Last Updated : 08 Oct, 2016 01:12 PM

 

Published : 08 Oct 2016 01:12 PM
Last Updated : 08 Oct 2016 01:12 PM

சென்னை ரியல் எஸ்டேட்: வளரும் மேற்கு சென்னை

சென்னை நகருக்குள் வீடுகளுக்கான விலை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போகிறது. ரியல் எஸ்டேட் தொழில் சற்றே தொய்வடைந்துள்ள இந்தக் காலகட்டத்திலும் வீடு விலை குறைந்தபாடில்லை. அடையாறு, நுங்கம்பாக்கம் போன்ற சென்னையின் மையப் பகுதிகளுக்குத் தேவை அதிகமாக இருப்பதால் அங்கு சந்தை நிலவரத்தை விடக் கூடுதலாக வாங்கப் போட்டியே நடக்கிறது. இந்தச் சூழலில் நடுத்தர வர்க்கத்தினர் வீடு வாங்குவது சென்னை நகருக்குள் சாத்தியமில்லாத ஒன்றாக ஆகிவிட்டது எனலாம்.

ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு வரை புறநகர்போல் இருந்த சூளைமேடு, கோடம்பாக்கம், வடபழநி, மேற்கு மாம்பலம் போன்ற பகுதிகளெல்லாம் இப்போது சென்னையின் மையப் பகுதி போல் ஆகிவிட்டன. வீடுகளின் விலையும் விண்ணை முட்டி நிற்கிறது.

நடுத்தரமான வருமானம் பெறும் குடும்பங்களின் சொந்த வீட்டுக் கனவை கிரகித்துக்கொண்ட சில ரியல் எஸ்டேட் கட்டுமான நிறுவனங்கள் புறநகர்ப் பகுதிகளில் வீட்டுக் குடியிருப்புத் திட்டங்களை உருவாக்கத் தொடங்கிவிட்டன.

சென்னை ரியல் எஸ்டேட்டைப் பொறுத்தவரை வளம் மிக்க பகுதியாக அறியப்படுவது ஓ.எம்.ஆர். சாலை உள்ளிட்ட தென்சென்னைப் பகுதிதான். ஓ.எம்.ஆர். சாலை பெரும்பாலும் மென்பொருள் துறையினரை நம்பி உருவாக்கப்பட்ட வீட்டுக் குடியிருப்புத் திட்டங்கள் ஏராளம். அதுமட்டுமல்லாது பல்லாவரம் ரேடியல் சாலை பகுதிகளிலும் புதிய வீட்டுக் குடியிருப்புத் திட்டங்கள் சமீப காலத்தில் அதிகமாக உருவாக்கப்பட்டுவருகின்றன. ஜி.எஸ்.டி. சாலைப் பகுதியில் கூடுவாஞ்சேரிக்கு அருகில் உள்ள ஆதனூர், மாடம்பாக்கம் பகுதிகளிலும் நடுத்தர வர்க்கத்தினரைக் குறிவைத்து வீட்டுக் குடியிருப்புத் திட்டங்கள் உருவாக்கப்பட்டுவருகின்றன.

அதுபோல ஸ்ரீபெரும்புதூர், ஒரகடம், பூந்தமல்லி போன்ற மேற்கு சென்னையில் புறநகர்ப் பகுதிகளிலும் புதிய அடுக்குமாடிக் குடியிருப்புகள் நடுத்தர வர்க்கத்தினரின் வீட்டுத் தேவையைப் பூர்த்தி செய்யும் பொருட்டு உருவாக்கப்பட்டு வருகின்றன.

இப்போது இந்த மேற்குப் பகுதியில்தான் ரியல் எஸ்டேட் விற்பனை தொய்வில்லாமல் இருப்பதாக ரியல் எஸ்டேட் துறை ஆய்வுகள் சொல்கின்றன. மேலும் இங்கு அதிக அளவில் தொழிற்கூடங்கள் இருப்பதால் அத்தியாவசியமான அடிப்படை வசதிகளும் ஏற்கனவே உருவாகியுள்ளன. இவற்றை மையமாக வைத்து அடுக்குமாடிக் குடியிருப்புகள் பெருகிவருகின்றன. தவிர சென்னையின் மத்திய பகுதியில் பணியாற்றும் மற்ற நடுத்தர மக்களின் பட்ஜெட்டுக்கு ஏற்ற வகையில் இந்தப் பகுதியில் குடியிருப்புகள் இருப்பதால் அவர்களும் வீடு வாங்குவது பெருகிவருகிறது. தோராயமாக 30 லட்சத்துக்கு இரு படுக்கையறை வசதி கொண்ட வீடுகள் இந்தப் பகுதியில் விற்பனைக்கு உள்ளன.

ஸ்ரீபெரும்புதூர் சில ஆண்டுகளாகப் பெரிய வளர்ச்சியைப் பெற்றுவரும் பகுதி. பொதுவாகச் சில ஆண்டுகளுக்கு முன்பு ஓ.எம்.ஆர். சாலையில்தான் பெரிய வில்லா மற்றும் டவுன்ஷிப் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. ஆனால் இப்போது ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் பெரும் கட்டுமானங்கள் கவனம் செலுத்துகின்றன. பெரிய டவுன்ஷிப் திட்டங்கள் ஒரகடம், படப்பை, ஸ்ரீபெரும்புதூர் ஆகிய பகுதிகளில் நிறைவேற்றப்பட்டுள்ளன. இன்னும் பல திட்டங்கள் புதிதாகத் தொடங்கப்படவிருக்கின்றன. இந்தப் பகுதியில் பணியாற்றுபவர்கள் மட்டுமல்லாது சென்னை நகருக்குள் பணியாற்றுபவர்களுக்கும் இந்தப் பகுதி ஏற்றதாக இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. அதுபோல் குறைந்த விலை வீடுகள் சென்னைப் புறநகர்ப் பகுதிகளில் இங்குதான் அதிகமாக உருவாக்கப்படுகின்றன. ரூ. 15 லட்சத்துக்கு இங்கு ஒரு படுக்கையறை வீடுகள் விற்பனைக்குக் கிடைக்கின்றன.

குறைந்த விலை வீடுகளின் தேவை மேலும் அதிகரித்துக்கொண்டே இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. தென் சென்னைக்கு அடுத்தபடியாக ரியல் எஸ்டேட் வளர்ச்சியில் இருக்கும் மேற்கு சென்னை பகுதி, விரைவில் தென் சென்னையையும் மிஞ்சும் என ரியல் எஸ்டேட் துறை நிபுணர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

- வர்தா

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x