்படுகிறது.

தொழில்முறைத் தொடர்புகள்

நீங்கள் பணியாற்றும் துறை சார்ந்த நிபுணர்களுடன் நல்ல தொடர்புகளை வளர்த்துக்கொள்வதன் மூலம் புதிய வேலைவாய்ப்புகள், வழிகாட்டுதல், கற்றல் வாய்ப்புகளைப் பெறலாம்.

நிதி மேலாண்மை

வரவு-செலவுத் திட்டம், சேமிப்பு, முதலீடு, வரி, காப்பீடு போன்றவற்றைப் பற்றிய புரிதல் வருமானத்தைச் சரியாக நிர்வகிக்க உதவுவதோடு வாழ்க்கை முழுவதும் நிதி சார்ந்த முடிவுகளைத் திட்டமிட்டு எடுக்க உதவும்.

நேர மேலாண்மை

எந்தப் பணிக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்பதைத் திட்டமிட்டு, குறித்த காலத்துக்குள் முடிக்கும் திறன். இதனால் கடைசி நேரத்தில் ஏற்படும் தேவையில்லாத பதற்றத்தைத் தவிர்க்கலாம்.

பகுத்தறியும் திறன்

தகவல்களை ஆராய்ந்து, உண்மைத்தன்மையை மதிப்பீடு செய்து, சரியான முடிவுகளை எடுக்கும் திறன். எதிர்பாராத சிக்கல்களுக்குத் தீர்வு காணும் இத்திறன் பணியிடத்தில் மிகவும் அவசியமானது.

தொழில்நுட்பத் திறன்கள்

மின்னஞ்சல், இணையவழிக் கூட்டங்கள், டிஜிட்டல் தளங்கள் ஆகியவற்றைத் திறம்படக் கையாளும் திறன். எடுத்துக்காட்டாக, தரவுகளை ஒழுங்குபடுத்திப் பகுப்பாய்வு செய்து, துல்லியமான அறிக்கைகளைத் தயாரிக்க உதவும் ‘எக்ஸெல்' போன்ற மென்பொருள்களைக் கற்றுக்கொள்வது தொழில் வளர்ச்சிக்கு உதவும்.

குழுவாகச் செயல்படும் திறன்

அலுவலகலத்தில் சக ஊழியர்களுடன் இணைந்து பொதுவான இலக்கை அடையும் திறன். இன்றைய நிறுவனங்கள் தொழில்நுட்பத் திறன்களுக்கு இணையாகக் குழுவாகப் பணியாற்றும் திறனுக்கும் அதிக முக்கியத்துவம் அளிக்கின்றன.

ஏஐ பிராம்ப்ட் எழுதும் திறன்

செயற்கை நுண்ணறிவு (ஏஐ) கருவிகளிடம் சரியான கேள்விகளையும் உள்ளடக்கங்களையும் வழங்கும் திறன். குறைந்த நேரத்தில் சரியான முடிவுகளைப் பெறவும் உற்பத்தித்திறனை அதிகரிக்கவும் இது உதவுகிறது.

தொடர்ந்து கற்கும் திறன்

தொழில்நுட்பமும் உலகமும் வேகமாக மாறிவரும் நிலையில், புதிய திறன்களைத் தொடர்ந்து கற்றுக்கொள்வதும் மாற்றங்களுக்கு ஏற்பத் தகவமைத்துக் கொள்வதும் அவசியம்.

முன்னேற 10 திறன்கள்!
எளியோரைக் கவர்ந்த முதல்வர்!

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in